Home » படித்ததில் பிடித்தது » மன இறுக்கத்தை தவிர்க்க!!!
மன இறுக்கத்தை தவிர்க்க!!!

மன இறுக்கத்தை தவிர்க்க!!!

மன இறுக்கத்தை தவிர்க்க 10 எளிய வழிகள்…..

1.சத்தான உணவைச் சாப்பிடுங்கள்:

கவனியுங்கள்… ருசியான உணவு என்று சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவுவகைகளைச் சாப்பிடும்போது மூளை எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது. பதப்படுத்தப்பட்ட, டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில் நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்:

நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம்
செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே Refresh அடைகின்றன. தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச் செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக் குறைவு நிச்சயம். இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத் தூக்கம் அவசியம்.

3. நடங்கள்! ஓடுங்கள்!:

தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம் (Jogging) செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது கை கால்கள் வீசி விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும். மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று பாருங்கள். 40வயதுக்காரர் 20வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்:

பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து, சற்று நிறுத்தி, மெல்ல விடுங்கள். கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஆக்ஸிஜன் செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணிநேரக் கடின வேலைக்கு ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்:

மனம் விட்டு சிரியுங்கள். “மனம் விட்டு” என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.
சிரிக்கும்போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது.
சிரிக்கும்போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும். வேறு
ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும்போது வேறு
விளைவுகளை ஏற்படுத்தும். எப்பொழுதும் சிரித்து இன்முகம் காட்டுபவர்
முகத்தில் ஒருவித தேஜஸ் இருக்கும். அது மற்றவர்களை உங்கள்பால்
கவர்ந்திழுக்கும்.

6. மனம்விட்டுப் பேசுங்கள்:

மனம் விட்டுப்பேசுங்கள், உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும்.
எல்லோரிடமும், எல்லா நேரமும், தெரிந்த எல்லாவற்றையும்
பேசிக்கொண்டிருக்காதீர்கள். யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி
கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும்
வார்த்தைகள் உங்கள் மனதிற்குத் தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்:

இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்:

எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன்
செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் செய்யும் வேலையை மட்டும் காதலியுங்கள், நிறுவனத்தை அல்ல. நிறுவனம் உங்களைத் தூக்கிவிடும் அல்லது கவிழ்த்திவிடும், ஆனால் ஈடுபாட்டுடன் காட்டிய வேலை திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.

9. விளையாடுங்கள்:

உங்கள் நேர நிர்வாக அட்டவணையில் விளையாட்டிற்கும் இடம் துக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்:

உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக்
கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பாராமல். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பிவரும். ஆனால் அதை எதிர்பார்க்காதீர்கள்.
இவற்றை மட்டும் தினமும் கடைப்பிடியுங்கள்… உங்கள் வாழ்க்கையில்
ஏற்படும் புதிய திருப்பத்தைக் காணுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top