குளிர் இன்னும் வெடவெடத்தது. இருளைக்கூட சகித்துக் கொள்ளலாம். கண்ணாமூச்சி காட்டுகிற நிழல் மரண பயத்தை உண்டாக்கியது. தூரத்தில் சாரைப்பாம்பின் ஸ் ஸ் சத்தமும், அதைத் தொடர்ந்து பறவைகள் கீச்சொலியுடன் சிறகடிக்கிற சத்தமும்..தியாகு நண்பர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் கண் மூடிய நிலையிலேயே கை பிடித்து அழைத்து வந்து சமவெளியின் மையத்தில் உட்கார வைத்தான்.. அவனுக்கும் சித்தப்பிரமை பிடித்து விடுமோவென்று பயமாக இருந்தது.
நண்பர்களுக்கு திகில் விலகவில்லை. தியாகு அவர்களை ஆசுவாசப்படுத்தினான்.
‘‘தியாகு, ரொம்ப நன்றிடா. இங்கதான இருக்க? நீ மாத்திரம் தடுக்கலேன்னா நாங்க செத்திருப்போம். ’’
கண்களை மூடியபடி அரற்றிய நண்பர்களைப் பார்க்க தியாகுவுக்கு பரிதாபமாக இருந்தது. அவர்கள் எதிரில் நின்றபடி அவர்களையே கவனித்துக் கொண்டிருந்தான்.
அவர்களைப் போலவே அவனுக்கும் நிறைய விஷயங்கள் விளங்கவில்லை.
கண்டாத்ரி கோயில் எங்கே?
தன் நண்பர்கள் இப்படி நடந்து கொள்ள என்ன காரணம்?
ஏதோ ஒன்று இவர்கள் மூளையைத் தூண்டி பயங்கரமான மாயத் தோற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதை நிஜமென்று நம்பி இவர்கள் சாக இருந்தார்கள்! என்ன அது?
தனக்கு மட்டும் ஏன் எதுவும் தென்படவில்லை?
‘‘ஆமா, அந்த நெடி இப்போ காணோமே? ’’- விவேக்தான் முதலில் சொன்னான்.
‘‘கால் எரியுதுடா’’
திடீர்னு விஷவாயு எதுனா வருமா?
தியாகுவுக்கு பொறி தட்டியது.
தியாகு தரையின் சருகுகளை காலால் விலக்கி மண்ணை ஆராய்ந்தான். என்ன இது? வெள்ளை வெள்ளையாக காக்கைப்பொன் போல…
ரசாயணக் கம்பெனியில் பணி புரியும் அவனுக்கு அதைக் கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை.
பாஸ்வரம்!
இயற்கையாக அந்த மண்ணில் கலந்திருக்கிற வெள்ளை பாஸ்வரம்!
வெள்ளை பாஸ்வரம் மூளையைத் தூண்டாது. ஆனால் கால் எரிச்சலை உண்டாக்கும்.
அதற்குள் அவன் நண்பர்கள் ஒரு விபரீத விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்! கண்களைத் திறப்பதும், ‘‘வீல்’’ என்று கத்துவதும், பார்த்த பிம்பத்தை வர்ணிப்பதுமாக ஆரம்பித்திருந்தனர். தியாகுவுக்கு இதைச் சமாளிப்பது தலைக் குடைச்சலாக இருந்தது! இடையிடையே பரமேஸ்வரனைப் பற்றிய கவலை வேறு.
தியாகுவை ஆச்சரியப்பட வைக்கிற விஷயமும் ஒன்று நடந்தது!
தொடரும்…