மதுரையிலிருந்து புறப்பட்ட தனியார் மினி பஸ் கண் மூடித்தனமாக பெரியகுளத்தை தாண்டி கம்பம் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் டிரைவரைச் சேர்க்காமல் மொத்தம் ஒன்பது பேர். அனைவருமே ‘மை க்ளீன்’ ரசாயணக் கம்பெனியில் சமீபத்தில் வேலைக்கு சேர்ந்தவர்கள். பரமேஸ்வரன், துரைராஜ், விவேக், ஜெகன், பழனி, வேலாயுதம், தியாகு, சரவணன் மற்றும் ராகவன். எல்லோருக்கும் வயது முப்பதிலிருந்து முப்பத்தைந்துக்குள்; யாருக்கும் மணமாகவில்லை.
பஸ் முழுக்க பேச்சும் கூத்துமாக வழிந்தது. தியாகு மட்டும் டல்.அவனுக்கு மூக்கில் கட்டி; கூட ஜலதோஷம்; நாக்கு ருசிக்கவில்லை; மூக்கடைப்பு-மணம் புரிபட வில்லை.
பரமேஸ்வரன் சொல்லிக் கொண்டிருந்தான்- ‘‘கம்பத்துல ரெஸ்ட்எடுத்துட்டு நேரா சுருளி தீர்த்தம் போறோண்டா..’’
‘‘டேய், சுருளி தீர்த்தம் வேணாண்டா; தேக்கடி போயிட்டு மூணார் போயிடலாண்டா’’- ராகவன்.
‘’போடாங்….நான் சுருளி தீர்த்தம் போயே ஆகணும். செத்துப் போயிட்டா கூட ஆவியா மாறியாவது சுருளி தீர்த்தம் போகணும்’’- பரமேஸ்வரன்.
‘‘அப்படி என்ன ஈடுபாடு அங்கனக்குள்ள?’’- சரவணன்.
‘‘எங்கப்பா தொல்பொருள் ஆராய்ச்சியாளர், தெரியுமில்லே, சுருளி தீர்த்தம் பக்கத்துல மலைப் பிரதேசத்துல கண்டாத்ரி கோயில்னு ஒரு கோயிலை தேடி அலைஞ்சார். அந்த கோயில கண்ணால பார்த்தவங்க அடுத்த நாள் சூரியோதயத்தை பார்க்க முடியாதாம்; செத்துப் போயிடுவாங்களாம். ஆயுசு முடிஞ்ச ஆத்மாக்கள்தான் அதைப் பார்க்க முடியும்னு இன்னொரு கதை. இன்னும் என்னென்னவோ கதைங்க. கேட்டு கேட்டு அந்த கோயில பார்க்கணும்னு ஆசைடா. இந்த கட்டுக்கதைங்களத் தாண்டி அந்த கோயில்ல ஏதாவது புதையல் இருக்கலாம்னு அப்பா சொன்னார். நாமதான் ஒம்பது சூரப்புலிகள் இருக்கோமே, எட்டு திசையும் தேடி கலக்கிட மாட்டோம்? ’’ ஆர்வம் பொங்க பரமேஸ்வரன் கூறவும் மற்றவர்களும் ஆர்வமாயினர்.
‘‘கண்டாத்ரிங்கறது யாரு?’’
‘‘பழங்குடி மக்களோட தெய்வம். சூரிய பகவானுக்கும் நிழல் தேவதைக்கும் பிறந்த மகளாம். பழங்குடி மக்களை அவங்க பகைவர்கள் துரத்தும்போது அவங்கள எப்படியாவது கண்டாத்ரி கோயிலுக்கு கூட்டிட்டு வந்துட்டா போதுமாம். எவ்வளவு பெரிய படையானாலும் அடுத்த நாள் பிணமாக் கிடப்பாங்களாம். அப்படித்தான் பிரிட்டிஷ் படையாளுங்க சில பேர் அந்தப் பழங்குடி இனத்துப் பொண்ணுங்கள துரத்திட்டுப் போயிருக்காங்க. அந்தப் பொண்ணுங்க போக்குக் காட்டி அவுங்கள கண்டாத்ரி கோயில் கிட்ட விட்ருக்காங்க. அவ்வளவுதான். அத்தனை பேரும் அவுட். உயிரை கைல பிடிச்சிகிட்டு ஒரு சிப்பாய் அந்தக் கோயிலை வரைஞ்சி வச்சிருந்தான். இப்படித்தான் இது எங்கப்பாவோட ஆராய்ச்சிக்கு வந்தது.’’
‘‘உங்கப்பா என்ன கண்டுபிடிச்சார்?’’
‘‘எவ்வளவோ முயற்சி பண்ணியும் அந்தக் கோயிலை கண்டு பிடிக்க முடியலையாம். காலப்போக்கில் பழங்குடி மக்களே அந்தக் கோயிலை அழிச்சிருக்கலாம்னு இன்னொரு கதை.’’
இப்படியாகப் பேச்சு கண்டாத்ரி கோயிலை சுற்றி வந்தது.
பின்னிரவு நேரமானதால் அனைவரும் தூங்கி விட்டனர்.
தொடரும்…