நேர்முகத் தேர்வை திருப்திகரமாக முடித்தேன். அறை எண் ஏழில் டாக்டர் ஹென்றி என்பவரை பார்க்கப் பணித்தார்கள். பெரிய சைஸ் ஆப்பிளை நினைவூட்டும் முகத்துடன் டாக்டர் ஹென்றி.
டாக்டர் ரங்கபாஷ்யத்துக்கு கொடுத்த வாக்குறுதிப்படி செய்தேன். டாக்டர் ஜான் லீவர்ட், கல்லீரல் புற்று நோய், இரண்டு வாரக் கெடு, இத்யாதி எல்லாவற்றையும் சொன்னேன். காப்சூல் கவரை காட்டினேன்.
‘‘ஜனவரி பதினேழா?’’ டாக்டர் ஹென்றி புருவம் உயர்த்தினார். ‘‘உங்கள் கேஸ் சம்மரி, ரிபோர்ட்ஸ் அடங்கிய ஃபைல் எங்கே? முக்கியமாக பயாப்சி ரிபோர்ட்? ஏனெனில் கல்லீரல் கான்சர் கண்ணாமூச்சி காட்டும். கல்லீரலும் அற்புதங்கள் செய்யும்.’’
‘‘எதுவும் என் கைகளுக்கு கிடைக்கவில்லை. ஏனெனில்… ’’
டாக்டர் ஹென்றி இடைமறித்தார்.
‘‘நான் அறிவேன், மறுநாள் நடந்த சோக சம்பவம்… ’’
இவரும் அப்பாவைப் போலவே டாக்டர் ஜான் லீவர்ட்டின் மரியா மருத்துவ மனையை தொடர்பு கொண்டு என் வருகையை உறுதிப் படுத்தினார்.
ஒரு லேடி டாக்டரை வைத்து ஸ்கேன் மற்றும் சில ரத்த பரிசோதனைகளை செய்தார். எல்லா பரிசோதனை முடிவுகளையும் சீட்டுக் கட்டுகளாக பலமுறை அடுக்கியவர் காப்சூல் கவரை கவனமாகப் பார்த்து விட்டு கேட்டார்,
‘‘மிஸ் சௌதாமினி, இந்த புது மருந்து லிவர் கான்சரை தாமதப்படுத்துகிற சரியான மருந்துதான். நீங்கள் இந்த காப்சூல்கள் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டீர்களா?’’
‘‘இல்லை சார். ஒரு பத்து பன்னெண்டு காப்சூல் வரை சாப்பிட்டிருப்பேன்.’’
‘‘என்னது? பின் இந்த ப்ளிஸ்டர் பாக் முழுக்க காலியாக இருக்கிறதே?’’
‘‘ஒவ்வொன்றாக உரித்துக் கொடுக்க சிரமப்பட்டு, என் பாட்டி எல்லாவற்றையும் உரித்து எடுத்து டப்பியில் போட்டு விட்டார். அதிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து எனக்கு கொடுப்பார்.’’
‘‘ஓ! அந்த காப்சூல்கள் ஒன்றிரண்டை எனக்குத் தர முடியுமா?’’
கொடுத்தேன். பத்திரப்படுத்தினார்.
‘‘மிஸ் சௌதாமினி’’, பரிவோடு அழைத்தார். ‘‘நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். இந்த பயிற்சிக்கு ஒத்துக்கொள்ளுங்கள். உங்களால் பயிற்சியைத் தொடர முடியாமல் போனால் அந்த இடம் நிரப்பப் படாமல் இரண்டு வருடம் காலியாகவே இருக்கும். இல்லினாய் யூனிவர்சிட்டி தன் மதிப்புக்குரிய மெம்பருக்கு அளிக்கிற கௌரவமாக அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த பயிற்சிக்கு மனப்பூர்வமாக சம்மதிப்பதாக உங்கள் நண்பர் டாக்டர் ரங்கபாஷ்யத்துக்கு நீங்களே நாளை காலை நேரில் சென்று தெரியப்படுத்தி விடுங்கள்.’’
‘‘ஆனால் சார்’’,.. இழுத்தேன். ‘‘முதல் இரண்டு இடங்கள் இந்தியர்களுக்கு கிடைத்திருப்பது இதுவே முதன்முறை. அதை வீண்டிக்க வேண்டாமே என்று… ’’
டாக்டர் ஹென்றி சிரித்தார். நான் கொடுத்த கடிதத்தை சுக்கல் சுக்கலாக கிழித்தார். ‘‘தகுதி உடையவர்களுக்குத்தான் எதுவும் கிடைக்க வேண்டும். உங்கள் தந்தையை உள்ளே அனுப்புங்கள். நீங்கள் சிரமம் பாராது வெளியே காத்திருக்க வேண்டும், ப்ளீஸ் ’’
ஒரு மணி நேரம் கழித்து உள்ளே போன அப்பா வெளியே வந்தார். அதற்குள் எனக்கு அடையாள அட்டை தயாரிக்கிற வேலை நடந்து முடிந்தது. என்னை மானேஜருடன் வீட்டுக்கு அனுப்பி விட்டு அப்பா அவசரமாக எங்கோ சென்றார்.
தொடரும்…