அன்று வெள்ளிக் கிழமை.
ஆயிற்று! எல்லாம் முடிந்து விட்டது. அதாவது ஹோட்டலில் வேலையை முடித்து விட்டு கொஞ்சம் பழங்கள், ஹார்லிக்ஸ் எல்லாம் எடுத்துக்கொண்டு ஆரண்யா மேடத்தை பார்க்க பங்களாவுக்குப் புறப்பட்டேன்.
களைத்துப் படுத்திருந்த ஆரண்யா மேடம் என்னைப் பார்த்ததும் கனகம்மாளை வெளியே அனுப்பி கதவை லாக் செய்தார்.
“ மேடம் ” மெல்ல அழைத்தேன். “நவீனை நீங்க கொல்லல; அவன் செத்தது டிஎன்ஏ தெரபியால. அதுக்கு ஆதாரமே நீங்கதான். பன்னெண்டு எம்மெல் பாதரசத்தை நீங்க குடிச்சு இருபத்து நாலு மணி நேரமாச்சு. உங்க உயிர் போகல; நல்லா இருக்கீங்க!”
“அதான்.. எப்படி? ” ஆரண்யா மேடம் இரு கைகளை விரித்தார்.
“ ஒருவேளை இயற்கையா கிடைக்கிற பாதரசத்துக்கு உங்க கணக்கு சரியா இருக்கலாம். இது சுத்திகரிக்கப்பட்ட பாதரசம்..தொந்தரவு கொடுக்கும்; ஆளைக் கொல்லாது- அப்படிதான் நினைக்கிறேன். ”
ஆரண்யா மேடம் முகத்தில் குழப்பம் நீங்கி மெல்ல மெல்ல மலர்ச்சி தெரிந்தது.
“ அப்ப நவீனை நான் கொல்லலியா? ”
“ இல்லை மேடம்”
“ சூரி! ” அப்படியே என் கைகளை இழுத்து நெஞ்சில் வைத்து அழுத்திக் கொண்டார்.
நான் நாசுக்காக விடுவித்துக் கொண்டேன்.
“ கல்யாணத்துக்கு சம்மதம்தானே? ”
“ சரி”
தம் உடல் நிலையையும் பொருட்படுத்தாது கட்டிலிலிருந்து தொம்மென்று குதித்தார். நான் தடுக்கத் தடுக்க பரபரத்தார். “ கல்யாண வேலை தலைக்கு மேல கிடக்கு. நான் படுத்துக் கிடந்தா நடக்குமா? ”
நான் ஆரண்யா மேடத்தின் சந்தோஷப் பரபரப்பை உள்ளுக்குள் ரசித்தேன். பங்களாவை விட்டு வெளியே வந்தேன். பார்வதி குறுக்கே வந்து விலகி ஓடினாள். அட, மந்திரித்து விட்ட கோழி மாதிரியே ஓடுகிறாளே! திரும்பவும் என்னை ஒட்டினாற் போல் வந்து ஓடினாள்; மீண்டும் அப்படியே செய்ய…. சட்டென்று அவள் கையைப் பிடித்து விசையுடன் இழுத்து பாதியில் விட்டேன். மார்போடு மார்பு மோத ஏடாகூடமாய் விழுந்தவள், ஓடி விட்டாள். இனி கொஞ்ச நாள் குறுக்கே வர மாட்டாள்! அவள் முகத்தில் வெட்கத்தை விட ‘இந்த ஆள் இதெல்லாம் கூட செய்யுமா’ என்கிற பிரமிப்பு ஊடாடியதை கவனித்து உள்ளுக்குள் சிரித்தேன். ஒரு நாளும் இல்லாத திருநாளாய் என் நரம்புகளில் இன்னிசை!
பின் குறிப்பு
ஆரண்யா மேடத்தின் அறிவும் துல்லியமான திட்டமிடலும் சாதாரணமல்ல. மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் நேராமல் நவீனை மாத்திரம் குறி வைத்து வீழ்த்தியது அவன் கடைசியாகக் குடித்த அந்த பன்னிரெண்டு எம்எல் (ML) பாதரசம்தான்! இதைச் செய்து விட்டு அவர் நிம்மதியாக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை.
அன்று பார்வதியைப் பார்த்து பேசி விட்டு வந்தேன். அன்றுதான் சாட் பத்திரிக்கையில் ஜூவாலா படத்தை பார்த்தேன். பொம்மையை ஆர்டர் பண்ணியது ஆரண்யா மேடம் என்று தெரிந்து கொண்டேன். ஆரண்யா மேடமும் நவீனும் டானிக் என்கிற புள்ளியில்தான் இணைகிறார்கள். பழைய நினைவை கசக்கி மூளையைப் பிழிந்ததில் என்ன நடந்திருக்கும் என்று முன்னரே யூகிக்க முடிந்தது.
ஆரண்யா மேடம் குற்ற உணர்ச்சியில் நவீனைக் கொன்ற வழியில்தான் தன் உயிரை மாய்த்துக் கொள்வார் என்று எதிர்பார்த்தேன். அந்த ஐம்பத்தி மூன்று நாள் ஆயுள் நீட்டிப்பு மகள்
கல்யாணத்துக்காக. !
அதற்கு ஏற்றாற் போல் கொரியர் சர்வீஸ் பையன் இரண்டு டானிக் பாட்டில்களோடு பங்களாவுக்கு வழி கேட்டான். நவீன் இறந்த பிறகு நவீன் டானிக் பங்களாவில் எதற்கு?
ஒரு முக்கியமான ஃபைல் வேண்டுமென்று ஆரண்யா மேடம் உறங்கிக் கொண்டிருந்த மதிய நேரம் அவர் அறைக்குச் சென்றேன். கனகம்மாள் என்னையே எடுத்துக் கொள்ளச் சொன்னாள். ஃபைலோடு பாதரச டானிக்கையும் சேர்த்தெடுத்தேன். நான் நினைத்தாற் போல் வாயளவு தளும்பி இருந்தது டானிக்.
என் அறைக்கு வந்தேன். டானிக்கை பீக்கரில் ஊற்றினேன். பன்னிரெண்டு எம்மெல் பாதரசத்தை தனியாக எடுத்து டாய்லெட்டில் கொட்டினேன். நான் கொண்டு வந்திருந்த மைதா பிசினை பாட்டிலில் போட்டேன். அதுதான் பாதரசம் போல் பளபளப்பாக, கட்டியாக சுவையற்றிருக்கும். டானிக்கை ஊற்றி, ஃபைலையும் பாட்டிலையும் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டேன்.
பன்னிரெண்டு எம்மெல் மைதா பிசினை சாப்பிட்டாலும் வாந்தி பேதியாகும்! மைதா பிசின் ஆரண்யா மேடத்தின் உயிரைக் கொல்வதற்கு பதில் அவரின் குற்ற உணர்ச்சியைப் போக்கி விட்டது!
பெண்மை வலியது! அது நிலைமையை சீராக்கும்; காப்பாற்ற முனையும். காப்பாற்றும் நோக்கில் களையெடுக்கும்! அது காலாகாலத்துக்கு வாழட்டுமே!
என்ன இருந்தாலும் நானும் ஒரு தாய்க்கு மகன்தானே!
முற்றும்.