அன்று ஞாயிற்றுக் கிழமை.
இந்த பலீனா எப்படிபட்டவர்? முதன் முதலாக என் நெற்றி சுருங்கியது. நவீன் மேல் இவருக்கு என்ன கோபம்? ஒரு வேளை… ஒரு வேளை இவர்தான் ஜூவாலாவின் அக்கா அன்னிகாவா?
நெற்றியை தேய்த்துக் கொண்டேன். அன்னிகாவுக்கு இன்றைக்கெல்லாம் வைத்துக் கணக்கிட்டாலும் வயது இருபதுக்கு மேல் போகாது. பலீனாவுக்கு என் வயது. இது உடற்கட்டிலும் மூட்டு அசையும் விதத்திலும் மனமுதிர்ச்சியிலும் தெரிகிறது…
நவீனால் பாதிக்கப்பட்ட பெண் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக் கொண்டு வந்திருக்கிறாளா? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டாக்டரேட் படிக்கிற அளவு மனவமைதி இருக்குமா?
பலீனா…. ஜூவாலாவின் தாயா? ஜூவாலாவுக்குத் தாய் என்றால் அன்னிகாவுக்கும் தாய்தானே? முப்பது வயதுப் பெண்ணுக்கு இருபது வயது மகள் சாத்தியமில்லையே? சகோதரிகள் என்றாலும் இருவருக்கும் வேறு வேறு தாயோ? தகப்பன் ஒருவனோ? உறவுமுறை வெளியில் சொல்லத் தகாததோ?……
இவர் நவீனின் தொழில்முறை எதிரி ஜோசப்பின் கையாளோ? ஜோசப்புக்கு எங்கள் ஹோட்டல் வயரிங் தெரிய வாய்ப்பில்லையே? ஹோட்டல் சம்பந்தப்பட்ட எல்லா டாகுமெண்ட்டும் பத்திரமாக இருக்கிறதே?
ஹோட்டலில் என் கஸ்டடியில் உள்ள டாகுமெண்ட்டுகள் போலியானவை. அவற்றை வைத்துக் கொண்டு சதித்திட்டம் தீட்டினால் தீட்டினவருக்கு ஆப்பு கிடைக்கும். ஒரிஜினல் பத்திரங்கள் என் பாங்க் லாக்கரில் பத்திரமாக இருக்கிறன. இது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இவர் புதியவராயிற்றே? இவரும் பார்வதியும் சேர்ந்து கூட்டுசதி பண்ணுகிறார்களா? பார்வதியை இவர் எங்கு, எப்படி சந்திப்பார்?
பார்வதியின் தினசரிப் பழக்கம் நான் அறியாதது. இன்னும் சொல்லப் போனால் என் முதலாளிக்கே அவர் புதிர்தான். எங்கிருந்தோ சமையல் கிளாசுக்கு மாலை ஐந்து மணிக்கு வருவார்; கிளாஸ் முடிந்ததும் எங்கோ போய் விடுவார். தாயாரைப் போலவே வீடு தங்காத உடம்பு அது!
பலீனா அவருக்கு நேர் எதிர். ஹோட்டலை விட்டு எங்கேயும் போக மாட்டார். மாலையில் துர்க்கையம்மன் கோயிலுக்குப் போய் தியானம் செய்வாராம். ஒரு செல் ஃபோன் கூட வைத்துக் கொண்டதில்லை. ஒருவேளை கோயிலில் சந்திக்கிறார்களோ?
அந்த துர்க்கையம்மன் கோயில் எனக்கும் தெரியும். இவரைப் போலவே நிறைய வெளிநாட்டினர் வந்து மணிக்கணக்காய் தியானம் செய்து கொண்டிருப்பர். கோயில் பூசாரிக்கு பலீனாவைத் தெரிய நியாயமில்லை. பார்வதியைத் தெரியுமே!
காரை எடுத்துக் கொண்டு கோயிலுக்கு ஓடினேன். பார்வதி கோயிலுக்கு வந்து மாதக் கணக்காகிறதாம்! நெற்றியை அழுத்திக் கொண்டேன். பார்வதிக்கும் பலீனாவுக்கும் பாலமாக, இருவருக்கும் தெரிந்த பொது நபர் ஒருவர் உண்டென்றால் – அது நான்தான்! எப்படி சந்தேகப்பட்டாலும் சுற்றி சுற்றி என் தலையில் விடிகிறதே!
சில விஷயங்கள் தெரிகின்றன. பலீனாவுக்கு நவீன் மேல் வெறுப்பு இருக்கிறது. பலீனா-பார்வதி ஏதோ தொடர்பு இருக்கிறது! மோட்டார் ரூமில் அன்று தென்பட்டது பலீனாதான்! ஷாட் சர்க்யூட் சதியில் பலீனாவுக்குப் பங்குண்டு! ஆனால் பலீனா மிதுன் பாண்டேவால் நியமிக்கப்பட்டவர் ஆயிற்றே? மிதுன் பாண்டே இவரது தகுதி, திறமையைப் பார்த்து நியமித்திருப்பார். கடந்த காலம், நட்பு வட்டம் எல்லாம் ஆராய அவரைப் போன்றவர்களுக்கு அவகாசம் இருந்திருக்காது. அது சரி, பழி வாங்கத் துடிப்பவர்கள் காக்கைக்கு சோறிட்டு ரசிப்பார்களா? பழி வாங்க வந்த மனம் வேறு திசையில் திரும்பி விட்டதா? என்னைப் பார்க்கும்போது அவர் முகத்தில் சட்டென்று ஒரு மலர்ச்சி தோன்றி சட்டென்று மறைவது போல் தோன்றும்.. அது நிஜமா? பிரமையா?
இருப்பினும் ஆதாரமில்லாமல் பாஸிடம் பலீனா மேடத்தைப் பற்றி பேச முடியுமா? அவர் மோட்டார் ரூமுக்குப் போகவே இல்லை என்று சொல்லியிருந்தால் பாஸிடம் போய் நின்று விடலாம். சாக்கு சொல்கிறார் எனில் சாக்கை சாக்கென்று நிரூபிப்பது எப்படி? ஏனெனில் பக்கத்துக்கு காட்டேஜ்காரர்கள் கொக்கிப் போட்டு மின்சாரத்தை எடுத்த சம்பவம் நடந்திருக்கிறதே? பலீனாவைப் பற்றி பேச்செடுத்தால் அது பார்வதியிடம் முடியுமே? பாஸிடம் அவர் மகளையே போட்டுக் கொடுக்க முடியுமா?
பெரிய இடத்தில் வேலை செய்வது எவ்வளவு கஷ்டம்…
நான் செய்ய முடிந்தது இதுதான். ஹோட்டலின் பாதுகாப்பை பலப்படுத்தினேன்.
முதலாளியிடம் ஃபோன் பண்ணி பொதுவாகப் பேசியபின் நவீனை நிழலாய்த் தொடர தனியார் செக்யூரிடியை ஏற்பாடு செய்தேன்- அதுவும் ரகசியமாக!
தொடரும்…