Home » படித்ததில் பிடித்தது » புத்தரின் போதனைகள்!!!
புத்தரின் போதனைகள்!!!

புத்தரின் போதனைகள்!!!

புத்தரின் போதனைகள் :

புத்த சமயக் கொள்கைகளைச் சுத்த பிதகம் கூறுகின்றது. மனத் துயரிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும், ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.

“நான்கு உயரிய உண்மைகளும்”, “எண் வகை வழிகளும்” பிறவி என்பது ஒருவரது செயலினால் ஏற்படும் பயன் என்ற கோட்பாடும் தத்துவ இயலுக்கு புத்தர் ஆற்றிய அரிய தொண்டாகும்.

நான்கு உண்மைகள் :

1. துன்பம் : இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை,நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

2. அதன் தோற்றம் : சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.

3. அதை ஒழித்தல் : ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.

4. அட்டசீலம் : (எண்வகை வழி) துன்பத்தை ஒழிக்கும் வழி இதுவேயாகும். எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம்.

நடுவு நிலை வழி, இடை வழி : புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல்,வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிவாரணமாகும்.

இடைவழி : ஆழ்ந்த அறிவு, விவேகம், புலமை,அமைதி, நிர்வாணம் ஆகியவற்றை அடையச் செய்கின்றன. இடைவழியில் எட்டு கொள்கைகள் உள்ளன. இதற்கு “அட்ட சீலம” அல்லது “எண் வகை வழிகள்” என்று பெயர்.

அட்டசீலம் அல்லது எண்வகை வழிகள் :

1. நல்ல நம்பிக்கை : நான்கு உண்மைகளில் நம்பிக்கைக் கொள்ளுதல்.

2. நல்லெண்ணம் : இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், சினத்தை அகற்றவும்,ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல்.

3. நல்வாய்மை அல்லது நல்லமொழி : பயனற்றதும்,கடுமையானதும் பொய்யானதுமான சொற்களை கூறாதிருத்தல்.

4. நற்செய்கை : பிறரை துன்புறுத்தாமலும் (அகிம்சை) களவாடாமலும் நன்னெறி தவறாமல் இருத்தல்.

5. நல்வாழ்க்கை : பிச்சை எடுத்து வாழ்தல்.

6. நன் முயற்சி : தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல்.

7. நற்சாட்சி : சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல்.

8. நல்ல தியானம் : லட்சியத்தை (குறிக்கோளை) அடைய மனம் ஒருவழிபட்டு சிந்தித்தல்.

சுருக்கமாகக் கூறினால், புத்தருடைய அறிவுரைகளில் நம்பிக்கையுடன் அவற்றை அறியவும், அதன்படி நடக்கவும் முயன்று ஒழுக்கம் தவறாத நடத்தையுடன் மனதை ஒருவழிபடுத்தி இறுதியான இன்பத்தை (வீடு,மோட்சம்) அடைய வேண்டுமென்பதாகும்.

அவரது காலக் கட்டத்தில் இந்திய தத்துவ இயலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கடவுள், ஆன்மா, மாறாத நிலையான உண்மை அல்லது வஸ்து போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்த முற்றிலும் மாற்றான கருத்துகளை முதன் முதலில் பறை சாற்றியவர் புத்தர் என்றால் அது மிகையாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top