அன்று செவ்வாய்க் கிழமை.
மாலை ஐந்து மணி. பங்களாவின் சமையலறையில் பார்வதிக்கு ‘ஸ்ட்ப்டு எக்‘ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து விட்டு அதற்குப் பதிலாக சோயா உருண்டை, சிக்கன் அல்லது காளான் அடைத்து மைதா பிசினால் முட்டையை ஒட்டி வேக வைப்பது. கொழுப்பற்ற புரத உணவு. அவளை தனியே செய்யச் சொல்லிவிட்டு டைனில் ஹால் பக்கம் வந்தேன். அப்படியே கையை கட்டிக் கொண்டு கோழித்தூக்கம் போட்டபோது…
“வீல்” என்ற பார்வதியின் அலறலும், தீய்கிற நாற்றமும்…
ஓடினேன்.
சமையலறையில் தீ! பார்வதியின் துப்பட்டாவிலும்!
அவள் துப்பட்டாவை பிடுங்கி தூர எறிந்தேன். சுரிதாரை கிழித்துக் கொண்டு வந்தது அது. தீயணைக்கும் கருவியை எடுத்து தீயை அணைத்தேன். பார்வதி கைப்பையிலிருந்து டெஸ்டர் எடுத்து அறையின் மின்சாரத்தை முடக்கினாள். புத்திசாலிப் பெண்தான். இந்தப் பெண்ணுக்கு வயரிங்கில் ஆர்வமுண்டோ?
“பார்வதி! எப்படி பிடிச்சது தீ?” அவளைப் பார்த்து கேட்டவன் சட்டென திரும்பிக் கொண்டேன். கழுத்துக்கு கீழ் பெரிய கிழிசல்.
அவள் ஓடி விட்டாள். பரபரப்புடன் பணியாளர்கள் வந்து சுத்தம் செய்தனர்.
ரிசப்சனில் காத்திருந்தபோது அவள் வந்தாள், வேறு உடையில்.
“தீக்குச்சியால காஸ் ஸ்டவ்வ பத்த வச்சேன். விரல் சுட்டுடுச்சு. தீக்குச்சிய உதறினேன், துப்பட்டாவுல பட்டுடுச்சு; துப்பட்டாவ உதறினேன், பேப்பர் பிளேட்ல பட்டுடுச்சு; பேப்பர் பிளேட்ட உதறினேன், எண்ணெய் கேன்ல பட்டுடுச்சு… ” தலை குனிந்து சொன்னாள் பார்வதி.
“எண்ணெய் கேன என் தலை மேல உதறியிருக்கலாமே?”
பார்வதி என் தலையை குறுகுறுவென்று பார்த்தாள். அவள் தந்தையைப் போல் சட்டென்று சிரித்து சட்டென்று நிறுத்தினாள். அப்பாடா! இப்போதுதான் இவள் முதன் முதலாகச் சிரிக்கிறாள்.
அன்றிரவு நான் பங்களா ஆபிஸ் ரூமிலேயே தங்கி விட்டேன். ஒரு கேடரிங் இன்ஸ்டிடியூட்டுக்கு ரெசூம் அனுப்ப வேண்டியிருந்தது. அதை சீல் வைத்த கவரில் கேட்டிருந்தார்கள். அரக்கும் மெழுகுவர்த்தியும் என்னிடம் இருக்க, லைட்டர் வேலை செய்யவில்லை. தீப்பெட்டி தேடி சமையலறை வந்தேன். தீப்பெட்டி அங்கே இல்லை. ஒரு லைட்டருக்கு நாலு லைட்டர் இருக்கிற கிச்சனில் தீப்பெட்டி தேவையும் இல்லை. வாட்ச் மேனிடம் தீப்பெட்டி வாங்கி வேலையை முடித்தேன்.
படுக்கையை தட்டித் தூங்கினேன்.
ஏதோ உறுத்தல்….
பார்வதியின் கிழிந்த சுரிதாரா?… இல்லை, இரவு ஹோட்டலுக்கு கும்பலாக வரும் பெரிய இடத்துப் பெண்கள், மேலே கையகல உள்ளாடையும் பாண்ட்டும் மட்டும் அணிந்து வருவார்கள். அவர்களை நல்லபடி நடத்தி, உபசரித்து அனுப்புகிற பிஆர்ஓ நான். தீப்பற்றிய சூழ்நிலையில் ஒரு பெண்ணை தவறாகப் பார்க்க மாட்டேன்.
“தீக்குச்சி கிழிச்சேன், விரல் சுட்டுடுச்சு… ”
எழுந்து உட்கார்ந்து கொண்டேன். உறுத்தல் சுரிதார் இல்லை. தீப்பெட்டி இல்லாத கிச்சனில் தீக்குச்சி வந்ததுதான் உறுத்தல்..
எதை எரித்தாள் இவள்? ஏன் பொய் சொன்னாள்?
மறுபடி சமையலறைக்குப் போனேன். குப்பைக் கூடையை ஆராய்ந்தேன்.
அவசர கதியில் அரைகுறையாய் எரிக்கப்பட்ட ஒரு காகிதம்.. போட்டோ என்பது பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது.
என்னிடம் அகச்சிவப்பு கதிர் உமிழும் டார்ச் இருந்தது. போட்டோ மேல் அடித்துப் பார்த்தேன். தாய்லாந்து பிக்னிக் ஸ்பாட் பின்னணியில் மூன்று உருவங்கள். முகம் தெரியவில்லை. போட்டோவைத் திருப்பினேன். உருவங்களை அடையாளப் படுத்தும் விதமாக ஜூவாலா, அன்னிகா, பார்வதி என்ற பெயர்கள். ‘பழி வாங்காமல் விட மாட்டேன்‘ என்ற எழுத்துக்கள். ‘பழி‘ என்ற வார்த்தை எரிந்திருக்கவில்லை. என் டார்ச்சில் பச்சையாக ஒளிர்ந்தன அந்த வார்த்தைகள். ரத்தத்தால் எழுதப்பட்ட பார்வதியின் கையெழுத்து!
ஜூவாலா..இந்தப் பெயர் மூன்று வருடத்துக்கு முன் ஊடகங்களில் அடிபட்ட பெயராயிற்றே! இவள் தாய்லாந்தின் பதின்மூன்று வயதுச் சிறுமி; பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலையுண்டாள். அதற்குப் பின்னணியில் இந்தியத் தொழிலதிபரின் மகன் என்ற ரீதியில் ‘த சாட்‘ பத்திரிக்கையில் வந்த செய்திகளை நினைவு படுத்திக் கொண்டேன். அன்னிகாவைப் பற்றி அதில் எந்த விபரமும் இல்லை.
அப்படியானால்…அப்படியானால்…
இந்த ஜூவாலா பார்வதிக்கு வேண்டியவளா? அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பழி வாங்கப் போகிறாளா? மூன்று வருடங்களுக்குப் பிறகும் பழி வாங்கும் உணர்ச்சி கொந்தளித்துக் கொண்டா இருக்கும்?
கடவுளே, அந்தத் தொழிலதிபர் மகன் நவீனாக இருக்கக் கூடாது.
ஒருவேளை நவீனாக இருந்தால்…?
நான் கண்ணை மூடி கற்பனை செய்து பார்த்தேன். சின்னப் பெண்ணை நாசமாக்கியவன் தான் தன் வருங்காலக் கணவன் என்கிற நிலையில் ஒரு பெண் எப்படி இருப்பாள்?
பார்வதி இருக்கிற நிலையில்தான் இருப்பாள்!
பார்வதியின் உணர்ச்சிகள் எனக்குப் புரிகிறது. செயல்பாடுகள்?
பார்வதி பற்றிய நவீனின் செயல்பாடுகள் இயல்பாக இருந்தன. நவீனைப் பற்றிய பார்வதியின் செயல்பாடுகள் இயல்பாக இல்லையே? அவள் இதுவரை நவீனைப் பார்க்க வரவில்லை; ஏன், ஹோட்டல் திசைப் பக்கமே திரும்பவில்லை. பழி வாங்க விரும்பும் பெண் உள்ளத்தில் வஞ்சனையையும், உதட்டில் சிரிப்பையும் வைத்து கவிழ்ப்பாளே, இவள் ஏன் பதுங்குகிறாள்?
பார்வதியால் நவீனுக்கு ஆபத்தா? அல்லது பார்வதிக்கு நவீனால் ஆபத்தா?
அடுத்து என்ன நடக்கும்?
தொடரும்…