தனகிரி – தாமரைக்குளம்
அந்தரீஸ், நரேன், சுதர்சனா மூன்று பேரும் நின்றிருந்தனர். மேலே பொதி பொதியாய் மேகங்கள்; கீழே தண்ணென்று பூத்த தாமரைகள்…
“ என்ன மேடம், நீங்க பாட்டுக்கு புராணக் கதையில வர்ற மாதிரி நாதா, எனக்கு தாமரைப் பூக்களைப் பறித்துத் தருகிறீர்களான்னு கேட்டு இங்க கொண்டு வந்து நிறுத்திட்டீங்க! ” அந்தரீஸ் பேச்சை ஆரம்பித்தான்.
“படத்தைப் பாருங்க ! தாமரைப் பூக்களை கண்டு பிடிச்சுட்டோம்! முதலையை கண்டு பிடிக்கணும்! ” என்றாள் சுதர்சனா.
“ புரியலியே? ”
“ படத்திலிருக்கிற முதலைதான் சுரங்கம். அதோட வால் அதாவது வாசல் தாமரை குளத்து கிட்டத் தொடங்குது! ஒரு வழி சித்தர் குகையில முடியுது; இன்னொரு வழி பூதநாதர் கோயில்ல முடியுது! இடைப்பட்ட ஒரு இடத்துல அதாவது சித்தர் குகைக்கு கீழே திருமுடியான் சுவாமிகள் தங்கியிருந்திருக்கார். அவர் இருந்தார்னா ரசவாத ரகசியமும் இருந்திருக்கும்… அத விக்டர் மார்ஷல் லவட்டிகிட்டு தப்பிச்சு ஓடியிருக்கான்! ”
“ ஐயையோ! ” என்றான் அந்தரீஸ். அவன் சொல்லப் போவதை யூகித்தவனாய் சிரித்தான் நரேன்.
“சுதர்சனா நீ கொஞ்சம் அப்படி போ ! ”
“நான் போக மாட்டேன்; என்னை கிண்டல் பண்ணாரில்ல? ”
“சார், நான் மோசம் போயிட்டேன் ! பூதநாதர் கோயில் வேலூர் மாவட்டத்துல இருக்கு! பதினோரு செக் போஸ்டையும் தாண்டி…. ! ” அந்தரீஸ் புலம்பினான். “கடவுளே, இவங்க அனுமானம் தப்பா போகட்டும்!”
“ அனுமானம் சரியாயிட்டா மொட்டை போட்டுக்கணும் ! ” இருவரும் பாய்ந்தனர்.
தாமரைக் குளத்தை ஒட்டிய புதரில் தொக்கிக் கிடந்தது தங்கத்தண்டு. அந்தரீஸ்தான் பார்த்து எடுத்து வந்தான். போலி தங்கத்தண்டு! போலி என்று தெரிந்து விட்டதால் விக்டர் மார்ஷல் கடாசி விட்டுப் போயிருக்கிறான்.
கூடிய சீக்கிரம் சுரங்கத்தையும் கண்டு பிடித்தார்கள். ஒரு ஆள் வந்து விட்டுப் போன தடயம் தரையில் படிந்திருந்த தூசியில் காணப்பட்ட காலடித் தடத்தில் தெரிந்தது! முன்னேறிப் போனார்கள். திருமுடியான் சுவாமிகள் அறையில் கல் பாத்திரங்கள், ருத்ராட்சம், விபூதி, ஓலை நறுக்குகள் போன்ற பொருள்களோடு பூனைக் கவளம் எனப்பட்ட சின்ன மூலிகை உருண்டையும் விழுந்து கிடந்தது. ஓலைச்சுவடிகளும் மூலிகை உருண்டைகளும் எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது!
வெளியே வந்தார்கள்!
இதற்குள்ளாக அந்தரீஸ், சுதர்சனா, நரேன் மூவருக்கும் ஆழமான நட்பு தோன்றி பலப்பட்டது.
மொபைல் ஃபோனில் சிக்னல் கிடைத்தது.
ஏகப்பட்ட ஃபோன்கள்;
ஸ்வர்ணகிரியில் கழுமரத்தில் காய்ந்த பிணமாக விக்டரின் கூட்டாளிகளாம். ஒரு பிணத்தின் கையிலிருந்த மரப் பொம்மையை எம்எம்எஸ் அனுப்பியிருந்தனர். “ஐயையோ, இது நகோடா ” என்றாள் சுதர்சனா. “என்னது பகோடாவா? ” என்றான் அந்தரீஸ். சுதர்சனா விளக்கினாள். “சார், உங்க லாவண்யா பலே கில்லாடி” என்றாள் நரேனைப் பார்த்து. நரேன் குளமான கண்களை மறைக்க முயன்று தோற்றான்.
இலங்கையில் விக்டர் மார்ஷலை பார்த்ததாக இன்னொரு நம்பத் தகுந்த தகவல்!
இரண்டு நாட்களுக்கு முன்பு
விக்டர் மார்ஷல் காட்டுவாசிகளிடமிருந்து சுரங்கத்தைப் பற்றி தெரிந்து கொண்டான். எப்படியும் போலிஸ் தன்னைத் தொடர்ந்து வரும் என்பதை அறிந்தவன் காட்டுவாசிகளை உயிரோடு விட்டு வைத்தால் தனது நோக்கம் நிறைவேறாது என்பதால் அவர்களை பூண்டோடு அழித்தான்.
சுரங்கத்தைக் கண்டு பிடித்தான். சுரங்க அறைக்குள் ஓலைச் சுவடிகளும் மூலிகை கற்களும் கிடைத்தன. அங்கிருந்த ஒரு கல்வெட்டு அந்த சுரங்கம் அம்பல சித்தரின் சீடரான திருமுடியானால் வெட்டப்பட்டது என்று தெரிவித்தது. குருநாதரின் போதனையைத் தழுவி திருமுடியானும் ரசவாத ரகசியத்தை ஓலைச் சுவடியில் பதித்திருந்தான். குருநாதரை விட்டுப் பிரிந்த பிறகு அந்த சுரங்கத்தை விசாலப்படுத்தி அங்கேயே தங்கியிருந்தான். மூலிகை கற்களையும் அந்த இடத்தில் சேகரித்து வைத்திருந்தான். அதைத்தான் விக்டர் மார்ஷல் கைப்பற்றியிருந்தான்!
ஓலைச் சுவடிகளை எண்ணிணான். எட்டு இருந்தது! இன்னும் ஒன்று எங்கே?! அதையும் தேடி எடுத்துக் கொண்டான். திடீரென்று துணுக்குற்றான்! ஓலைச் சுவடிகள் ஒன்பது என்பது அவனுக்கு எப்படித் தெரிந்தது? ஏனோ அந்த விசாலமான சுரங்க அறையில் சொல்லவொண்ணா பரவசத்தை உணர்ந்தான் !
சட்டென்று சுரங்க அறை மறைந்தது ! கண்கள் மங்கின ! “உமைக்குப் பாதி உடலையும், அடியவர்க்கு முழுமையாகத் தன்னையும் அளித்த வள்ளல் மோன நிலையில் தனித்து அமர்ந்தபோது அம்மை என்ன ஆனாள்? ஞானாம்பிகையாக வெளிப்பட்டாள்……. ! ”
சம்பந்தா சம்பந்தம் இல்லாத காட்சிகள் !……எண்ணங்கள்……….. !
வேற்று நாட்டவன் குளிகையைத் திருடினால் விட்டு விடலாம்… குருநாதரையே திருடினால்….?!
விக்டர் அங்கிருந்த ஒரு ஓலைச்சுவடியை கையிலெடுத்தான்……..என்ன எழுதியிருக்கிறது??
“ நான் என்கிற அகங்காரம், எனது என்கிற மமங்காரம்.. இவற்றால் அலைக்கழிக்கப்படும் ஆன்மா உண்மை மறந்து மாயையால் மயங்குகிறது. உதாரணமாக சிறந்த குருநாதர் கிடைத்தும் “எனது குருநாதர்” என்கிற உடைமை உணர்ச்சி, அதனால் அவர் பிரியம் இன்னொருவர் மேல் செல்வதைத் தாங்கவொண்ணா பொறாமை, அதனாலேயே பாண்டித்தியம் பெறாமல் வித்தையின் பலனை அனுபவிக்கும் வெறி…. இப்படியே விகாரப்பட்டுப் போய் பல பிறவி எடுத்து துன்புறுகிறது; நெருப்பு தன் வெப்பத்தை வெளிப்படுத்துவது போல துன்புறும் ஆன்மா தன் துன்பத்தை வெளிப்படுத்தி பிற உயிர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகிறது… ”
“இதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் இன்னொரு தூய ஆன்மாவின் தயவு தேவை… ”
விக்டர் மார்ஷலின் முகம் உணர்ச்சிப் பிழம்பானது!
ஹூம்… யார் மேல் பொறாமைப்பட்டு நிலை குலைந்தேனோ அவர் காலில் விழாமல் எவ்விதம் கடைந்தேற முடியும்?
விக்டர் மார்ஷலால் கொல்லப்பட்டவர்கள் அவன் மனக்கண்முன் வந்தனர். அந்த பாம்பாட்டி பையன்.. நீரில் அமிழ அமிழ மூச்சுத் திணறி தசைகள் பலவீனமாகி இறந்தான். லாவண்யாவுக்குத் துணையாக வந்த கான்ஸ்டபிள்.. வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளப்பட்டு கூழானான்…. அவனுடைய ஒரு கையும் ஒரு காலும் ரயிலுக்கு அந்தப் பக்கம் சிதறியது.
அப்புறம் லாவண்யா… நினைத்தால் இப்போதும் நடுங்குகிறது! சிறுத்தையால் தசைகள் குதறப்பட்டு இறந்தாள்! நம்பிக்கையோடு அவனை உபசரித்த இருபத்தி ஒன்பது காட்டுவாசிகள்-அதில் மூன்று பேர் பெண்கள்… நீலம் பாய்ந்து நுரை தள்ளி செத்தார்கள்!
முதல் கொலை செய்தபோது உடல் நடுங்கியது; உள்ளமும் நடுங்கியது; அடுத்தடுத்த கொலைகள் ஏதோ வாழை மரத்தை வெட்டுவதைப் போல் எளிதாகி விட்டன. இது அபாய அறிகுறி ! !
விக்டர் மார்ஷலும் படித்தவன்தான். விஷயஞானம் உள்ளவன்தான்..அவனுக்குத் தெளிவாகத் தெரிகிறது- அவனுக்குள் இருக்கும் அவன் அவனையே பலி வாங்கி விடுவான் என்று!!
வேக வேகமாக தன் நெற்றி முடியை பாம்பு விரலால் நீவி சுருட்டிக் கொண்டான் !
இனி பின் வாங்க இயலாது !
திருவண்ணாமலை சித்தர்களின் பூமி ! இங்கு வினோத அனுபவங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததோ……………… !?
தொடரும்…