தங்கத் தண்டு – 12

தங்கத் தண்டு – 12

அன்று லாவண்யா காலை ஏழு மணிக்கே சித்தா கிளினிக் கிளம்பிக் கொண்டிருந்தாள். வழியில் கண்டமங்கலம் குளத்தருகில் போலிஸாரும் வேறு சிலரும் நின்றிருந்தனர். குளத்திலிருந்து ஒரு ஆண் சடலத்தை வெளியில் எடுத்தனர். அடடா, நரேன் மேல் பாம்பை ஏவி விட்ட சாக்கு வாலா! யாரோ அவனை குளத்தில் மூழ்கடித்துக் கொன்றிருக்கின்றனர். சாக்கு வாலாவின் மூடிய கையைப் பிரித்து எதையோ எடுத்தார் இன்ஸ்பெக்டர். ஒரு கைக்கடியாரம்! கைக்கடியாரத்தை பார்த்த மாத்திரத்தில் லாவண்யாவுக்குப் புரிந்தது- விக்டர் மார்ஷலின் வாட்ச்! இதன் பொருள், சாக்கு வாலா தவறுதலாகத் தன்னறையில் பாம்பை விட்டிருப்பான் என்று நினைத்து விக்டர் மார்ஷல் இவனைத் தேடி வந்து வேட்டையாடி இருக்கிறான், அட முட்டாள் கொடூரனே!

சூழ்நிலையை உத்தேசித்து லாவண்யா அங்கிருந்து உடனே புறப்பட்டாள். சொல்ல வேண்டியதை நரேனிடம் சொல்லி விடலாம்…

மாலையில் வீட்டுக்கு வந்தபோது லாவண்யாவின் தாயும் தந்தையும் ஏக சந்தோஷத்தில் இருந்தனர். அப்பாவுக்கு இலவசமாக ஃபாரின் விஸ்கியும் அம்மாவுக்குப் பட்டுப் புடவையும் இரண்டு சவரனில் ஒரு ஜோடி தங்க வளையலும் கிடைத்திருந்தது. “லாவண்யா, உனக்கு நல்ல நேரம்டி! உங்க பாஸ் உன்னை கல்யாணம் பண்ணிக்க பெண் கேட்டு வந்தார். நாங்க சரின்னு சொல்லிட்டோம். நீ வந்தவுடனே ஃபோன் பண்ணச் சொன்னார். கார் அனுப்பறாராம். ஏதோ ஹோட்டலுக்கு உன்னை வரச் சொன்னார்..”

மூச்சு விடாமல் பெற்றோர்கள் பேசியதைக் கேட்டு லாவண்யா மூச்சடைத்தாள்.

விலை போய் விட்டார்களே! என்னையும் விற்று விட்டார்களே!

“ ஐயோ! அம்மா! அவன் ஒரு கொலைகாரன்; அப்பா! நம்ம முருகேசனை குளத்துல முக்கி சாகடிச்சதே அவன்தான்! ”

லாவண்யாவின் கத்தலும் கதறலும் எடுபடவில்லை!

“இதப் பார் லாவண்யா! நீ திருடனோட பொண்ணு. உனக்கு கலெக்டர் மாப்பிள்ளையா வாய்க்கும்? ஏதோ மாட்டிக்காம தப்பு பண்ணோமா, பொழைப்பை ஓட்டுனோமான்னு வரன் அமைஞ்சாலே பெரிய விசயம்! வெள்ளைக்காரத் துரை ஆசைப்பட்டு கேக்குறாரு, ஒத்துக்குவியா? அந்தாளு உன் கையைப் பிடிச்சி இழுத்து காருக்குள்ள தூக்கிப் போட்டுட்டு போனா எங்களால என்ன செய்ய முடியும்? இந்த மட்டும் முறைப்படி வந்து பொண்ணு கேக்கறாரே; உன் நல்லதுக்குத்தான் சரின்னு சொன்னோம்… இப்ப கார் வந்துடும்… மாப்பிள்ளையைப் பார்த்து பேசிட்டு வா! ”

அப்பாவின் பேச்சு லாவண்யாவை அப்பளமாய் நொறுக்கியது! இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை! இவர்கள் கனவு காண்பது போல் மணக்கோலத்தை அவன் எனக்குத் தரப் போவதில்லை. ரசவாத ரகசியத்தைக் கறந்த அடுத்த நிமிடம் பிணக்கோலம் கிடைக்கப் போகிறது ! சாவைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. அவள் என். லாவண்யாவாக சாக வேண்டும்; உடலாலும், உள்ளத்தாலும்!

கல்யாண ஆசை காட்டி என்னை ஏமாற்றுகிறானா? ரசவாத ஆசை காட்டி அவனையும் அவன் கூட்டாளிகளையும் என்ன செய்கிறேன் பார்! அன்றைக்கு சாமியார் தாத்தாவுக்கு கம்மங்கூழ் கொண்டு போய்க் கொடுத்தாள். பாத்திரத்தை எடுத்து வர மறந்து விட்டாள். திரும்ப அங்கு போனபோது லாரல் குகையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள். குகைக்குள்ளே தாத்தா பிணமாய்க் கிடந்தார். பழுத்த பழத்தை பிணமாக்குபவன் வாழத் தகுந்தவனே அல்ல !

விக்டர் மார்ஷலும் அவன் கோஷ்டியினரும் ரசவாதம் பற்றி அறிந்து கொள்ள பகீரதப் பிரயத்தனம் செய்கின்றனர். அதே சமயம் அந்த ரகசியம் தங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க கூடாது என்பதிலும் குறியாய் இருக்கின்றனர். தப்பித் தவறி அந்த ரகசியம் யாருக்காவது தெரிந்திருந்தால் அவர்களை ஈவு இரக்கமின்றி கொன்று விடுகின்றனர்!

ஹோட்டலில் லாவண்யா தோள் மீது கை போட முயன்றான் விக்டர். பாம்பு விஷம் அவனை பாதித்திருந்ததால் அது சிரமமாக இருந்தது. லாவண்யாவும் நாசுக்காக விலக இடைவெளி விட்டு அமர்ந்தான். அவனுடைய மூன்று கூட்டாளிகள் வேறு டேபிளில் அமர்ந்திருந்தனர்.

லாவண்யா ஒன்றும் தெரியாதது போல் அவன் உடல் நிலையை விசாரித்தாள். விக்டர் தன் பலவீனத்தை மறைத்ததை ரசித்தாள். ஏதோ விளையாட்டு வீர்ர்கள் திருட்டுத்தனமாகப் போட்டுக் கொள்வார்களே, அதைப் போல் வீரியமிக்க ஊசியை அடிக்கடி போட்டுக் கொள்கிறான்; இன்றைக்குப் போட வில்லையோ என்னவோ, ரொம்ப பலவீனமாய்த் தெரிந்தான்….

“சார்,” லாவண்யா விஷயத்துக்கு வந்தாள். “ஸ்வர்ணகிரின்னு ஒரு மலை. சிகரம் ரொம்ப கூரா இருக்குமாம். அதுல நாலைஞ்சு குகையிருக்கு. அதுல ஒண்ணுலதான் ரசவாத ரகசியமிருக்கு. அது எந்த மலைன்னு பார்க்கணும். அதுக்கு ஜவ்வாது மலை தொடங்கி ஏலகிரி வரைக்கும் ஏரியல் வியூ வேணும்.”

“ஏற்பாடு பண்றேன்” என்றான் விக்டர்.

சந்திப்பு அத்தோடு முடிந்தது.

லாவண்யா போனதும் லாரல் கேட்டான், “ ஸ்வர்ணகிரியா? அன்றைக்கு வேற ஏதோ சின்னப் பேரா காதுல விழுந்ததே, ஸ்தனகிரின்னு ஞாபகம்! பட் ஐயம் நாட் ஷ்யூர்! ”

லாவண்யாவுக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஒவ்வொன்றாக கவனத்துடன் முடித்தாள். சில வேலைகளுக்குப் பயிற்சியெடுத்துக் கொண்டாள். விக்டர் மார்ஷலின் கண்ணில் படாமல் நரேன் வீடு போவதுதான் அவளுக்குப் பெரும் சிரமமாக இருந்தது. நரேன்- அந்தரீஸ் நட்பு லாவண்யாவுக்கு ஒரு ஆறுதலைக் கொடுத்தது. இனி நரேனை சந்திப்பது வேறு பிரசினைக்கு வழி வகுத்து விடும் என்பதால் நரேனைத் தவிர்த்தாள். அந்த சமயங்களில் லாவண்யாவின் மனம் படும் பாடு சொல்லி மாளாது.

அன்றிரவு விக்டர் மார்ஷல் நரேனை துப்பாக்கியால் சுட்டு விடுவதைப் போல ஒரு கனவு கண்டாள். தன்னை மறந்து நரேனின் கைபேசிக்கு அழைப்பு விடுத்து அவன் குரலைக் கேட்ட பிறகு நிம்மதியடைந்தாள். எதுவும் பேசாமல் கைபேசியை துண்டித்து விட்டு மணி பார்த்தால்.. மணி இரவு இரண்டு முப்பது!

லாவண்யா சில நாட்களாக கண்ணில் படாததை நரேனும் கவனித்திருந்தான்!

இதற்கிடையில் ஒரு முறை விக்டர் மார்ஷலும் அவன் சகாக்களும் லாவண்யாவை எதிரில் வைத்துக் கொண்டே ஃபிரஞ்சு மொழியில் உரையாடினர். லாவண்யா அசுவாரஸ்யமாக அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டாள்.

ஏரியல் வியூவைப் பார்த்த லாவண்யாவுக்கு மூச்சடைத்தது! ஸ்தனகிரியும் சுரமுனீசுரர் பள்ளத்தாக்கும் அச்சு அசல் படுத்துக் கிடக்கிற பெண்ணின் உடலமைப்பைப் போலவே திகழ்ந்தன! சாட்டிலைட் இல்லாத அக்காலத்தில் நம் முன்னோர்கள் எப்படி இதைக் கண்டுபிடித்தனர்? எப்பேர்பட்ட ரசனையில் சொல்லி வைத்தனர்?

அந்த இரண்டு மலைகளுக்கு இடையில் புறப்பட்டு நேரே சென்றால் சுரமுனீசுரர் பள்ளத்தாக்கை அடையலாம். நடந்து கொண்டிருக்கும் போதே காலடியில் சிலீரென்று தன் இருப்பை உணர்த்துகின்ற சுரமுனீசுரர் சுனை தென்படும். அதன் உற்பத்தி ஸ்தானத்துக்குச் சென்று தேடி அம்பல சித்தர் ஜீவ சமாதியான குகையைக் கண்டு பிடிக்க வேண்டும். ரசவாதம் பற்றிய அத்தனை விவரங்களும் அந்தக் குகையில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லியிருந்தார் தாத்தா. நிறைய பேர் தேடிப் போயிருக்கிறார்களாம்; யாராலும் குகையைக் கண்டு பிடிக்க முடியவில்லையாம். அம்பல சித்தரின் சீடர்களால்தான் அது முடியும் என்று ஒரு நம்பிக்கை!

ஸ்தனகிரிக்கு எதிர் திசையில் சுட்டினாள் லாவண்யா. “இதுதான் ஸ்வர்ணகிரி! இங்கேதான் போகணும்! கொடூரமான காட்டுவாசிகள் நிறைய பேர் இருப்பாங்க; இந்த மரப்பாச்சி பொம்மையை காட்டுங்க! உதவி செய்யலேன்னாலும் உயிரை எடுக்க மாட்டாங்க.. ”

விரற்கடை உயர மரப்பாச்சி பொம்மையை வாங்கிக் கொண்டான் விக்டர்.

“சார், ” அழைத்தாள் லாவண்யா. “ரசவாதம் விளையாட்டில்ல! எதுவும் நடக்கும்!! ”

ஸ்வர்ணகிரி

நடுநிசி நேரத்தில் லாரல், டேவிட், வார்னே மூவரும் ஒரு குகையை ஆராய்ந்து விட்டு உதட்டைப் பிதுக்கியபடி வெளியே வந்தனர். விக்டர் மார்ஷல் அவர்களுடன் வரவில்லை!

சோர்ந்து போய் நடந்த அவர்கள் மேல் உறுதியான கொடி விழுந்து இறுக்கியது. பத்துப் பதினைந்து காட்டு வாசிகள் நாட்டுத் துப்பாக்கிகள் சகிதம் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.

ஒரு பெரிய மைதானத்தில் நடு நாயகமாக அமர்ந்திருந்தான் தலைவன். சுற்றிலும் சின்னச் சின்ன குடிசைகள். பருத்த அடி மரங்களில் காவல் தெய்வங்களின் புடைப்புச் சிற்பம் காணப்பட்டது. அவற்றுக்கு குங்குமத் தீற்றலும், ரத்தாபிஷேகமும் நடந்திருந்தது. இந்தப் பக்க மொட்டை மரத்தில் பலவித ஆந்தைகள் பம்பரக் கண்களை உருட்டியபடி அமர்ந்திருந்தன. ஒரு பக்கம் காட்டுப்பன்றி தீய்ந்து கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் ஒற்றை மரத்தை போகப் போக கூராக சீவி வரிசையாக நிறுவப்பட்ட கழுமரங்கள்!

“நாங்கள் சுற்றுலாப் பயணிகள்; வழி தவறி வந்து விட்டோம்,” என்றான் லாரல்.

தலைவன் நல்ல மனநிலையில் இருந்தான். அவர்களை எச்சரித்து அனுப்பி விட உத்தேசித்திருந்தான்.

ஆனால் லாரல் அந்த மரப்பாச்சியை காட்டிய மறு விநாடி………..!

கண்கள் கோபாக்கினியை உமிழ அவர்கள் மூவரையும் கழுவிலேற்ற உத்தரவிட்டான்! முதலில் அவர்கள் ஆடை முதலிய உடைமைகள் எரிக்கப்பட்டன! பிறகு கழுமரத்தின் கூர்முனையில் கதறக் கதற அமர்த்தப்பட்டனர் அவர்கள். காலடி தாங்கிய பலகையை எடுத்த அடுத்த நிமிடம்…

கூர்முனை ஏறி உடம்பை இரண்டாகக் கிழித்து தாடை எலும்பில் குத்திட்டு நின்றது!!!!

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top