Home » பொது » படுக்கையை நனைப்பது குட்டீஸ்

படுக்கையை நனைப்பது குட்டீஸ்

படுக்கையை நனைப்பது குட்டீஸ் மட்டுமா? : பரம்பரையாகவும் தொடரும்
என்யுரிசிஸ் – படுக்கையை நனைக்கும் கோளாறுக்கு மருத்துவப் பெயர் இது. பெரும்பாலும், குழந்தைகள் தான் படுக்கையை நனைப்பதுண்டு. ஐந்து, ஆறு வயதில் தானாகவே இந்த பழக்கம் நின்று விடும்! அதற்கு பின், பத்து வயது வரை கூடசிலருக்கு படுக்கையை நனைக்கும் பழக்கம் நீடிக்கும். இன்னும் சிலருக்கோ, பெரியவனாக வளர்ந்த பின்பும் கூட, ஏன் திருமணம் ஆன பின்னும் கூட படுக்கையை நனைக்கும் பிரச்னை ஏற்படும்.இதற்கு நோய் பாதிப்பு மற்றும் மரபு வழி தான் காரணம். பரம்பரையாக இருந்தால், அந்த வம்சத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பத்து வயது வரை கூட படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படும்.
எத்தனை வகை? : படுக்கையை நனைப்பதில் இரு வகை உண்டு. ஒன்று, ஆரம்ப நிலை. இரண்டாவது, இடையில் ஏற்படும் கோளாறு. ஆரம்ப நிலை பாதிப்பு, பிறந்ததில் இருந்தே ஏற்படும். இரண்டாவது வகை பாதிப்பு, இரண்டு வயதில் கூட ஆரம் பிக்கும்; எப்போது நிற்கும் என்று சொல்ல முடியாது. வயதான பின், பெரும் பாலோருக்கு இந்த பாதிப்பு இல்லை. ஒரு சதவீதம் பேருக்கு , பரம்பரையாக தொடர்வதால் இந்த பிரச்னை இருக்கக்கூடும். சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய், உடல் ரீதியான மாறுபாடுகள் போன்றவற்றால் கூட வயதான பின் படுக்கையை நனைக்கும் கோளாறு ஏற்படும்.
அறிகுறி என்ன? : இதற்கு தனியாக அறிகுறி கிடையாது. படுக்கையை நனைப்பது ஆரம்பமானால் அது தான் அறிகுறி. சில குழந்தைகளுக்கு காலையில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும். இப்படிப்பட்ட குழந்தைகள் இரவில் எப்போதாவது தான் படுக்கையை நனைப்பர். அடிக்கடி ஜீரணம் ஆகாமல் மலச்சிக்கல் ஏற்படும் குழந்தைகளுக்கு இரவில் படுக்கையை நனைப்பது அடிக்கடி நேரும்.
எப்படி கண்டுபிடிப்பது? : அடிக்கடி படுக்கையை நனைப்பதற்கு காரணம், பரம்பரையாக தொடர்வதா, வேறு கோளாறினாலா? என்பது பற்றி டாக்டர் கண்டுபிடித்து விட முடியும். சிறுநீர் பரிசோதனை செய்தாலே, இது தெரிந்துவிடும்.  ஸ்கேன் எடுத்துப்பார்த்தால் சிறுநீரக பகுதி மற்றும் உடலியலில் மாறுபாடுகள் இருப்பது பற்றி கண்டுபிடிக்கலாம். இதில் எல்லாம் கண்டுபிடிக்க முடியாவிட்டால், “இன்ட்ராவெனிஸ் பைலோகிராபி’ என்ற விசேஷ எக்ஸ்ரே பரிசோதனையை செய்ய வேண்டும். சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தத்தை இது கண்டுபிடித்துவிடும். அதன் மூலம், கோளாறுக்கான காரணத்தை டாக்டர்களால் அறிய முடியும்.
சிகிச்சை என்ன? : குழந்தைப்பருவத்தில் படுக்கையை நனைப்பதெல்லாம் அதிகபட்சம் ஆறு வயதில் நின்றுவிடும். ஆனால்,வேறு கோளாறு காரணமாக ஏற்படும் இந்த பழக்கத்தை நிறுத்த சில நடைமுறைகளை தான் கடைபிடிக்க வேண்டும். குழந்தையின் குணத்தை அறிந்து, அதற்கு ஆறுதலாக பெற்றோர் இருந்தால் போகப்போக படுக்கையை நனைப்பது குறைந்து விடும். அதுபோல, குழந்தைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். படுக்கையை நனைக்காவிட்டால் பரிசு தருவதாக கூறலாம். இப்படி செய்யாமல், தண்டித்தால் குழந்தை நிலைமை இன்னும் மோசமாகும்; படுக்கையை நனைப்பது அதிகமாகும்.
தடுப்பு முறை என்ன? : மாலையில் இருந்தே திரவ உணவு அளிப்பதை நிறுத்த வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போது குழந்தைக்கு சிறுநீர் போவது குறையும். இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு அலாரம் வைத்துக் கொண்டு குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்தலாம். உணர்வு பூர்வமாக, தனிப்பட்ட காரணங்களால் கூட குழந்தைகள் இரவில் படுக்கையை நனைப்பது ஏற்படும். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கவுன்சிலிங்குக்கு அழைத்துச் செல்லலாம். படுக்கையை நனைப்பதை தடுக்க மருந்துகளும் உள்ளன. அவற்றை குழந்தைகளுக்கு டாக்டர் ஆலோசனைப்படி பெற்று வழங்கலாம்.
எச்சரிக்கை எங்கே? : படுக்கையை நனைப்பதை தடுப்பதற்காக மருந்துகளை வாங்கித் தருவதை கடைசி நிலையாக வைத்துக்கொள்ள வேண்டும். டாக்டர் ஆலோசனைப்படி இல்லாமல் அதை எடுத்துக்கொள்ளக்கூடாது. இப்போது ஸ்ப்ரே வகையிலும் மருந்துகள் வந்துவிட்டன. மூக்கில் ஸ்ப்ரே செய்வது போல இதை ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். ஆனால்,பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் உஷாராக இருக்க வேண்டும்.
பெரியவர்கள் எப்படி? : மனதில் பதட்டம், கவலை, சோர்வு போன்ற காரணங்களால், பெரியவர் கள் சிலருக்கு படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஆனால், அடிக்கடி இப்படி நேராது. சரியான நேரத்தில் எழுந்து சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கடைபிடிக்காதவர்களுக்கு இப்படி பிரச்னைகள் வரலாம். இது போன்ற சமயத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்வது நல்லது. டாக்டரிடம் காட்டி உரிய பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்; அலட்சியமாக இருக்கக்கூடாது.
“பேட்’ பயன்படுமா? : குழந்தைகளுக்கு இப்போது பல வகையில் “பேட்’ (சிறிய பொதி போன்றது)கள் வந்துள்ளன. இவற்றை பிஞ்சுக்குழந்தைகளுக்கு பயன் படுத்தலாம். பெரியவர்களுக்கும் கூட இப்படி “பேட்’கள் விற்கப் படுகின்றன. இவற்றை தொடர்ந்து பயன் படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதுவே பழக்கமாகி விடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top