Home » உடல் நலக் குறிப்புகள் » அறு சுவையும் நம் ஆரோக்யம்!!!
அறு சுவையும் நம் ஆரோக்யம்!!!

அறு சுவையும் நம் ஆரோக்யம்!!!

அறு சுவைகளும் நம் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல, நம் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட காரணமாக இருக்கின்றன. எனவேதான் ஆன்மிக சாதகர்களுக்கு நாவடக்கம் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது. அறு சுவைகளைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

இனிப்பு – மண் நீர் இணைந்தது. நெருப்புத் தன்மை பொருந்தியது. இளக்கமானது. செரிமானக் காலம் மிகுவது.எலும்பு, சதை, குருதி, கொழுப்பு,சாறு, சுக்கிலம் ஆகிய உடல் தாதுக்களுக்கு ஊட்டமளிக்கிறது. உடலைப் பெருக்க வைப்பது. குரக்கு நல்லது.

புளிப்பு – மண் தீ இணைந்தது. பசியைத் தூண்டும். ஜீரணத்தை மிகைப் படுத்தும். உணவின்பால் வேட்கையும் சுவை உணர்வையும் ஏற்படுத்தும். வெப்பத்தை கூட்டும்.

உவர்ப்பு – நீர் தீ இணைந்தது. உப்பு சுவை என்றழைப்பர். உப்பு உடல் உறுப்புகளுக்குள் கசிவையும் இசைவையும் ஏற்படுத்தும். வியர்வையை மிகுதிப்படுத்தி வெளியேற்றும்.

கைப்பு(கசப்பு) – நீர் வளி . இந்த சுவையை யாரும் விரும்புவதில்லை. ஆனால் இதுதான் உடலுக்கு உறுதுணையாகிறது. பூச்சிகளைக் கொல்கிறது. விஷத்தை முறிக்கிறது. குறைந்தால் குருதி தூய்மை கெடுகின்றது.

கார்ப்பு(காரம்) – தீ வளி இணைந்தது. உணவின்பால் நாட்டத்தை உண்டாக்கும். செரிப்பாற்றலை மிகுவிக்கும்.விந்து நீற்றுப் போகும். உடல் ஆற்றல் குறையும். உடலில் நடுக்கம் ஏற்படும். வலிப்பு நோய் ஏற்படக் கூடும்.

துவர்ப்பு – மண் வளி இணைந்தது. செரிமானத்தைக் குறைக்கும். மிகுந்தால் வயிறு பொருமும். மலம் சிக்கும். சிறுநீர் தடைப்படும். ஆண்மை, பெண்மை குறையும். உறுப்புகளின் உந்தும் ஆற்றல் குறையும். குறைந்தால் குருதி கெடும். கசியும்.

அறுசுவைகள் இந்த அளவிற்கு நம் உடலில் முக்கியமான கிரியா ஊக்கிகளாக விளங்குகின்றன. வள்ளுவப் பெருந்தகை சொல்லும் போது
”யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”, என்பார். நாம் பொதுவாக நாவடக்கம் என்றால் பேசுவதைக் குறித்து பொருள் கொள்வோம். ஆனால், நாவடக்கம் என்பதை உணவில் சுவை ஆர்வத்தைக் குறைத்துக் கொள்வதையோ அல்லது சுவைகளைக் கைவிடுவதையோ கூட பொருளாகக் கொள்ளலாம். உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் போது நம் உணர்வுகள் தறிகெட்டு ஓடுகின்றன.

விளைவு தவறான எண்ணங்கள் தவறான செயல்களுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. நம் முன்னோர்கள் பண்டைய காலங்களில் துறவறம் மேற் கொள்ளும் போது உணவு வகைகளில் சுவைகளை கைவிட்டு விடுவார்கள்.

உப்பு இல்லாமல் சாப்பிட்டு என்னை நானே பரிசோதித்துக் கொண்டதுண்டு. தீவிரமான பிரம்மச்சரியம் மேற் கொள்பவர்கள் உணவில் சுவைகளை அறவே நீக்கி விடுவார்கள்.

ஆசைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருக்கின்றன. ஐம்பொறிகள் வாயிலாகவும் ஆசைகள் உருவெடுக்கின்றன. தீவிரமான பிரம்மச்சரியத்தில் எந்த ஆசைக்கும் இடமில்லை. மற்ற நான்கு விஷயங்களையும் மனிதன் கட்டுப்படுத்தி வைத்து விட முடியும். ஆனால், உணவு உண்ணாமல் வாழ்வது என்பது இயலாத காரியம்.

வேண்டுமானால் உணவைக் குறைத்துக் கொள்ளலாம். அப்படி உணவு என்று உண்கிற போது அதை சுவைக்காமல் இருக்க முடியாது. அப்படி சுவைதந்து உண்ணுகிற போது அந்த சுவையில் பற்று வைக்காமல் இருந்து பழக வேண்டும். முதலில் மிகவும் கடினமாகத்தான் இருக்கும்.

உப்பு, காரம் இல்லை என்றால் எவ்வளவு நல்ல உணவாக இருந்தாலும் உண்ண முடியாது. ஆனால், பற்றுகளை அறுத்தவர்களுக்கு அது சாத்தியமாகிறது.
அந்த அறுசுவைகள் முறையாக அமையாது போய்விடும் போதும் அந்தச் சுவையைக் கருத்தில் கொள்ளாது அவர்கள் உண்ண முடியும். நாவை வென்றவர்களுக்கு இது சாத்திய மாகிறது.

ஒரு மனிதனுக்கு ஆசை அடங்கி இருக்கிறதா என்பதை இந்த நாவடக்கத்திலிருந்து அறிந்து கொள்ள முடியும். எல்லா ஆசைகளையும் அடக்கியவனே துறவி. அவனே ப்ரம்மச்சரியம் கடைபிடிக்க முடியும்.

ஆசையை அவன் எவ்வளவு தூரம் அடக்கியிருக்கிறான் என்பதை சுவை என்ற விஷயத்தில் நாவை அவன் எந்த அளவுக்கு அடக்கியிருக்கிறான் என்பதை வைத்து தெரிந்து கொள்ள முடியும்.

முற்காலங்களில் சீடனின் ஆசையை அளந்தெடுப்பதற்கு குருவிற்கு நாவடக்கமே பயன்பட்டுள்ளது. ப்ரம்மச்சரிய விரதத்தில் நான்கு நிலைகள் உண்டு. அந்த நான்கு நிலைகளைப் பெற்றிருப்பவன் இயல்பாகவே நாவடக்கம் உடையவனாகவே இருப்பான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top