…………………………….கி.மு. ஐம்பதாம் வருடம்………………………..
“ சுதர்சனா, நீ பிராணாயாமத்தில் தேறி விட்டாய்! அடுத்ததாக உன் உடல் உறுதியை சோதிக்கப் போகிறேன்! ”
“ அதற்கும் பரீட்சை உண்டா குருதேவா? ”
“ இல்லாமல் என்ன? ரசவாதத்தின் அடுத்த கட்டம் உள்ளதே? ”
அம்பல சித்தர் சொல்லத் தொடங்கினார்.
“ சுதர்சனா, இந்த மூலிகை உருண்டைகளைப் பார். இந்த உருண்டை யானைக் கவளம்; யானை வாயில் போடுவதற்கேற்ற அளவில் பெரிய உருண்டை; இது பசுக் கவளம்; அடுத்தது பூனைக் கவளம். இந்தக் கவளங்களை ஒவ்வொன்றாய் எரிமலைக் குழம்பில் போட வேண்டும். குழம்பு பச்சை நிறம் கண்டதும் அதில் அமிழ்த்திய எந்தப் பொருளும் பொன்னாகும். ”
“ இதன் அபாயம் என்னவோ? ”
“ உஷ்ணம்தான். என்னதான் குளிர்ந்திருந்தாலும் தீக்குழம்பு தீக்குழம்புதான். அறநெறி நிற்கும் பிறன் மனை போல அண்ட விடாது. இந்த மரவுரி ஓரளவு உதவலாம்; உன் வஜ்ஜிர தேகமே உன்னைக் காக்க வல்லது! இன்னொன்று; பச்சை நிறம் சொற்ப நேரமே நிற்கும்; பச்சை போய் நீலம் பூத்தால் ரசவாதம் நீங்கி விடும்! ”
………………………………………………………………………………………………………………………………………………………………………………….
கடலாடி- சிவ பர்வதம்
குலதெய்வமாய் பாவிக்கப்பட்ட குழிக்கு பூ அலங்காரம் செய்யப்பட்டு இரு மருங்கும் எரியும் குத்து விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன.
சுதர்சனா சுற்றுமுற்றும் பார்த்தாள். சந்நிதானத்துக்குரிய லட்சணங்கள் ஒன்று கூட இல்லாவிட்டாலும் அந்த இடத்தில் சாந்தமும் பரவசமும் தவழ்ந்தது! ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாய்த் திரண்ட மேகங்கள் மலை உச்சியை வணங்கி உலா வந்தன!
சுதர்சனாவுக்கு கண் இருட்டிக் கொண்டு வந்தது; பொதுவாகப் பழக்கமில்லாதவர்களுக்கு உயரத்தில் தோன்றும் சங்கடம்தான்… அவள் நின்ற இடத்தில் கனவா, கற்பனையா, காட்சிப் பிழையா என்று பிரித்தறிய முடியாத கால் நொடிப் பொழுதில் கட்டுக் குலையாத தேகத்தில் காவி அணிந்த இளைஞன் தோன்றி மறைந்தான் – “குருதேவா, இந்த மரத்தண்டு போதுமா? ”
சுதர்சனா முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள். அந்த இடத்தை கண்களால் துழாவினாள். இந்த இடத்தை இதற்கு முன் பார்த்திருக்கிறேனே?
பாறைகளைப் பார்த்தால் ஒரு காலத்தில் இந்த இடம் சீறும் எரிமலையாய் இருந்திருக்க வேண்டும். லாவா என்கிற எரிமலைக் குழம்பு இதோ இந்தப் பக்கமாய் வழிந்து வந்திருக்க வேண்டும். லாவா வருகிற பாதையில் குழி இருக்கிறது!
ஆழமில்லாத குழி… சுதர்சனா பூக்களை விலக்கினாள். தன் கைப்பையிலிருந்து சில உபகரணங்களை எடுத்து மண், கல் மாதிரிகளைச் சேகரித்தாள்.
பொதுவாக எரிமலைகளில் இப்படிப்பட்ட குழி இருக்காது. விளிம்பைப் பார்த்தால் மனிதன் வெட்டிய குழியாய்த் தெரிகிறது! அவள் கைகளில் ஒரு வகை எரிச்சல் போன்ற உணர்ச்சி தோன்றி மறைந்தது! ஒருவரோ, இருவரோ குழி வெட்டி இருக்கலாம் — யாரேனும் மரியாதைக்குரியவர் அல்லது வலியவர் மேற்பார்வையில்!
இங்கு எங்காவது கல்மேடை தென்படுகிறதா? கல்மேடை இல்லையெனில் மேற்பார்வை செய்தவர் குதிரையில் அமர்ந்திருக்கலாம்!
குழிக்கு சற்று மேல், பக்கவாட்டில் புதரால் மறைந்த கல்மேடை தெரிந்தது! அடுத்து சுதர்சனா செய்த காரியம் அவளை அவ்வபோது கவனித்துக் கொண்டிருந்த சொந்தங்களிடம் அதிர்ச்சியையும், சிரிப்பையும் தோற்றுவித்தது!
கல்மேடை கண்டவள் தன்னை மறந்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினாள்! நடந்ததை உணர்ந்த போது வெட்கம் பிடுங்கித் தின்றது!
ஏன் இப்படிச் செய்தோம்? பாட்டி சொன்னது போல இடத்தின் பாதிப்பா? என் மனம் என்னிடம்தானே இருக்கிறது? இனியாவது உருப்படியாக யோசிக்கலாம்….
லாவாவை சேகரிக்கக் குழி வெட்டியிருக்கிறார்கள்! சேகரமான எரிமலைக் குழம்பு குளிர்ந்து அதுவும் பாறையாகி விட்டிருக்கிறது. குழி நடுவில் ஆழம் வரை ஊடுருவும் ஓட்டை. லட்சுமி தேவி தங்கத்தண்டாய் மாறி நின்ற இடம்…
லட்சுமி தேவியை விட்டு விடலாம்! திரவ நிலையில் குழம்பு இருந்த போது எதற்கோ தங்கத்தண்டை செருகி வைத்த மாதிரிதான் ஓட்டை தென்படுகிறது. பிரஷ்ஷால் ஓட்டையை துடைத்து சாம்பிள் சேகரித்தாள். லாவா குளிர்ந்து பாறையான பிறகு தங்கத்தண்டை முரட்டுத்தனமாக ஆட்டி எடுத்திருக்கிறார்கள்! ஓட்டையின் ஓரமெல்லாம் தங்கத் துகள்!
கனன்று கொண்டிருக்கும் எரிமலை எப்போது வெடிக்கும் என்றே தெரியாது; எத்தனை தடவை வெடிக்கும் என்பதும் தெரியாது. எந்த மாஹானுபவர்கள் உயிரைப் பணயம் வைத்து குழி வெட்டினர்? ஏன்?
எரிமலைக் குழம்பை சேகரித்து மத்தியில் தங்கத்தண்டை போட்டது எதற்கு?
தங்கத்தை இட வேண்டுமென்றால் தங்கப்பாளம், தங்க நாணயம், தங்க நகைகளை இட்டிருக்கலாம் அல்லவா? இவைதானே மக்களிடம் அபரிமிதமாக இருக்கும். தங்கத்தண்டு பொற்கொல்லனிடம் கூட கிடைப்பதற்கு அரிதாயிற்றே?
இந்தப் பிராந்தியத்தில் மரத்தண்டுகள் நிறைய கிடைக்கின்றன……………………………….!
மட சுதர்சனா! மாற்றி யோசி!
எரிமலைக் குழம்பை சேகரித்து மத்தியில் மரத்தண்டை போட்டு தங்கத்தண்டாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது …….. ரசவாதம் !! !!
அனுமானம் உருவாகி விட்டது! இதற்கு நிரூபணம் தேவை. அந்த தங்கத் துகள்களை ஆராய வேண்டும்.
பாட்டி கதையை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அந்த தங்கத்தண்டு கிடைத்தால் நூறு சதவீத நிரூபணத்தைக் கொண்டு வரலாம்! இன்றைய தேதியில் தங்கத்தண்டு எங்கிருக்கிறதோ? தங்கத்தண்டாய் இருக்கிறதோ இல்லை, உருக்கப்பட்டு சிதைந்து விட்டதோ?
கலெக்டர் நரேன் தமது ‘ராஜ்ஜியத்தின்’ எல்லைகளைக் காணும் ஆவலில் வந்து கொண்டிருந்தார். வண்டியிலிருந்து பார்த்தார்: ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வாகனமும் சேவகனுமா?
அப்படியே மலை மேல் ஏறியவர் வந்து நின்றது நல்லம்மா குடும்பத்தினர் பூஜை செய்து கொண்டிருந்த இடத்துக்கு…
அனைவரும் கும்பிட்டுக் கொண்டிருந்த போது ஒரு துடிப்பான பெண் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது அவரை ஆச்சரியப்படுத்தியது. கலெக்டரின் செயலாளர் விவரம் தெரிந்து கொண்டு வந்து அவரிடம் சொன்னார். சுதர்சனாவும் பிறரும் மரியாதை நிமித்தம் அவரிடம் சென்றனர்.
கலெக்டரைக் கண்டதும் சுதர்சனா திகைத்தாள், இவரை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறாளே? பழகாத மனிதர்களும் இடங்களும் பழகியவை போல அடிக்கடி தோன்றுகின்றன! நல்ல வேளையாக காலை செய்தித்தாளில் அவர் புகைப்படத்தை பார்த்தது நினைவில் வந்தது.
“எனிதிங்க் இன்ட்ரெஸ்டிங்? ” என்றார் கலெக்டர். சுதர்சனா சுற்றியுள்ளவர்கள் மேல் பார்வையைப் படரவிட்டு தன் கைபேசி எண்ணை அளித்தாள். புரிந்து கொண்ட கலெக்டர் பொதுப்படையாகப் பேசி விட்டுப் புறப்பட்டார்.
தொடரும்…