………………………………………………………கி.மு. ஐம்பதாம் வருடம்….
அம்பல சித்தருக்கு சுதர்சனன் கைக்குழந்தை மாதிரி. அவரை விட்டு அப்படி இப்படி நகர மாட்டான். திருமுடியான் சற்று வளர்ந்த பிள்ளையைப் போல்; அவனுக்கென்று பிரத்யேகப் பணிகள் இருந்தன. குருநாதரை வணங்கி விட்டு வந்திருந்த மக்கள் கூட்டத்துக்கு உபதேசம் செய்யத் தலைப்பட்டான் திருமுடியான். கல்லால மரத்தடியில் விளங்கும் தட்சிணா மூர்த்தியை பற்றிய பிரசங்கம்…
“ உமைக்குப் பாதி உடலையும், அடியவர்க்கு முழுமையாகத் தன்னையும் அளித்த வள்ளல் மோன நிலையில் தனித்து அமர்ந்தபோது அம்மை என்ன ஆனாள்? ஞானாம்பிகையாக வெளிப்பட்டாள் ! ” மக்கள் மெய்ம் மறந்து கேட்டனர் – ஆனந்தக் கண்ணீருடன் !
திருவண்ணாமலை
வாகன ஓசை அடங்கி தவளைகளின் கச்சேரி தொடங்கும் முன்னிரவு நேரம்…… விஸ்வத்தின் காரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது நல்லம்மாவின் வேன்…. விஸ்வம் முதலில் இறங்கி நல்லம்மாவையும் அவர் குடும்பத்தினரையும் வரவேற்றார்….. அய்யனார் விஸ்வத்தின் கைகளை நெகிழ்ச்சியோடு பற்றிக் கொண்டார்.
“ லாட்ஜ்ஜெல்லாம் ஃபுல்லாயிடுச்சு. எங்க போய் தங்கறதுன்னு தெரியாம தவிச்சிட்டிருந்தோம். முன்னே பின்னே தெரியாத எங்களை உங்க வீட்டுல தங்க வைக்க பெரிய மனசு பண்ணி கூட்டி வந்திருக்கீங்களே, ரொம்ப நன்றி… ” தழுதழுத்தார்.
“ இதுல என்னங்க இருக்கு? அத்துவானக் காட்டுல வீடு வாங்கி கிரகப்பிரவேசம் பண்ணிட்டோம். குல தெய்வத்தை கும்பிட வந்திருக்கீங்க. எங்க வீடு ஒரு நல்ல காரியத்துக்கு பிரயோஜனமாகுதுன்னா எனக்கு சந்தோஷம்தானே! ” விஸ்வம் சொல்லிக்கொண்டே அவர்களுக்கு உதவ, வாட்ச்மேன் சுதர்சனாவின் கையிலிருந்த பெட்டியை வாங்கினார்.
சுதர்சனா வாட்ச்மேனைப் பார்த்தாள். முன் துருத்திய நெற்றி, செம்பட்டைத் தலைமுடி, கண்களின் வெண் பரப்பில் துளி வெண்மை இல்லாமல் வானவில்லின் ஏழு நிறங்களும் உட்கார்ந்திருந்தன. இந்த ஆளை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கேனே?
வீட்டுக்குள் சென்றவர்களின் பேச்சுக் குரல்கள் சீக்கிரமே அடங்கி உறக்கத்தில் வீழ்ந்தனர்.
லண்டன்
டைரியை முழுக்கப் படித்து விட்டான் விக்டர். வைஸ்ராய்க்கு தங்கத்தண்டு கிடைத்த இடம் ‘ஃபயர் ப்ளேஸ்’ என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
‘ஃபயர் ப்ளேஸ்’ என்றால் எரிமலைகள் அனல் கக்கும் இடமா? அப்படியிருந்தால் ‘வால்கனோ’ என்று குறிப்பிட்டிருப்பார்களே!
வெடி மருந்துகள் சேமிக்கும் கிடங்கா? இருக்கலாம்…
பெரிய தீ விபத்து நடந்த இடமா? இருக்கலாம்…
ஆங்கிலேயருக்கும் ஃபிரெஞ்சுக்காரர்களுக்கும் சண்டை நடந்த இடமாகையால் இது பாண்டிச்சேரிக்குப் பக்கத்தில் இருக்கலாம்…
அப்படியே வேறு சில தமிழ்ப் புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்த போது அவன் கேள்விக்கு விடை கிடைத்தது!
‘ஃபயர் ப்ளேஸ்’ என்றால் அக்கினித் தலம்! சிவபெருமானின் பஞ்ச பூதத் தலங்களில் ஒன்றான அக்கினித் தலம்! திருவண்ணாமலை!
கடலாடி- சிவ பர்வதம்
நல்லம்மா மாதிரி நடக்க முடியாதவர்கள் ஜீப்பில் வந்து விட, சுதர்சனா தன் சித்தப்பா முருகேசன், சித்தப்பா பையன்கள் அஜீத், சந்தர் இவர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள். இதில் இளவட்டங்கள் மூன்று பேருமே இப்போதுதான் இந்த இடத்துக்கே வருகிறார்கள். இதில் சுதர்சனாவுக்கும் இந்த இடம் புதியது என்பது சித்தப்பா குடும்பத்துக்குத் தெரியாது!
சித்தப்பாவை தொடர்ந்து வந்து கொண்டிருந்த சுதர்சனா ஒரு கட்டத்தில் தான் முன் நடந்தாள்! திரும்பிப் பார்க்காமல் சரசரவென்று நடந்த அவளை மற்றவர்கள் தொடர்ந்தனர்.
இடையில் சந்தர் தாகமென்றான்.
“ கொஞ்சம் இரு, சந்தர்! இங்கே பக்கத்துல ஒரு சுனை இருக்கணுமே! ” – சொன்னது சுதர்சனா!
கற்கண்டாய் தித்தித்த சுனை நீரைக் குடித்து விட்டு மேலே போனார்கள்.
அமரேசன் வீடு
கேட் பக்கத்திலிருந்த உருண்டை வடிவ அறைக்குள் சுகமாக உட்கார்ந்து சுருட்டு வலித்துக் கொண்டிருந்த வாட்ச்மேன் பெரியசாமி திரும்பத் திரும்ப ஒரே சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். பிரியாணியை கண் முன் வைத்து விட்டு காவலுக்கு நாயையும் வைப்பார்களாம்…! நகை வியாபாரி வீட்டுல பேரன் பெரிய போலிஸ் ஆபிசர்! நேரம்டா பெரியசாமி!
“ திருட்டைப் பத்தி ரோசிக்க வோணாம்தான்…கேட்டுட்டேனே! சத்தம் கேட்டுட்டேனே! மறக்கக் கூடிய சத்தமா அது? ”
வீட்டுப் பூஜையறையில் இருக்கும் தேவி சிற்பத்தை தூக்கி வந்த ஏழு பேரில் அவனும் ஒருவன். அவன் பீடத்தைத் தாங்கிக் கொண்டிருந்தான். பழைய சிற்பம்!
அப்போதுதான் அவனுக்கு அந்த சத்தம் கேட்டது! “ ச்ச்சிய்ய்ங்ங்ங்………..” ஏதோ ஒரு பொருள் உருண்டு வந்து தங்கத்தின் மீது மோதும் சத்தம்…
செடியை நட்டு வைத்து விட்டு கை கழுவ புழக்கடை பக்கம் போனபோது சில வார்த்தைகள் காதில் விழுந்தன. “ தங்கத்தண்டு ”.
அசந்த நேரம் ஆட்டையைப் போட வேண்டியதுதான்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:
புதிதாகப் பொறுப்பேற்றிருந்த கலெக்டர் நரேன் மருத்துவர்களின் ஆய்வுக் கூட்டத்தை முடித்திருந்தார். புதிதாக ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் வந்த இளம் பெண்ணைப் பார்த்தார்.
பார்த்தார் என்றால் கண்கள் அவளைப் பார்த்தன. மனம் அதில் லயித்தும் லயிக்காமலும் அந்தப் பதவிக்கே உரிய அழுத்தத்தையும் ஆயிரத்தெட்டு யோசனைகளையும் சுமந்து திரிந்தன.
“ சார், நான் லாவண்யா ” என்றாள் அந்தப் பெண், கலெக்டரின் மனநிலையை உணர்ந்தவளாக. “ ஹெல்த் ப்ளஸ்ங்கிற தொண்டு நிறுவனத்துல நான் சித்தா டாக்டர். நாங்க பழங்குடி இன மக்களுக்கு அவங்க இடத்துக்கே போய் சேவை செய்யறோம். நானும் பழங்குடி இனப் பெண்தான். எங்க நிறுவனர் ஒரு ஜெர்மானியர். இப்ப இந்த நிறுவனத்தை அவர் ஒரு ஆங்கிலேயருக்கு முறைப்படி மாற்றிக் கொடுத்துட்டார். ஒரு வாரம் பத்து நாள்ல எங்க புதிய தலைவர் வந்துடுவார். அதுக்குள்ள ஆம்புலன்ஸ் கிடைச்சா நல்லாயிருக்கும்… ”
“ ஆனா நீங்க உங்களுக்கு கொடுத்த டார்கெட்டை முடிக்கலியே? அப்புறம் இன்னொரு ஆம்புலன்ஸ் எப்படி? ”
“ பாஸ் இல்லாததால டிலே ஆகுது சார். பாஸ் வந்துட்டா டார்கெட்டை முடிச்சுடுவோம்!”
“ உங்க பாஸ் யாரு? ”
“ விக்டர் மார்ஷல் ! ! ”
தொடரும்…