………………………………..கி.மு. ஐம்பதாம் வருடம்…………………
“ குரு தேவரே, இரும்பைப் பொன்னாக்குகிற ரசவாதம் இவ்வளவு எளிமையானதா? ”
“ சுதர்சனா! கேட்பதற்கு எளிதாய்த் தோன்றும் இந்த ரசவாதம் செய்வதற்குக் கடினமானது! மூலிகைகளையும் பாதரசத்தையும் சேர்த்துக் காய்ச்சும் போது எரியூட்டிய பிணத்தின் மேல் எழுந்தாடும் சூட்சும சரீரத்தைப் போல வெண்ணிற ஆவி வெளிப்படுவதும் அடங்குவதுமாக இருக்கும்……………. பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சியின் மூலம் சுவாசத்தை கட்டுப்படுத்தி, வெண்ணிற ஆவியை உடலுக்குள் புகாமல் செய்ய வேண்டும். அவ்விதம் செய்ய இயலாதவர் பித்துற்றுப் போவதும், பிணமாகி வீழ்வதும் நிகழும். இன்னும் சொல்லப் போனால்…. இந்த ரசவாதமே பிராணாயாமத்தை சோதிக்கிற பரீட்சையாகும்…. ”
திருவண்ணாமலை
ஆங்காங்கே மரக்கன்றுகள் நட்டு முடித்ததும் திருப்தியாக இரண்டாவது மகன் விஸ்வத்துடனும் பேரன் அந்தரீசுடனும் புதிதாகக் குடியேறிய வீட்டுக்கு வந்தார் பிரபல நகை வியாபாரி அமரேசன். கிரகப் பிரவேசம் முடிந்து அனைவரும் புறப்பட்டுப் போய் தினங்கள் தினசரி வழக்கத்துக்கு மாறியிருந்தன. அந்தரீஸ் காவல் துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருந்தான். போஸ்டிங் கிடைக்காமல் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தான்.
“ அந்தரீஸ்! கெடுபிடி எவ்வளவு வந்தாலும் நேர்மையா நடந்துக்கணும் ” தன் அறிவுரை பேரனுக்கு சலிப்பைத் தருவதை உணர்ந்து கொண்ட அமரேசன் அவனை பூஜையறைக்கு அழைத்துச் சென்றார்.
யாரும் அருகில் இல்லாததை உறுதி படுத்திக் கொண்டு அங்கிருந்த விஷ்ணு துர்க்காவின் மரச் சிற்பத்தை அணுகினார். ஏழெட்டுப் பேர் சேர்ந்து தூக்குகிற கனம்! விஷ்ணு துர்க்கா எட்டுக் கைகளுடன் காட்சியளித்தாள். மேல் கைகளில் சங்கு சக்கரமும், இரண்டாம் வரிசைக் கரங்களில் தாமரை மலர்களும் மூன்றாம் வரிசையில் உயர்த்திப் பிடித்த கதாயுதங்களும், கீழ்க்கைகளில் அபயம் மற்றும் வர முத்திரைகளும் செதுக்கியிருந்தன. தேவியின் பீடத்தில் ஶ்ரீ துர்க்கா அஷ்டகம் செதுக்கப்பட்டிருந்தது. இதில் வினோதம் என்னவெனில் தேவியின் கண்கள் ஜொலித்தன- எல்சிடி பல்புகளின் உபயம்! தேவியின் தலைக்குப் பின் கத்தை ஒயர்கள் புறப்பட்டன! அவன் தாயார் வர்ணாவின் கைவண்ணம் அது!
எம்ஈ எலக்ட்ரானிக்ஸ்; நகை வியாபாரம் மாத்திரமே தெரிந்த அந்தக் குடும்பத்தில், காதலித்ததால், மாட்டியவர்.
தாத்தா பேரனின் கைகளை விரித்து தேவியின் பாதங்களைப் பற்றச் சொன்னார். பிறகு அவர் சிற்பத்தின் பீடத்தில் சில எழுத்துக்களின் மேல் பத்து விரல்களையும் பதித்து மூன்று முறை அழுத்த, பீடம் எழும்பியது. உள்ளே இருந்த பெட்டி போன்ற பாகத்தில்…..
விலையுயர்ந்த கற்களோடு ஒரு தங்கத்தண்டும் காணப்பட்டது!
அந்தரீஸ் ஆச்சரியத்தோடு கவனித்தான். சொக்கத் தங்கத்தாலான தண்டு! குறைந்தது இரண்டாயிரம் வருடம் பழமையானது!
ஓரடி உயரத்தில் அடிப்பாகம் ஐந்து சென்டிமீட்டர் குறுக்களவோடு நிஜத்தண்டு போலவே இருந்தது அது!
அதன் பழமையையும் சிறப்பையும் வைத்துக் கணக்கிட்டால் பத்து மில்லியன் டாலர் தாராளமாய்த் தேறும்!
“ இது எப்படி நம்ம கிட்ட வந்ததுன்னு தெரியுமா உனக்கு? ”
தங்கத்தண்டை பத்திரப்படுத்தி விட்டு பிரமிப்பு அகலாத பேரனுடன் தமது அறைக்கு வந்தார் தாத்தா.
சொன்னார்.
“ இது பத்து பதினைந்து தலைமுறைக்கு முந்தின கதைப்பா. அப்போதிருந்தே நாம தங்க வியாபாரம்தான் செஞ்சிட்டிருந்தோம். மாதவ தீர்த்தர்னு நம்ம மூதாதைகள்ல ஒருத்தர். வழி தவறி காட்டுல மாட்டிகிட்ட அவர் கிட்ட கொள்ளைக்காரங்க கொள்ளையடிச்சுட்டு அவருக்கு அரளி விதை அரைச்சுக் கொடுத்துட்டாங்க. ராத்திரி கொள்ளைக்காரங்க பதினஞ்சு பேர் ஒரு கூடாரமடிச்சு மலைப் பாதையில தங்கியிருந்த சமயம் ஒரு பாறாங்கல்லு உருண்டு வந்துச்சு. உயிருக்குப் போராடிட்டு இருந்த மாதவ தீர்த்தர் தனக்கு விஷம் கொடுத்த கொள்ளைக்காரங்களை அலர்ட் பண்ணி காப்பாத்தினார். அவர் மாத்திரம் அப்படி செய்யலேன்னா பதினஞ்சு பேரும் பாறாங்கல்லுல நசுங்கி சட்னியாகி இருப்பாங்க. அப்புறமா கொள்ளைக்காரங்க அவரைக் காப்பாத்த ரொம்ப முயற்சி பண்ணாங்க. ஆனா முடியல. அவர் சாகிற போது அவரோட வாரிசு எங்க இருக்காருன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டு அந்தக் கொள்ளைக்கார தலைவன் ஊருக்கே வந்துட்டான். அவரோட மகன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டவன் பிராயசித்தமா கொடுத்ததுதான் அந்த தங்கத்தண்டு! அதை அவன் யாரோ வைஸ்ராய் கிட்டயிருந்து கொள்ளை அடிச்சிருக்கான்!
அந்த தங்கத்தண்டு அப்போதிருந்து குடும்பச் சொத்தா நம்ம கிட்ட இருக்கு. அப்பேர்பட்ட பரம்பரை நாம. நீ இதை மனசுல வச்சுக்கோ! ”
லண்டன்
தனது பழைய வீட்டு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்து படித்துக் கொண்டிருந்த விக்டர் மார்ஷலுக்கு ஒரு பழைய டைரி கிடைத்தது. டைரி தமிழிலும் எழுதப்பட்டிருந்தது. நிறைய தமிழ்ப் புத்தகங்களும் அவன் நூலகத்திலிருந்தன. காரணம் அவனுடைய முன்னோர்கள் விக்டோரியா மகாராணியின் சார்பில் தென்னிந்தியாவை ஆண்டிருந்தனர். அந்தப் புத்தகங்களை படிப்பதற்காகவே அவன் ஒரு வருடம் முயன்று தமிழ் கற்றுக் கொண்டிருந்தான். அவனுடைய ஆசிரியரே ஆச்சரியப்படும் அளவுக்கு வெகு விரைவில் கற்றுக் கொண்டான். டைரி அவன் முன்னோர்களை விவரித்தது. சரியாகப் பன்னிரெண்டாம் தலைமுறை, வைஸ்ராய் ஜான் மார்ஷலைப் பற்றியது. அவர் விக்டோரியா மகாராணியின் சார்பில் இந்தியாவை ஆண்டிருக்கிறார். தென்னிந்திய ராஜ்ஜியம் ஒன்றிலிருந்து விலை மதிப்பற்ற தங்கத்தண்டை பரிசாகப் பெற்றிருக்கிறார். தம் பதவிக் காலம் முடிந்து லண்டன் திரும்பின சமயம் அந்த தங்கத்தண்டு களவு போய் விட்டதாக குறிப்பு இருந்தது. தங்கத்தண்டின் தரத்தை சோதிப்பதற்காக அதிலிருந்து வெட்டப்பட்ட ஒரு சிறிய துண்டு பொட்டலமாக மடிக்கப்பட்டு டைரியின் முதுகில் பாதுகாப்பாக செருகியிருந்தது. தங்கத்தண்டின் ஓவியம், இன்ன பிற விவரங்கள் அந்த டைரியில் இருந்தன.
பொட்டலத்திலிருந்த சிறிய தங்கத் துண்டை உற்றுப் பார்த்த விக்டர் மார்ஷல் தன் நெற்றி முடியை பாம்பு விரலால் நீவி சுருட்டிக் கொண்டான். தங்கத் துண்டை எடுத்துப் போய் மைக்ராஸ்கோப் அடியில் வைத்துப் பார்த்தவன்………..
அதிர்ந்து போனான்….!
சிற்பிகள் தங்கத்தில் மலரைச் செதுக்கலாம்; மரத்தைச் செதுக்கலாம்…
மரத்தண்டில் மட்டுமே தெரியக்கூடிய சைலம், புளோயம் போன்ற திசுப் பகுதிகள் அப்படியே தங்கத் துண்டில் தெரிவது எப்படி?
இதைப் பொற்கொல்லனால் வடிக்க முடியாது! மரத்தண்டே தங்கமாக மாறினால்தான் உண்டு!
அப்படியானால் இது… இது…. இதன் அர்த்தம்… ரசவாதம் !! !!
தொடரும்…