தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த பெருமை பாண்டியர்களுக்குரியது. அவர்களின் தலைநகரமாக மதுரைமா நகரம் விளங்கியது. “பாண்டிய நாடு முத்துடைத்து” என்று பெரியோர் போற்றுவர். முத்தும் மணியும் விற்கக்கூடிய கடைகள் பல, மதுரைமா நகரத்தின் செல்வ வளத்தை அயலாறுக்கு அறிவித்துக் கொண்டிருந்தன. இத்தகைய செல்வ வளம் மிக்க மதுரைமா நகரைத் தலைநகரமாகக் கொண்டு, புகழ் பெற்ற பாண்டியர் பலர் ஆண்டு வந்தனர். அவருள் பசும்பூண் பாண்டியனும் ஒருவன்.
அவன், பலவகையிலும் தன் முன்னோரைக் காட்டிலும் சிறந்து விளங்கினான். அவனை நெடுஞ்செழியன் என்றும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்றும் சான்றோர் அழைத்தனர். பசும்பூண் பாண்டியன் மிக இளைஞனாக இருந்த போதே அவன் தந்தை இறந்து விட்டான். அரசாளும் பொறுப்பு அவனை வந்தடைந்தது. மிக மிக இளைஞனாக இருந்தும் அவன் முடிசூடிக்கொள்ள அஞ்சவில்லை.
இளைஞனாக இருந்தும் வில்வித்தையிலும் வாட்போரிலும் சிறந்து விளங்கினான். வீரத்தில் சிறந்து விளங்கிய பசும்பூண் பாண்டியன் அரியனையேறி அரசாளத் தொடங்கினான். அவனது ஆட்சி, நீதியாகவும் நேர்மையாகவும் நடந்தது. கல்விக் கேள்விகளிலும் சிறந்தவன் பசும்பூண் பாண்டியன். குடிமக்கள் குறையில்லாது வாழ்ந்தார்கள். கொற்கைத் துறைமுகத்திலிருந்து கிடைக்கும் முத்துகளும், பொதியமலைச் சந்தனமும் அவனைச் செழிப்புடையவனாக ஆக்கின. அவன் ஆண்ட மதுரைமா நகரமும் செல்வ வளத்தால் அழகுடன் விளங்கியது.
சிறப்பும், மதுரையின் வளமும் கண்ட பகை வேந்தர் உள்ளத்தில் பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இளைஞன்தானே என்று எண்ணி, எப்படியும் அவனை வென்றுவிடலாம் என்று நப்பாசைக் கொண்டனர். இளைஞனாகிய பசும்பூண் பாண்டியனை வெல்ல எழுவர் திரண்டனர். அவர்களில் இருவர் பேரரசர்கள். ஒருவன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன், மற்றொருவன் சோழன், மீதி ஐவர் குறுநில மன்னர்களாவர். அவர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் முதலியோராவர்.
இவ்வெழுவரும் ஒன்று கூடிச் சூழ்ச்சி செய்தனர். பசும்பூண் பாண்டியனை எந்த வழியிலாவது வென்றுவிட வேண்டுமென்று துடித்தனர். பெரும் படையுடன் மதுரை மீது படையெடுத்தனர். தன்னை எதிர்த்துப் பெரும் படை வருவதை ஒற்றர்களால் அறிந்த பசும்பூண் பாண்டியன் சினம் கொண்டு பொங்கி எழுந்தான். படையெடுத்து வரும் பகைவர்களை, வழியிலேயே மடக்கி அவர்களது செருக்கை அடக்க நினைத்தான்.
வஞ்சினங் கூறிய பசும்பூண் பாண்டியன் வேப்பமாலை சூடிக் கொண்டு படை தொடர்ந்துவரப் புறப்பட்டான். பாண்டியப் படைகள் ஆரவாரித்தன. தேர்படையும், யானைப்படையும், குதிரைப்படையும், காலாட் படையும் அணிவகுத்துப் புறப்பட்டன. பகைவர்கள் தங்கள் படையுடன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தங்கியிருந்தனர். பசும்பூண் பாண்டியன் படைகளுடன் வந்து கொண்டிருப்பதை அறிந்தார்கள். அவர்களும் தங்கள் படைகளைத் தயார்படுத்திக் கொண்டனர். பசும்பூண் பாண்டியன் படையும் பகை மன்னர்கள் படையும் ஒன்றோடொன்று மோதின.
மதயானைப் போலப் பசும்பூண் பாண்டியன் போரிக்களத்தில் புகுந்து வீரப் போரிட்டான். அவனது கைவாளுக்கு யானைகளும், குதிரைகளும், காலாட்படையினரும் மிகுதியாக இரையாயின. பகைபடையினர் பசும்பூண் பாண்டியனின் படைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பகைவர் படைகள் நாலாபக்கமும் சிதறின. பகைவர்களை விடாது ஓட ஓட விரட்டித் தாக்கினான் பசும்பூண் பாண்டியன். துரத்திச் சென்று யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை மட்டும் சிறை செய்தான். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். இந்தக் காட்சியை குடபுலவியனார் தனது “எழுவரை வென்ற ஒருவன்” (புறம் – 19) என்ற பாடலில் விளக்குகிறார்.
வெற்றி வீரனாகப் பசும்பூண் பாண்டியன் தலைநகருக்குத் திரும்பினான். தன் நாட்டு அரசன், ஏழு பேர்களையும் எதிர்த்து நின்று வெற்றி பெற்றதை அறிந்த குடிமக்களும் புலவர்களும் எதிர்கொண்டு வரவேற்றுப் புகழ்ந்தனர். அவனது வெற்றியை நக்கீரர், பொதும்பில் கிழார், ஆலம்பேரி சாத்தனர், மாங்குடி கிழார் முதலிய புலவர்கள் புகழ்ந்து பாடினர். மாங்குடி மருதனார் “மதுரைக் காஞ்சி” என்னும் பாடலில் பசும்பூண் பாண்டியனைப் போற்றிப் புகழ்ந்தார்.
பசும்பூண் பாண்டியன் தலையாலங்கானத்துப் போரோடு அமைதியடைய விரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் தனது பெயர் பரவ வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அதனால், தனக்குப் பணியாத பகை மன்னர்கள் மேல் அவன் போர் தொடுக்க முற்பட்டான். தமிழ் நாட்டில் அவ்வப்போது குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த கொங்கர் என்பாரை, அவர்களுக்கு உரிய கொங்கு நாட்டிலேயே சென்று வென்று அடக்கினான். சேர நாட்டின் மீது படையெடுத்து, சேரருக்குரிய முசிறித் துறைமுகத்தையும் யானைப்படையையும் அழித்து வெற்றியுடன் நாடு மீண்டான். அதன் பின்னர், குறுநில மன்னனாகிய எவ்வி என்பவனை வென்று அவனுக்குரிய முத்தூர்க் கூற்றத்தையும் மிழலைக் கூற்றத்தையும் கைப்பற்றிக் கொண்டான்.
சென்ற இடமெல்லாம் பசும்பூண் பாண்டியனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. அவனை எதிர்த்து நிற்பார் யாருமில்லை. பல புலவர்கள் அவனைப் போற்றிப் பாடினார்கள். வெற்றி வீரனாகிய அவன், கொடை வீரனாகவும் விளங்கினான். புலவர்களுக்கும் பாணர்களுக்கும் வேண்டும் பொருள்கொடுத்துப் போற்றினான். தனக்கு எல்லோரும் அடங்கியிருக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கில்லை. அடங்காதவரை அடக்குவதே அவனது முறை. பல போர்களிலும் போர் செய்து புண்பட்ட வீரர்களைத் தனித்தனியே சென்று கண்டு ஆறுதல் கூறி ஊக்கப்படுத்தினான். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தான். இதனால் எல்லோரும் அவனைத் தெய்வமாகவே போற்றினான்.
பலரும் போற்றும் வண்ணம் பசும்பூண் பாண்டியன் நெடுங்காலம் பாண்டி நாட்டை ஆண்டான். குடிமக்கள் ஒரு குறையுமின்றி வாழ்ந்திருந்தனர்.