சமாதி நிலை என்பது எந்த வித எண்ணங்களும் இல்லாது கண்களை மூடி அமர்ந்திருப்பது என்பதாகவே நம்மில் பலரும் புரிந்து கொண்டிருக்கிறோம். உண்மையில், சமம் + ஆதி = சமாதி, அதாவது ஆதியும் அந்தமுமாய் சொல்லப்படுகிற இறை நிலைக்கு சமனான ஒன்றுமற்ற அல்லது வெறுமையான மனநிலையில் இருப்பதே சமாதி எனப்படும்.
இன்னொரு வகையில் சொல்வதானால், கண்ணை திறந்து கொண்டு அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கொண்டே, உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் “நான்” “எனது” “என்னுடையது” என்ற அகங்காரம் இல்லாத பக்குவமும் சமாதி நிலையாக சொல்லப் படுகிறது.
இதனை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
“சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே”
– திருமந்திரம் –
“சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுடன் னேகிற்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே”
– திருமந்திரம் –
இந்த நிலை எல்லோருக்கும் சாத்தியமில்லை. குருவருளுடன் கூடிய விடாமுயற்சியும், பயிற்சியுமே இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். பதஞ்சலி முனிவர் தனது பதஞ்சலி யோகம் என்னும் நூலில் சாமாதி நிலைக்கு இட்டுச் செல்லும் எட்டுப் படிநிலைகளின் வகைகளை விரிவாக அருளியிருக்கிறார். அது தொடர்பான பதிவுகளை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
கொங்கணவர் தனது “கொங்கணவர் வாதகாவியம்” என்ற நூலில் சமாதி நிலைகளைப் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார். ஆறுவகையான சமாதி நிலைகள் இருப்பதாக கொங்கணவர் குறிப்பிடுகிறார்.
அவையாவன…
தத்துவல்ய சமாதி
சவிகற்ப சமாதி
நிருவிகற்ப சமாதி
அகண்டவிர்த்தி சமாதி
சஞ்சார சமாதி
ஆரூட சமாதி