சினத்தினால் விளையும் கேடு…..ஒரு உண்மைக் கதை…
சரோஜாவிற்கு தன் 18 வயது மகன் சந்தோஷைப் பற்றி மிகுந்த மனக்குறை. அவனுடைய போக்கே சரியில்லை. நிறைய பொய் சொல்லுகிறான். வீட்டிலிருந்து பணம் திருடுகிறான். கல்லூரியில் சிறப்பு வகுப்பு இருப்பதாய் பொய் சொல்லி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றுவதும், சினிமாவிற்குச் செல்வதுமாய் பொழுதைக் கழிக்கிறான். ஏதாவது கேட்டால் “வள..வள்” என எரிந்து விழுகிறான். அவனிடம் பேசவே பயமாய் இருக்கிறது. சமயங்களில் அப்பாவையே எதிர்த்துப் பேசும் அளவுக்கு அவனுடைய அடாவடித்தனம் செல்கிறது. இவனை எப்படித் திருத்துவது? “கடவுளே! என் பிள்ளைக்கு நல்ல புத்தியை கொடு” மிகுந்த கவலையோடு கண்ணீர் மல்க இறைவனைப் பிரார்த்தித்தாள் அந்த்த் தாய்.
மகனுக்காய் வேண்டுதல் புரியும் அந்த அன்புத்தாயின் வாழ்க்கையில் ஒரு பத்து ஆண்டுகள் முன்னோக்கிச் செல்வோம்.
சாந்தனு சரோஜாவின் கணவன். மிகவும் கோபக்காரன். கோபம் வந்துவிட்டால் மனைவியை வெறி பிடித்தது போல் அடிப்பான். அவனைக் கண்டாலே சரோஜா பருந்துக்குப் பயந்த கோழிக்குஞ்சாய் நடுங்குவாள்.
ஒரு நாள் சரோஜா காலையிலிருந்து மாலை வரை வீட்டு வேலைகளை செய்து, மிகவும் களைப்பாகிவிட்டாள். மன அயர்ச்சி வேறு. சற்று ஓய்வெடுத்துக் கொள்ள எண்ணி ஒரு பத்து நிமிடம் டி.வி முன் அமர்ந்தாள்.
அவளுக்கு அன்று நேரமே சரியில்லை போலும். வெளியே விளையாடச் சென்ற 5 வயது மகன் சந்தோஷ் மீது ஒரு பைக் வந்து மோதி விட்டது. சந்தோஷின் அலறல் கேட்டு சரோஜா வெளியே ஓடிச் சென்று பார்த்தாள். நல்ல வேளையாக முழங்காலில் ஒரு சிறு காயம் தவிர வேறு எந்த அடியும் இல்லை.
குழந்தையை அள்ளி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து, மருந்திட்டுக் கட்டி விட்ட சரோஜாவை சட்டென்று பயம் கவ்விக் கொண்டது. மனதில் ஒரு கேள்வி எழுநதது. கணவன் வந்து கேட்டால் என்ன சொல்வது? பைக்கில் அடிபட்டுவிட்டான் என்று சொன்னால், அவனை கவனிப்பதை தவிர அப்படி என்ன உனக்கு பெரிய வேலை? என டி.வியையே உடைக்கும் அளவுக்கு அவன் கோபம் செல்லும். கலங்கி நின்ற சரோஜாவுக்கு ஒரு எண்ணம் உதித்தது.
குழந்தை சந்தோஷிடம் “என் செல்லமே, அப்பா வந்து கேட்டா, பைக்கில அடிபட்டுடுச்சுன்னு சொல்லாதே. விளையாடிட்டு இருந்தபோது கீழ விழுந்துட்டேன்னு சொல்லு. மம்மி உனக்குச் சாக்லெட் வாங்கித் தருகிறேன்” என திரும்பத் திரும்பச் சொல்லி குழந்தைக்குப் பயிற்சி கொடுத்தாள்.
குழந்தையும் வெகு சாமார்த்தியமாய் தந்தையிடம் பொய் சொல்லி தாயைக் காப்பாற்றியது. பூரித்துப் போன தாய் குழந்தையை வெகுவாய்ப் பாராட்டி அதற்குப் பிடித்த சில சாக்லெட்டுகளை லஞ்சமாக வாங்கிக் கொடுத்தாள்.
பொய் சொல்லுவதற்கான விஷ விதை அன்றே சந்தோஷின் மனதில் ஊன்றப்பட்டது. இது போல எத்தனை எத்தனை சம்பவங்கள்!!!!? அவையெல்லாம் இன்று வளர்ந்து மிகப்பெரிய விருட்சமாய் நிற்கிறது. இப்போது சமுதாயம் வெறுக்கத்தக்க முறையிலே சந்தோஷின் நடவடிக்கைகள் உள்ளன. செயலுக்கு விளைவு. இப்போது இறைவன் என்ன செய்ய முடியும்? எப்படி நல்ல புத்தியைக் கொடுக்க முடியும்.
இது சந்தோஷோடு முடிந்து விடுமா? இவன் தந்தையிடமும், தாயிடமும் கற்றுக்கொண்ட இந்தக் கோபம், பொய் சொல்லுதல், லஞ்சம் வாங்குதல் போன்ற குணங்களை இவன், தன் மனைவியிடமும் குழந்தைகளிடமும், தன்னுடைய பணியிலும் காண்பிப்பான் அல்லவா? தலைமுறை தலைமுறையாய் இது எடுத்துச் செல்லப்படும் அல்லவா?
அன்பர்களே!
ஒரு குடும்பத்தலைவருக்கு அடிக்கடி சினம் வருகிறதென்றால், அவரது மனைவி மக்கள் மனநிலைகள் அதனால் பாதிக்கப்படும். அவர்கள் சோகம் கொண்ட முகத்தினராவார்கள். அவர்களது மனவலிமை குன்றிப் போகும். அவர்களிடத்தில் தோல்வி மனப்பான்மை தோன்றும். மறைவாகத் தீங்கு செய்யும் குணமுடையவர் ஆவார்கள். எளிதில் சினம் வயப்படும் பலவீனத்தையும் அவர்கள் பெற்றுவிடுவார்கள். சினம் ஒரு சங்கிலி போன்றது. ஒருவர் சினம் மற்றவரின் சினத்தை தூண்டி விடும்.
நம் காலத்தில் நம்மோடு வாழும் மக்களுக்கு மட்டுமின்றி, நம் சந்ததிகளுக்கும் சங்கிலித் தொடர்போலப் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையுடையது. குடும்ப அமைதியை குலைத்துவிடும் என்கிறார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.
வாழ்க்கைத் துணையிடம் எல்லாவற்றையும் தைரியமாய் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளக் கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தருவது ஆண் பெண் இருபாலரின் கடமை. இல்லாவிடில் அந்தக் குடும்பம் சீரழியும். அவர்கள் வாழும் சமுதாயம் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த பாதிப்பு தலைமுறை தலைமுறையாய் தொட்டுத் தொடரும். ஆழ்ந்து சிந்திப்போம்.