திங்கட்கிழமை மதியம். நரேன் எங்களெல்லாரையும் அழைத்து வைத்து அமைதியாக நிற்கிறான். அவன் முகத்தில் ஒரு படபடப்பு குவிந்திருக்கிறது. கொஞ்சம் நடுக்கத்துடன் தன் செல்லில் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான்.
காட்டிவிட்டு எங்களனைவரையும் மேலும் கீழும் பார்த்தான். பின்பு வேகமாக எல்லோரையும் இழுத்துக் கொண்டு அந்தக் கட்டடச் சுவர் பக்கம் ஓடினான், “என்ன எழுதியிருக்கு , வாசி….”
“என்னடா நரேன் . அதேதானே இது?”
“டேய் சிவா.. நல்லாப் பாருடா. நாங்க எழுதுன தமிழில எழுத்துப்பிழை இருக்கு. இப்போ அதை யாரோ திருத்தியிருக்காங்க. நீங்க யாராவது செஞ்சீங்களா இதை?”
ஒருவரை ஒருவர் பார்த்து மறுத்து மண்டையாட்டினோம். நரேன் தொடர்ந்தான், “அந்த ‘டை’யை யாரோ திருத்தியிருக்காங்க. நம்ம தலைமுறைல ‘டை’ எழுதணும்னா துணைக்கால்தான் போடுவோம். இப்படிக் கொம்பு போடுற பழக்கம் ரொம்பப் பழசு………. கிட்டத்தட்ட இங்கே புதைச்சு வெச்ச பொணமெல்லாம் உயிரொட இருந்த காலம்”
“டேய் என்னடா உளர்றே… என்ன சொல்ல வர்றே?”
“இல்லடா….. யோசிச்சுப் பாரு. நம்ம அலாரம்ல வெச்ச குரல் எனக்கும் கேட்டிச்சு. எனக்கென்னமோ………….”
அவன் பேச்சை முடிப்பதற்குள் அர்ஜுன் அங்கிருந்து பிய்த்துக்கொண்டு ஓடினான். நாங்கள் அதிசயித்து உறைந்து நின்றோம். ஐந்து நிமிடம் கழித்து நரேன் செல்லில் அழைத்தான். “டேய் கன்ஃபார்ம்டா..கைலாசம் ரெண்டு நாளா வேலைக்கு வரலே, வெள்ளிக்கிழமை ராத்திரிதான் மத்த எல்லா வாட்ச்மேனும் அவரைக் கடைசியா பாத்திருக்காங்க. சனிக்கிழமை காலைல கூட அவரை யாரும் பாக்கலை. அன்னிக்கு ராத்திரி இங்கே ஏதோ தப்பு நடந்திருக்கு”
————————————————————————-
திங்கட்கிழமை. அதே நேரம்.
கைலாசம் தாத்தா வீட்டு வாசலில் கவலை தோய்ந்த முகங்கள். ஓரமாய் உட்கார்ந்தொருவன் பாடை கட்டிக் கொண்டிருக்கிறான். இழவு விழுந்த வீடு துக்கத்தைக் காற்றில் தெளித்துக் கொண்டிருக்கிறது. கைலாசம் தாத்தாவின் பேரன் ஒரு தபால் காகிதக் கட்டிலிருந்து ஒன்றை உருவி, தலைப்பு எழுதுகிறான்.
பட்டென்று அவன் தலையில் தட்டி, கைலாசம் தாத்தா அவனிடமிருந்து வாங்கித் தானே அதைத் திருத்திவிட்டுத் தொடர்ந்து எழுதுகிறார்.
‘நேற்று அதிகாலை எனது அண்ணன் புஷ்பவனம் மாரடைப்பால்……’
“என்னத்த இங்கிலீஷு மீடியத்துலே படிக்கிறீங்களோ. இந்தக் காலத்து இளசுகளுக்கு ஒரு வாக்கியம் எழுதத் தெரியலையே நல்ல தமிழில…”
————————————————————————-
உங்களுக்குப் பேய் கதைகளில் நம்பிக்கை உண்டா?
சும்மாதான் கேட்கிறேன்.
நரேனுக்கும் கேட்டிருக்கிறதே !
முற்றும்.