Home » படித்ததில் பிடித்தது » தவமும் அறமும் : மகரிஷி!!!
தவமும் அறமும் : மகரிஷி!!!

தவமும் அறமும் : மகரிஷி!!!

தவமும் அறமும் :

தவத்தையும் அறத்தையும் நீங்கள் மிகச் சுலபமாகப் பற்றிச் செல்லும் முறையினை இப்போது உங்களுக்குச் சொல்லுகின்றேன். தவம் எதற்காக என்றால் இறையுணர்வு பெற்று இறைவனோடு உறைவதற்காக. அறம் எதற்காக என்றால் இது வரையில் செய்த கர்மங்களின் அழுத்தத்தினால் எண்ணமும் செயலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனவே, அதிலிருந்து செய்து செய்து நல்லனவே செய்யக்கூடிய அளவுக்கு, தீயன செய்யாது இருக்கக்கூடிய ஒரு தூய்மைக்கு வரவேண்டும். மனத்தூய்மை தவத்தினால் வரும்; வினைத்தூய்மை செயலினால் வரும்; நல்ல செயல் அறத்தினால் வரும். அதனால் இது வேண்டும். இந்த இரண்டையும் ஒருங்கே பார்ப்பதற்கு என்ன வேண்டும்? இந்தக் காலத்திற்கு வேண்டியது அதுதான். அந்த அறம், தவம் இவற்றை வைத்துத்தான் இதுவரையில் இந்த உலகத்திலே ஏற்பட்ட மதங்களெல்லாம் அமைந்துள்ளன.

எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் இறை – உணர்வைக்காட்டி அற – உணர்வை காட்டிடுவதாகவே இருக்கும். இந்த இரண்டும் தான் எல்லா மதங்களிலும் உள்ளன. இறை உணர்வுக்கு இறைவழிபாடு. உலக மக்களோடு தொடர்பு கொண்டு இனிமையாக – அதாவது ஆங்கிலத்தில் “harmony” என்று சொல்கின்றோமே அவ்வாறு – வாழ்வதற்கு என்ன வேண்டும்? ஒழுக்கம், கடமை ஈகை என்ற அறம் வேண்டும். இந்த அறநெறி உலக வாழ்க்கைக்கு அவசியம். தவநெறி, உளப்பயிற்சி, அறிவு மேன்மை இறைவனை அடைய இவை வேண்டும். இதுவரையில் மதங்களிலெல்லாம் அந்த உணர்வை ஏற்படுத்துவதற்காக இதெல்லாம் சொன்னார்கள்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

மகரிஷியின் மணிமொழிகள் : (20-04-2014)
“அறிவு என்பது அறியப்படுவது.
ஞானம் என்பது உணரப்படுவது”.

“அறிவை ஏடுகளில் பெறலாம்.
ஞானத்தை தவத்தால் பெறலாம்”.

“அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்.
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர்; அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்;
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்,
அதை வாழ்ந்து காட்டினோர் நினைவு கூர்வோம்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top