தூரத்தில் மருதமலை உச்சியில் கொழுந்து விட்டு எரியும் ஜுவாலை தெரிந்தது. முருகன் படிக்கட்டுகள் பாதி மலையிலேயே முடிந்துவிடும். அதற்கும் மேலே யாரும் அறியாத மலை உச்சிக்காடுகளில் பல இரவுகள் இபடிப் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறோம் எங்கள் மொட்டை மாடியிலிருந்து. சிலர் காட்டுத்தீ என்கிறார்கள். அங்கே ஆதிவாசிகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. கைலாசம் மாதிரி ஆட்கள் மூலம் சில பேய் விளக்கங்களும் உண்டு. இந்தப் பேச்சின் தொடர்ச்சியோடு, பற்றி எரியும் நெருப்பைப் பார்க்கையில், அந்த மண்டை ஓட்டுப் பேய்களுக்கு ரோஷம் வந்துதான் விட்டதோ என்றொரு சிறு பிரமை ஏற்பட்டது.
நான் ராகேஷிடம் கேட்டேன், “மச்சி இது ஒரு வேளை நீ எழுதினதுக்குப் பேய் சொல்ற பதிலோ? அந்த நெருப்பிலே ஒரு மண்டை ஓடு ஷேப் தெரியல உனக்கு?”
அப்போதுதான் சட்டென்று அவனும் கவனித்தான். எரியும் ஜுவாலையில் ஒரு மண்டை ஓட்டு உருவ இருள் அப்பட்டமாகத் தெரிந்தது. “டேய் சிவா.. நெஜமா மச்சி. அங்க பாரேன் தெரியுது. ஆனா ஏண்டா இங்க எழுதினா அங்க எரியுது ?”
அவன் பதிலைக் கிழித்தபடிக்கு ஒரு மின்னல் சடாரென்று அருகில் பாய்ந்தது. அருள் மறுபடியும் கூவினான், “டேய் ராகேஷ்.. இதோ வந்திருச்சு பாரு பக்கத்துலயே பதில்”
“ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி உன்னை கவனிச்சிட்டிருக்கு மச்சி.. உன்னைப் பேய் பொறாண்டப் போகுது பாரு” நான் இன்னும் கொஞ்சம் ஆழம் கூட்டி அமைதியாகச் சொன்னேன். ஒரு சின்ன நெருக்கடியான அமைதி தொடர்ந்தது.
அர்ஜுன் தான் கலைத்தான். “டேய் சும்மா உளறாதீங்கடா. தூங்குங்கடா மூதேவிங்களா” என்று எரிச்சலாகப் பேசி விட்டுப் போர்வைக்குள் போய்விட்டான். ஆனால் அவன் இப்போதைக்குத் தூங்கமாட்டான். இப்படி நான்கு பேர் பேசிக் கொண்டிருக்கையில் நான் மட்டும் தூங்கப் போகிறேன் என்று நடுவில் போர்வைக்குள் போனவன் எவனும் என்றும் தூங்கிப் போனதாகச் சரித்திரமே இல்லையே.
மீண்டும் இரண்டு மின்னல்கள் நெருங்கித் தெறித்தன. குளிரும் இருளும் போட்டியிட்டுக் கூடின. எந்த நட்சத்திரமும் கண்ணில் படவில்லை. அவ்வப்போது காற்று வந்து வேகமாக அறைந்து போனது.
“சித்தார்த்து…. இது ஜென்மம் X, மர்ம தேசத்துல வர்ற மாதிரியே இருக்குல்லடா?”
அவன் பேசவில்லை. எவனுமே பதில் பேசவில்லை. நிசப்தம் இருளில் பெருகித்தெரிந்தது.
“மச்சி மச்சி எனக்கொண்ணு தோணுதுடா” – மூன்றாம் முறையாக அருள் கூவினான். இம்முறை அவன் அமைதியைக் கலைத்த விதம் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. திகிலோடே தொடர்ந்தான், “எங்க ஊருல இதே மாதிரி மொட்டை மாடியில தூங்கும்போது விடியுற நேரத்துல வெள்ளை உருவமா ஆவி கண்ணுக்குத் தெரியும்னு சொல்லுவாங்கடா. அப்போ படக்குன்னு கையைக் காலை அசைக்க முடியாம இறுகிக்குமாம். ரொம்பக் குளிருமாம். எங்க பாட்டி கூட சொல்லுவாங்க…”
“வெள்ளை ஆவி…. விடியற நேரம்…. நான் கூடக் கேள்விப்பட்டிருக்கேன்டா. எங்க ஊருல இசக்கிப்பேய்னு ஒண்ணு தினமும் காலைல வெள்ளந்திப் பசங்களையெல்லாம் மொட்டை மாடில வந்து எழுப்புமாம்”
நான் மிக அமைதியாகக் கேட்டேன். “ஏன் அர்ஜுனு , நீ எதும் பேயைப் பாத்திருக்கியாடா மொட்டை மாடில?”
அவன் ஈனஸ்வரத்தில் முனகினவாறே போர்வையை விலக்கிச் சொன்னான், “டேய் தூங்க விடுங்கடா…வேற பேச்சே கெடக்கலையா உங்களுக்கு, பயமா இருக்குடா”…. நான் சொல்லலை, போர்வைக்குள் போகிறவனெல்லாம் தூங்கிப் போவதாகச் சரித்திரமே கிடையாது!
இவனுக்கு மட்டும் ஒரு சரித்திரம் உண்டு. அர்ஜுன்.. இவன் ஆரோக்கியா பால் அர்ஜுன் இல்லை. ஒரு அப்பாவி பயந்தாங்கொள்ளி அர்ஜுன். இரண்டு பேய்களைப் பார்த்ததாக உறுதியாக நம்புகிறவன். அதில் ஒன்று நாங்கள் நடத்தின நாடகம் என்று இன்னும் தெரியாது அவனுக்கு. இன்னொன்று யார் நடத்தின நாடகம் என்று எங்களுக்கும் கூட தெரியாது. நிஜத்தில் பேய் கண்டால் இவனெல்லாம் பயந்து செத்தே பேயாவது உறுதி. அவ்வளவு தைரியம்! என்னதான் கும்மிருட்டில் கதவடைத்து, விளக்கணைத்து, சரவுண்ட் சவுண்டில் பேய் படங்கள் பார்த்தாலும், சில படங்கள் கிச்சுகிச்சு மட்டும்தான் மூட்டும், அப்பேற்பட்ட சம்பவங்களைக் கூட சுவாரசியமாக்குவதற்கு ஒரு பயந்தாங்கொள்ளி நண்பன் கூட்டத்தில் தேவை. அப்படித்தான் எங்களுக்கு அர்ஜுன். சுருக்கமாகச் சொன்னால், சந்திரமுகி பார்த்ததற்கே இரண்டு இரவுகள் தனியாக ஒண்ணுக்கு போகப் பயந்த வீரன் ! ராகேஷின் அறைத்தோழன்.
அர்ஜுனின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டு நாங்களும் பேயுரையாடல்களை முடித்துக் கொண்டு போர்வைக்குள் போனோம். மணி இரண்டரை. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மூச்சு விடுவது கேட்குமளவு நிசப்தம் மூழ்கியது, இடையில் சில நாய் ஊளைகள். பேய் நடமாட்டம் நாய் கண்ணுக்குத் தெரியுமாமே !
தொடரும்….