Home » அதிசயம் ஆனால் உண்மை » சுய சரிதை » பாலகங்காதர திலகர்!!!
பாலகங்காதர திலகர்!!!

பாலகங்காதர திலகர்!!!

லோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கியவர். ‘இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை’ என கருதப்படும் பாலகங்காதர திலகரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜூலை 23,  1856

இடம்: ரத்தினகிரி, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா

பணி: சுதந்திரப் போராட்ட வீரர்

இறப்பு: ஆகஸ்ட் 1, 1920

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘பால கங்காதர திலகர்’ என அழைக்கப்படும் லோகமான்ய திலகர் அவர்கள், 1856  ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23  ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள “ரத்தினகிரி” என்ற இடத்தில், கங்காதர் ராமச்சந்திரா திலக் என்பவருக்கும், பார்வதி பாய் கங்காதருக்கும் மகனாக மராத்தி சித்பவன் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.

திலகரின் தந்தை ஆசிரியராகவும், சமஸ்கிருதத்தில் புலமைப் பெற்றவராகவும் விளங்கினார். இவர் ஆசிரியப் பணியில் ஈடுபட்டு 1886ம் ஆண்டு தொடக்கப்பள்ளித் துணை ஆய்வாளராய் இருந்தார். திலகர், ‘கேசவராவ்’ என்று மூதாதையர் பெயராலும், ‘பாலன்’ என சிலரால் செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

திலகர் தன்னுடைய பள்ளிப்படிப்பை, பூனாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார். சமஸ்கிருதத்திலும், கணிதத்திலும் சிறந்து விளங்கிய அவர் “டெக்கான் கல்லூரியில்” சேர்ந்து கல்விக் கற்று, 1877 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். பிறகு, சட்டம் படிக்க முடிவு செய்து, சட்டக் கல்லூரியில் விண்ணப்பித்தார்.

அவருடைய தகுதியை ஆராய்ந்தறிந்த கல்லூரி முதல்வரும், பேராசிரியரும், ‘நீ கணிதத்தில் சிறப்பாக உள்ளாய், எனவே அதையே சிறப்புப் பாடமாகப் படித்தால், நல்ல எதிர்காலம்’ என்றனர். அதற்கு திலகர், “என்னுடைய நாடு, அடிமைப்பட்டு துன்புற்றுக்கிடக்கிறது.

சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக வாதாடி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தகைய தேசப்பற்று மிகுந்த வழக்கறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. எனவேதான், நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்!” என்றார். அவர் நினைத்தது போலவே, சட்டம் பயின்று பல தேச பக்தர்களுக்காக வாதாடி, அவர்களை சிறையிலிருந்து மீட்டார்.

திலகர் எந்தக் காலத்திலும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்களை மாற்றாமல் பின்பற்றி வந்தார். தலைப்பாகை, அங்கவஸ்திரம், காலணி ஆகியவையும் குடும்ப வழக்கப்படியே அணிந்தார். கல்லூரிக் காலத்திலும் அதேதான்.

உண்மையே  பேசினார்; அநியாயம் கண்டு வெகுண்டார். தேசபக்திக் கனல் பரப்பினார். அவர் கொண்ட வைராக்கியத்தின்படி வக்கீலாகி, சிறையிலிருந்த பல தேச பக்தர்களை விடுதலையடைய செய்தார்.

இவர் பரந்துபட்ட பல துறையிலும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அந்நியக் கல்வி முறையை கடுமையாக எதிர்த்தார். அதற்கு மாற்றாக இந்திய கல்விமுறையில் கல்வி புகட்ட விரும்பினார். சில நண்பர்களுடன் சேர்ந்து ‘நியூ இங்லீஷ் ஸ்கூல்’ என்ற பெயரில் பள்ளி தொடங்கினார். இப்பள்ளியின் மூலம் தேசிய உணர்வை எழுப்பினார்.

விடுதலைப் போராட்டத்தில் திலகரின் பங்கு

1881 ஆம் ஆண்டு, திலகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “கேசரி” என்னும் மராத்தி மொழி பத்திரிக்கையும் மற்றும் “மராட்டா” என்னும் ஆங்கில மொழி பத்திரிக்கையும் தொடங்கி, ஆங்கில அரசின் கீழ் பாரத மக்கள்படும் துன்பங்களைக் குறித்து வெளியிட்டார்.

இரண்டே ஆண்டுகளில் “கேசரி” இந்தியாவிலேயே அதிகம் விற்பனை கண்ட பத்திரிக்கையாக மாறியது.

இந்த பத்திரிக்கைகளில் மக்களுக்கு சுதந்திர மக்கள் ஒவ்வொருவரும் வீறு கொண்டு எழுந்து போராட துடித்தனர். கோலாப்பூர் சமஸ்தான நிர்வாகத்தினரிடம் ஆங்கிலேயரின் கொடுமையை ‘கேசரி’ இதழில் வெளியிட்டதற்காக 4 மாத சிறை தண்டனை பெற்றார். இதுவே அவரின் முதல் சிறை அனுபவம். விடுதலை செய்யப்பட்ட பின் 1880ல் நண்பர்களுடன் சேர்ந்து ‘டெக்கான் எஜூகேசனல் சொசைட்டி’யை ஏற்படுத்தினார். பின்னாளில் இதுவே பெர்க்யூஷன் காலேஜ்என்று விரிவுபட்டது.

விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்களைப் பற்றியும் எழுதப்பட்டது. இதனால், ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

1885 ஆம் ஆண்டு, திலகர் காங்கிரசில் சேர்ந்தார். 1896  ஆம் ஆண்டு பஞ்சாபில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே “பிளேக்” நோய் தீவிரமாக பரவியது. அதனை தடுப்பதற்கு, எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த இரக்கமற்ற ஆங்கில அரசு. சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலன் இல்லாமல், அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயர் துடைத்தார். விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை திலகர் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், கண்டித்து பத்திரிக்கைகளிலும் எழுதினார். இதற்காக திலகரை கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறைவாசத்திலிருந்து மீண்டபோது, மக்கள் அவரை லோகமான்யர்என்று அழைத்தனர். விடுதலைக்குப் பின், சுதந்திரப் போராட்டத்தில் தீவிரம் காட்டிய திலகர் 1898 சென்னை மற்றும் 1899 லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.

அப்போது பத்திரிகையில் புரட்சிகரக் கருத்துகளைப் புகுத்திவந்தார். அரசியலில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். ‘அந்நிய துணிகளை அணிய வேண்டாம், பஞ்ச காலத்தில் வரி கட்ட வேண்டாம்’ என எடுத்துரைத்தார். தீவிர எண்ணம் கொண்டவர்கள் திலகர்  மீது நம்பிக்கை வைத்தார்.

 

அரசியலில் தீவிரமாக செயல்பட்ட அவர், 1907 ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சி ‘மிதவாதிகள்’, ‘தீவிரவாதிகள்’ என இரு பிரிவுகளாக பிரிந்தது. திலகர், இரு பிரிவினரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று விரும்பினார். ஒற்றுமை இல்லையேல் சுதந்திரம் என்பது கனவு என்று கூறினார். எனினும் திலகர் தலைமையில் விடுதலை வீரர்கள் ஒருங்கிணைந்தனர். திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர்.

இதன் பிறகு மிதவாதிகளுக்கு ஆதரவு குறையத் தொடங்கியது. தீவிர கருத்துடைய திலகர் போன்றோர் மீது மதிப்பும் மரியாதையும் கூடியது. அந்நிய ஆட்சியை, வன்முறையை கைக்கொண்ட இளைஞர்கள், அரசினை கவிழ்க்க பயங்கரவாத இக்கங்களை தொடங்கினர்.

இப்படிப்பட்ட செயல்களுக்கு காரணம் காங்கிரஸ் தீவிர  தலைவர்களே என கருதிய ஆங்கில அரசு, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. போன்றோரை கைது செய்தது. வ.உ.சி. கைது செய்யப்பட்டதை எதிர்த்து கண்டன குரல் எழுப்பிய திலகரும், தண்டிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் ரங்கூன் மண்டேலா சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் “கீதா ரகசியம்” என்ற நூலை எழுதினார்.

இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்’ என்ற நூலை நமக்களித்தார் திலகர். ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று16.6.1914 அன்று விடுதலை அடைந்தார்.

திலகரின் தீவிர கருத்தினைக் கொண்டு நேதாஜி செயல்பட்டார். கோகலேயின் மிதவாத கருத்தால் மகாத்மா காந்தி செயல்பட்டார். மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு திலகரின் தன்னாட்சிக் கொள்கையை ஏற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.

நாட்டின் குடிமக்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டால்தான் சீக்கிரத்தில் சுதந்திரம் கிடைக்கும் என்ற திலகர், சத்திரபதி சிவாஜி விழாவுக்கு  புத்துயிர் கொடுத்து நாட்டு மக்களுக்கு தேசபக்தியை உணத்தினார். மக்கள் வீடுதோறும் குடும்பவிழாவாக கொண்டாடிவந்த விநாயகர் சதுர்த்தி விழாவை சமுதாய விழாவாக்கி,அவ்விழாவில் சுதந்திர ஆர்வத்தை உணர்த்தி, மக்களிடம் தேசபக்தியைப் பொங்கச் செய்தார்.

1919ல் ரௌலட் சட்டம் வந்தது. அதை எதிர்த்து மக்கள் போராடினர். அப்படி ஜாலியன் வாலாபாக் திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கூடியிருந்த ஆயிரக் கணக்கான மக்களை ஜெனரல் டயர் சுட்டான். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடந்தது. இந்நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியாக, ஆங்கில அரசு இந்தியாவுக்கு சிறிது சிறிதாக சுயாட்சி அளிப்பதாக கூறியது.

அப்போது,  காந்தியடிகள் அரசியலில் பங்கு பெற்றுவந்தார். இவரைக் குறிப்பிட்டு, “இந்தியாவுக்கு எதிர் காலத்தில் அவர் ஒருவரே தலைவராக இருக்கத் தகுதியுடையவர்” என்று திலகர் தெரிவித்தார்.

இறப்பு

தன்னுடைய இறுதி காலம் வரை, பாரத மக்களைக் காப்பாற்றி விடுதலைப் பெற வேண்டும் என போராடிய பால கங்காதர திலகர் அவர்கள், ஆகஸ்ட் 1, 1920 ஆம் ஆண்டு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தன்னுடைய 64 வது வயதில் காலமானார். திலகரின் மறைவு, இந்திய விடுதலைப் போராட்டதில் ஒரு பேரிழப்பு என்றாலும், அவர் விட்டுச் சென்ற கொள்கைகள் மற்றும் தேசப்பற்றாளர்கள் இந்தியாவின் விடுதலைக்காக உறுதியுடன் போராடினர்.

ஆங்கில ஆட்சியை எதிர்த்து தீவிரமாகப் போராடி, “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய திலகர், கல்வி தேசத்தொண்டு, பத்திரிக்கை என பல வழிகளில் இந்திய மக்கள் அனைவரின் மனத்திலும் விடுதலை நெருப்பை பற்றவைத்தவர். ஒவ்வொரு இந்தியனையும் தன்னுடைய உரிமைக்காகவும், விடுதலைக்காக போராடத் தூண்டிய திலகரின் கொள்கைகள் போற்றத்தக்க ஒன்றாகும்.

1908ம் ஆண்டில் பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக் கல்லூரி எதிரில் திலகர் திடல் உருவானது. இப்பெயரைச் சுப்பிரமணிய சிவா முன்மொழிந்தார். சுப்பிரமணிய பாரதி வழிமொழிந்தார். விடுதலைப் போராட்ட வீரர்கள் பலரும் இங்கிருந்தே உத்வேகம் பெற்றுள்ளனர்.

இந்த இடத்தில் மகாம்தா காந்தி 7 முறை பேருரையாற்றியது வரலாறு. ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய செய்தியை இந்த இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்தான் காந்தி குறிப்பிட்டார். இதன் பின்னரே இந்தப் போராட்டம் குறித்த தீர்மானம் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top