Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பிறவி மர்மங்கள் – 20

பிறவி மர்மங்கள் – 20

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடீரென்று நடுக்கத்துடன் விழித்தெழுந்தேன். மீண்டும் மீண்டும் கேத்தரினுடைய முகம் என் நினைவில் வந்துகொண்டே இருந்தது. மிகுந்த சோகத்துடன் அவளது முகம் காணப்பட்டது. அவளுக்கு என் உதவி தேவைப்படுவது போன்ற எண்ணம் தோன்றியது. மணியைப் பார்த்தேன். அதிகாலை 3:36. வெளியிலிருந்து எந்த ஓசையையும் கேட்டு நான் எழுந்ததாகத் தோன்றவில்லை. மனைவி கரோல் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். நடந்ததை சற்று மறந்துவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தேன்.

சரியாக அதே நேரத்தில், 3:30 மணியளவில், கேத்தரின் பயங்கர கனவு கண்டு பயத்துடன் தூக்கத்தில் இருந்து விழித்திருக்கிறாள். உடல் முழுவதும் வியர்த்து விட்டது. நாடித்துடிப்பு உச்சவேகத்துக்கு சென்று விட்டது. கேத்தரின் தியானம் செய்து இயல்பு நிலைக்கு திரும்ப முடிவெடுத்திருக்கிறாள். எனது உருவத்தை மனக்கண் முன் கொண்டு வந்து, என் குரலொலியைக் கேட்பதுபோல் கற்பனை செய்து, சிறிது சிறிதாக உறக்கத்துக்குச் சென்றிருக்கிறாள்.

 

கேத்தரினுடைய ஆருடம் கூறும் திறமை வளர்ந்துகொண்டே இருந்தது. எனக்கும் அந்த திறமை ஒட்டிக்கொண்டது. மனோவியலில் எண்ணங்களின் இடமாற்றம், மற்றும் இடமாற்றத்தின் எதிர்விளைவு என்று இரு நிகழ்வுகள் இருப்பதாக என்னுடைய பேராசிரியர்கள் பேசிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எண்ணங்களின் இடமாற்றம் என்பது, நோயாளி தன்னுடைய நினைவுகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றை தன்னுடைய மனோதத்துவ நிபுணரிடம் இடமாற்றம் செய்வதாகும்.

இடமாற்றத்தின் எதிர்விளைவானது, இடமாற்றத்தின் காரணத்தினால், மனோதத்துவ நிபுணரின் தன்னிச்சையற்ற, உணர்வுமயமான செயல்கள் ஆகும். ஆனால் அன்று அதிகாலை 3:30 மணியளவில் நிகந்த நிகழ்வு, இந்த விளைவுகளைச் சாராது. இது இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு டெலிபதி தொடர்பு போல், இயல்பான அலைவரிசைகளுக்கு அப்பால் நடந்திருக்கிறது. நடந்து கொண்டிருக்கும் ஹிப்னாடிஸ சிகிச்சை ஏதோ ஒரு பாதையை திறந்துவிட்டிருக்கிறது. அல்லது எங்களை கவனித்துக் கொண்டிருக்கும், வழிகாட்டி ஆன்மாக்கள் அல்லது காக்கும் தேவதைதான் இந்த நிகழ்வுக்குக் காரணமா? நான் வியப்பின் எல்லைக்குச் சென்றேன்.

 

அடுத்த ஹிப்னாடிஸ அமர்வின்பொழுது, கேதரின் வெகுவிரைவில் சமாதி நிலைக்குச் சென்றுவிட்டாள். சென்ற சில நிமிடங்களிலேயே பதற்றத்துடன் அவள் குரல் ஒலித்தது. “மிகப்பெரிய மேகக்கூட்டத்தைக் காண்கிறேன் . . . . . . எனக்கு மிகவும் அச்சமாக உள்ளது. இங்கே இருக்கிறது.” அவளது சுவாசத்தின் வேகம் அதிகரித்தது.

“இன்னும் இருக்கிறதா?” நான்.

“தெரியவில்லை. வந்தவுடன் மறைந்துவிட்டது. . . . . மலைமேல் சென்றுவிட்டது.” வேகமான சுவாசத்துடன், பதற்றத்துடன் காணப்பட்டாள். வெடிகுண்டு தாக்குதலை பார்த்திருக்கிறாள் என்று எண்ணினேன். அவளால் எதிர்காலத்தை பார்க்க முடியுமா? என்ற கேள்வி என் மனதில் தோன்றியது.

“மலையைக் காணமுடிகிறதா? ஏதேனும் வெடியோசைபோல தெரிகிறதா?”

“தெரியவில்லை.”

“பின் ஏன் அஞ்சுகிறாய்?”

“திடீரென்று நிகழ்ந்து விட்டது. அங்கேதான் நடந்தது. மிகவும் புகைமூட்டமாக உள்ளது. மிகவும் பெரியது. பக்கத்திலேயே உள்ளது. ஆ . . . . . .” அலறினாள்.

“நீ பாதுகாப்பாகத்தான் இருக்கிறாய். உன்னால் இன்னும் அருகில் செல்ல முடிகிறதா?”

“நான் அருகில் செல்ல விரும்பவில்லை.” உறுதியாக மறுத்தாள். இவ்வளவு உறுதியாக அவள் இதுவரை மறுத்ததில்லை.

“அருகில் செல்ல ஏன் அஞ்சுகிறாய்?”

“ஏதோ கெமிக்கல்போல் தோன்றுகிறது. பக்கத்தில் சென்றால் மூச்சு திணறுகிறது.” மூச்சுவிட சிரமப்படுவது தெரிந்தது.

“ஏதாவது எரிவாயுபோல் உள்ளதா?” மலையிலிருந்து வருகிறதா? எரிமலை வெடித்துள்ளதா?”

“அப்படித்தான் நினைக்கிறேன். ஒரு பெரிய நாய்க்குடைபோல் உள்ளது. வெண்மையாக உள்ளது.”

“வெடிகுண்டு இல்லை அல்லவா? அணுகுண்டுபோல ஏதாவதா?”

“எரிமலை வெடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். மிகவும் அச்சமாக உள்ளது. மூச்சுவிட சிரமமாக உள்ளது. காற்றில் தூசி அதிகமாகிவிட்டது. எனக்கு இங்கே இருக்க விருப்பமில்லை.” சிறிது சிறிதாக இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தாள். அந்த பயங்கரமான இடத்திலிருந்து வெளிவந்து விட்டாள்.

“இப்போது நன்றாக சுவாசிக்க முடிகிறதா?”

“ஆமாம்”

“இப்போது என்ன காணமுடிகிறது?”

“ஒரு நெக்லசைக் காண்கிறேன். யார் கழுத்திலோ உள்ளது. சில்வர் நிறத்தில் உள்ளது. அதில் நீலநிற கல் தொங்கவிடப்பட்டிருக்கிறது. அதன்கீழே சிறுசிறு கற்களும் தொங்குகின்றன.”

“நீலநிற கல்லில் வேறு எதுவும் தென்படுகிறதா?”

“இல்லை. கண்ணாடிபோல் அதனை ஊடுருவி பார்க்க முடிகிறது. அதனை அணிந்திருக்கும் பெண்ணுக்கு கூந்தல் கருமையாக உள்ளது. நீலநிற தொப்பி அணிந்திருக்கிறாள். . . . . . அந்த தொப்பியில் சிறகுகள் காணப்படுகின்றன. வெல்வெட் உடை அணிந்திருக்கிறாள்.”

“அந்த பெண்ணை யாரென்று உனக்குத் தெரிகிறதா?”

“இல்லை.”

“நீதான் அந்த பெண்ணா? நீ அங்குதான் இருக்கிறாயா?”

“தெரியவில்லை.”

“ஆனால் உன்னால் பார்க்கமுடிகிறது அல்லவா?”

“ஆமாம். ஆனால் நான் அந்த பெண் இல்லை.”

“அவளுக்கு என்ன வயது இருக்கும்?”

“சுமாராக நாற்பது இருக்கலாம். ஆனால் மிகவும் வயதானவராக தென்படுகிறாள்.”

“என்ன செய்துகொண்டிருக்கிறாள்?”

“மேசை பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிறாள். மேசையில் வாசனை திரவியம் உள்ள பாட்டில் உள்ளது. வெண்மையும் பசுமையும் கலந்த மலர்கள் அதில் இருக்கின்றன. தலைவாரும் பிரஷ்ஷும், சில்வர் நிறமுடைய கைப்பிடி கொண்ட சீப்பும் உள்ளது.” அவளது நுணுக்கமான விவரணைகள் என்னை வியப்புக்கு உள்ளாக்கியது.

“அது அவளுடைய அறையா? அல்லது ஏதாவது கடையா?”

“அவளுடைய அறைதான். அங்கு ஒரு கட்டில்; பழுப்பு நிற கட்டில் உள்ளது. அதன் கால்கள் நான்கு தூண்கள்போல் கட்டில் மேலேயும் சென்றுள்ளது. மேசைமேல் ஒரு படம் உள்ளது.”

“படமா?”

“ஆமாம். அதைத்தவிர அந்த அறையில் வேறு படங்கள் இல்லை. வேடிக்கையான திரைச்சீலைகள், கருமையான திரைச்சீலைகள் உள்ளன.”

“வேறுயாரும் இருக்கிறார்களா?”

“இல்லை.”

“உனக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு?”

“நான் அவளுக்குப் பணிபுரிகிறேன்.” மீண்டும் வேலைக்காரியாக பிறந்திருக்கிறாள்.

“அவளுடன் நீண்ட நாட்கள் பழகியிருக்கிறாயா?”

“இல்லை. சிலமாதங்களாகத்தான் தெரியும்.”

“உனக்கு அந்த நெக்லஸ் பிடித்திருக்கிறதா?”

“மிகவும் பிடித்திருக்கிறது. மிகவும் அழகாக, நளினமாக இருக்கிறது.”

“நீ எப்பொழுதாவது நெக்லஸ் அணிந்திருக்கிறாயா?”

“இல்லை.” அவளுடைய ஒரு வரி பதில்கள், என்னுடைய கேள்வி கேட்கும் முறையை மாற்றியமைக்க வேண்டிய எண்ணத்தைத் தோற்றுவித்தது. அவளுடைய பதில்கள் என்னுடைய பதின்மவயது மகனை நினைவுபடுத்துகிறது.

“இப்பொழுது உன்னுடைய வயது என்ன?”

“பதின்மூன்று, பதினான்கு இருக்கலாம். . . . .” என் மகனின் வயதையொத்துதான் இருக்கிறது.

“உன்னுடைய வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாயா?”

“இல்லை. வெளியேறவில்லை.” என்னை திருத்தினாள். “நான் இங்கு வேலை செய்வதற்காகத்தான் வந்திருக்கிறேன்.”

“அப்படியானால் உன் வீட்டுக்கு திரும்பிவிடுவாயா?”

“ஆமாம்.” அவளுடைய பதில்கள் கேள்விகள் கேட்க உகந்ததாக இல்லை.

“அருகில்தான் வசிக்கிறாயா?”

“பக்கத்தில்தான் வசிக்கிறோம். . . . . நாங்கள் ஏழைகள். நாங்கள் வேலை செய்தால்தான் பிழைக்க முடியும். . . . . வேலை செய்தாகவேண்டும்.”

“உன் எஜமானியின் பெயரென்ன?”

“மெலிண்டா.”

“உன்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்களா?”

“ஆமாம்.”

“உன் வேலை கடுமையானதா?”

“அப்படியெல்லாம் இல்லை.” பதின்ம வயதினர்களுடன் உரையாடுவது சுலபமானது கிடையாது. சந்தர்ப்பவசமாக எனக்கு அதில் அனுபவமிருக்கிறது.

“சரி. இப்பொழுதும் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா?”

“இல்லை.”

“எங்கிருக்கிறாய்?”

“வேறொரு அறையில் இருக்கிறேன். கருப்புத் துணியால் மூடிய மேசை இருக்கிறது. . . . . அதன் ஓரங்களில் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட பச்சிலைகளின் மணம் வீசுகிறது. . . . . . கடுமையான மணம். “

“அவை உன் எஜமானியைச் சேர்ந்ததா? அவர்கள் அதனை அதிகமாக உபயோகிக்கிறார்களா?”

“இல்லை. இது வேறு ஒருவருடைய அறை.”

“யாருடைய அறை?”

“இது வேறு கருப்புப் பெண்ணுடைய அறை.”

“கருப்பு நிறம்? உன்னால் அவளைக் காணமுடிகிறதா?”

“தலையில் முக்காடு அணிந்திருக்கிறாள். தலையை நன்றாக மூடியிருக்கிறாள். வயதானதால் அவள் தோல்களில் அதிக சுருக்கங்களைக் காண்கிறேன்.”

“உனக்கும் அவளுக்கும் என்ன உறவு?”

“நான் இப்பொழுதான் அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன்.”

“எதற்காக?”

“அவள்தான் காகித அட்டைகளைப் பார்த்துக் கூறுவாள்.” கேத்தரின் ஆருடம் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள் என்று என் உள்ளுணர்வு உணர்த்தியது. இது ஒரு முக்கியமான திருப்புமுனை. என்னை அறியாமலே இருநூறு வருடங்களுக்குமுன், கேத்தரினுடைய வாழ்க்கையில் என்ன நிகழ்கிறது என்று எனக்கும் தெரிந்திருக்கிறது. அவள் ஆருடம் பார்க்கச் சென்றிருப்பதை உணர்ந்திருக்கிறேன். நிகழ்கால பிறவியில் கேத்தரின் ஆருடம் பார்க்கச் சென்றதில்லை. ஜோதிடம் போன்றவைகளைப் பற்றி அவளுக்கு அச்சம் அதிகம்.

“அவள் எதிர்காலம் பற்றிக் கூறுவாளா?”

“அவளால் அவற்றைப் பார்க்க முடியும்.”

“நீ அவளைக் கேள்விகள் கேட்க வேண்டுமா? எதைப்பற்றி தெரிந்துகொள்ள விழைகிறாய்? உனக்கு என்ன தெரியவேண்டும்?”

“ஒரு ஆடவரைப் பற்றி. . . . . . அவரை நான் மணந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.”

“அவள் அந்த அட்டைகளைப் பார்த்து எப்படி கூறுவாள்?”

“சில காகித அட்டைகள் வைத்திருக்கிறாள். . . . . அதன்மேல் சில குச்சிகளும், பூக்களும் உள்ளன. . . . . குச்சிகள், பூக்கள், அம்புகள், ஏதேதோ கோடுகள் தென்படுகின்றது. இன்னொரு அட்டை ஒரு கிண்ணத்தில் உள்ளது. . . . . ஒரு அட்டையில் ஒரு மனிதன், இல்லை, ஒரு சிறுவன் கவசத்துடன் இருக்கிறான். நான் மணமுடிப்பேன் என்று கூறுகிறான். ஆனால் அந்த ஆடவரை அல்ல. வேறொருவரை. . . . . . வேறொன்றும் தெரியவில்லை.”

“அந்த வயதானவளைப் பார்க்கிறாயா?”

“சில நாணயங்களைப் பார்க்கிறேன்.”

“இன்னும் அங்கேதான் இருக்கிறாயா?”

“ஆமாம்.”

“அந்த நாணயங்கள் எப்படி இருக்கின்றன?”

“தங்க நாணயங்கள். சதுர வடிவில் உள்ளது. அதன் ஒரு பக்கத்தில் கிரீடம் தென்படுகிறது.”

“அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது?”

“ஏதோ அயல்மொழியில் எண்கள் உள்ளன. ரோமன் எழுத்துக்கள் பத்து மற்றும் ஒன்று போலவும் உள்ளது.”

“எந்த வருடத்தில் இருக்கிறாய்?”

“எந்த வருடம் என்று தெரியவில்லை.” மௌனமானாள்.

“அந்த வயதானவள் கூறிய ஆருடம் பலித்ததா?”

“அவள் போய்விட்டாள். . . . . அவள் போய்விட்டாள். எனக்குத் தெரியவில்லை.”

“இப்பொழுது ஏதாவது பார்க்க முடிகிறதா?”

“இல்லை.”

அவள் பதில் என்னை வியப்புக்குள்ளாக்கியது. எங்கே இருக்கிறாள் என்று புரியவில்லை. “உன் பெயர் என்ன?” ஏதாவது பிடி கிடைக்குமா என்று முயற்சித்தேன்.

“அந்த இடத்தைவிட்டு வந்து விட்டேன்.” அந்த பிறவியை முடித்து விட்டாள். மரணத்தின் அனுபவத்தை இம்முறை கடக்கவில்லை. ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள். இந்த பிறவியில் முக்கியமான விஷயங்கள் எதுவும் தென்படவில்லை. நுணுக்கமான விவரணைகள் கிடைத்தது. ஆருடம் பார்க்க சென்றிருந்தது ஒரு வித்தியாசமான தகவல். நிமிடங்கள் கழிந்தது.

“இப்பொழுது ஏதாவது காணமுடிகிறதா?”

“இல்லை.”

“ஓய்வெடுக்கிறாயா?”

“ஆமாம். . . . . பல வண்ணங்கள் கொண்ட நகைகள்.”

“நகைகளா?”

“ஆமாம். உண்மையில் அவை விளக்குகள். நகைகள் போல காட்சியளிக்கின்றன.”

“வேறென்ன காண்கிறாய்?”

“நான் . . . . . “ மௌனமானாள். அவள் குரல் கணீரென்று ஒலிக்க ஆரம்பித்தது. வழிகாட்டி ஆன்மாக்கள் வந்திருப்பதை அது உணர்த்தியது. “பல்வேறுபட்ட சிந்தனைகளும் வார்த்தைகளும் எங்கும் ஒலிக்கின்றன. . . . . இணக்கமாக சேர்ந்து வாழ்வதற்காக . . . . . சமநிலையை பெறுவதற்காக.”

“ஆமாம். நான் இதைப்பற்றி அறிய விரும்புகிறேன்.”

“இப்பொழுது அனைத்தும் வார்த்தைகள் அளவிலேயே உள்ளது. ஆமாம். இணக்கமாக வாழ்வது என்பது வார்த்தைகள் அளவிலேயே உள்ளது.” புலமையுடன் பேசும் வழிகாட்டி ஆன்மாவின் குரலைக் கேட்டு நான் சிலிர்ப்படைந்தேன்.

பதில் தொடர்ந்தது. “அனைத்து உயிர்களும், இயக்கங்களும் ஒருங்கினைந்து சமச்சீருடன் இருக்க வேண்டும். இயற்கை சமநிலையில் இயங்குகிறது. விலங்குகள் ஒருங்கிணைந்து வாழ்கின்றன. மனிதன் இன்னும் அவற்றை கற்றுக்கொள்ளவில்லை. தங்களை தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். இணக்கமின்றி இருக்கிறார்கள். அதற்கான திட்டங்களும், எண்ணங்களும் இல்லை. இது இயற்கைக்கு மாறானது. சக்தியும், வாழ்க்கையும் இயற்கையில் புதைந்திருக்கின்றன. மனிதன் இயற்கையை அழிக்கிறான். சக மனிதர்களை அழிக்கிறான். முடிவில் அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்ள நேரிடும்.”

இது ஒரு முன் அறிகுறியான எச்சரிக்கைக் கொண்ட ஆருடம். உலகம் எல்லா காலகட்டங்களிலும் பிரச்சனைகளையும், குழப்பங்களையுமே கொண்டிருக்கிறது. அதில் நல்ல மாற்றம் ஏற்படவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். “எப்பொழுது இந்த நிகழ்வு நடைபெறக்கூடும்?” வினவினேன்.

“நீ நினைப்பதைக் காட்டிலும் விரைவில் ஏற்பட்டுவிடும். இயற்கை அழியாது. தாவரங்களும் அழியப்போவதில்லை. ஆனால் மனிதகுலம் தப்பிக்கப்போவதில்லை.”

“இதைத் தவிர்க்க எங்களால் ஏதேனும் செய்ய இயலுமா?”

“இல்லை. அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.”

“எங்கள் வாழ்நாளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுமா? எங்களால் இதை மாற்ற இயலுமா?”

“உங்கள் வாழ்நாட்களில் நடைபெறாது. அந்த நேரத்தில் நீங்கள் வேறு பரிமாணத்தில், வேறு நிலைகளில் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் நிகழப்போவதைக் காண்பீர்கள்.”

“மனிதகுலத்துக்கு கற்பிக்க வழியேதும் உள்ளதா?” தப்பிக்க வழியேதும் இருக்கிறதா என்று ஆதங்கத்துடன் கேட்டேன்.

“வேறு நிலையில் அதனைச் செய்ய இயலும். அப்பொழுது அவற்றைக் கற்றுக்கொள்வீர்கள்.”

“நல்லது. நமது ஆன்மா வேறு நிலைகளுக்கு முன்னேறிவிடும் அல்லவா?”

“ஆமாம். இங்கு இருக்கமாட்டீர்கள். . . . . . நீங்கள் கூறுவதுபோல் வேறுநிலைகளுக்கு முன்னேறுவீர்கள். நிகழ்பவைகளைக் காண்பீர்கள்.”

“ஆமாம்.” ஒத்துக்கொண்டேன். “நான் மற்றவர்களுக்கு இவற்றைக் கற்பிக்க வேண்டும். ஆனால் எப்படி எல்லோரையும் அடைவது என்று தெரியவில்லை. அவர்களாகவே கற்றுக்கொள்ள வழியேதும் உள்ளதா?”

“உன்னால் எல்லோரையும் அடையமுடியாது. அழிவைத் தவிர்க்க நீ எல்லோருக்கும் கற்பிக்க வேண்டும். ஆனால் உன்னால் முடியாது. அழிவைத் தவிர்க்க முடியாது. அவர்கள் வேறு நிலைக்கு முன்னேறும்பொழுது, அவர்களாகவே உணர ஆரம்பித்து விடுவார்கள். அமைதி பிறக்கும். ஆனால் இங்கு இல்லை. வேறு பரிமாணத்தில் அமைதி தவழும்.”

“முடிவில் அமைதி ஏற்படுமல்லவா?”

“ஆமாம். ஆனால் வேறு நிலைகளில் ஏற்படும்.”

“அதிக காலம் பிடிக்கும்போல் தோன்றுகிறதே.”

“மக்கள் சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்துபவர்களாக இருக்கிறார்கள். பொறாமை, பதவிவெறி, எதிர்பார்ப்புகள் அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அன்பையும், பகிர்தலையும், ஒழுக்கங்களையும் மறந்துவிட்டார்கள். கற்றுணர்வதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.”

“ஆமாம். நான் அப்படிப்பட்டவர்களுக்கு உதவிசெய்வதற்காக எழுதலாமா? வேறு ஏதாவது வழிகள் உள்ளதா?”

“உனக்கே தெரியும். நாங்கள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவை வீணான காரியம். வேறு நிலைகளுக்குச் சென்று அழிவைக் காண்பதென்பது மாற்ற முடியாத ஒன்று. அனைத்து மக்களுக்கும் இயற்கையில் வேறுபாடில்லை. ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவர் இல்லை. இவைகள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள்.”

“ஆமாம்.” ஒத்துக்கொண்டேன். ஆழ்ந்த கருத்துக்களை மனதில் மனதில் உள்வாங்கிக் கொள்வதற்கு எனக்கு இன்னும் அவகாசம் தேவை. கேத்தரின் மௌனமானாள். கடந்த ஒரு மணிநேரத்தில் நிகழ்ந்த உரையாடல்களை உள்வாங்கி அசைபோட்டுக் கொண்டிருந்தேன்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top