Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பிறவி மர்மங்கள் – 3

பிறவி மர்மங்கள் – 3

கேத்தரின் சமாதி நிலையில் இருந்தபோது மிகவும் பொறுமையாகவும், வேண்டுமென்றே முணுமுணுப்பாகவும் பேசினாள். அதனால் கேத்தரின் கூறியதில் ஒவ்வொரு வார்த்தையையும் குறித்துக்கொள்வது எளிதாக இருந்தது. (கேத்தரின் மீண்டும் மீண்டும் கூறிய விஷயங்களை இங்கு தவிர்த்திருக்கிறேன்.)

கேத்தரினை இரண்டு வயதுக்கு முன்பு அழைத்துச் சென்றேன். ஆனால் அவளுக்கு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் எதுவும் நடந்ததாக ஞாபகம் இல்லை. அவளை “உனக்கு பயம் அதிகம் உள்ள சூழ்நிலைக்குச் செல்” என்று ஆணையிட்டேன். ஆனால் அவளிடமிருந்து வந்த பதிலுக்கு நான் என்னைத் தயார்படுத்தியிருக்கவில்லை.

கேத்தரின் “ஒரு பிரம்மாண்டமான தூண்களுடன் அமைந்த வெண்ணிற கட்டிடத்தைப் பார்க்கிறேன். அந்த கட்டிடத்துக்கு செல்ல படிகள் உள்ளன. கட்டிடத்துக்கு முன்புறம் திறந்த வெளியாக இருக்கிறது. கதவுகள் இல்லை. நான் கனமான பெரிய அங்கியை அணிந்திருக்கிறேன். நான் பின்னல் போட்ட மஞ்சள் நிற முடியோடு இருக்கிறேன்.” என்று கூறினாள்.

நான் மிகவும் குழப்பமடைந்தேன். என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. அவளிடம், அப்பொழுது என்ன வருடம், உன் பெயர் என்ன என்று கேட்டேன். “என் பெயர் அரோண்டா. எனக்கு பதினெட்டு வயதாகிறது. அந்த கட்டிடத்துக்கு முன்புறம் பெரிய சந்தை இருக்கிறது. சந்தையில் பெரிய கூடைகள் நிறைய இருக்கிறது. முதுகில் சுமந்து கொண்டுவரக்கூடிய கூடைகளாக உள்ளது. நாங்கள் பெரிய பள்ளத்தாக்கில் வசிக்கிறோம். அங்கு தண்ணீர் இல்லை. வருடம் 1866. அந்த நிலம் மிகவும் வெட்பமாகவும், மணலாகவும், தரிசாகவும் உள்ளது. அங்கே ஒரு கிணறு உள்ளது. ஆறுகள் எதுவுமில்லை. தண்ணீர் அந்தப்பள்ளத்தாக்கிற்கு மலையிலிருந்து வருகிறது.” சுற்றுச்சூழல் குறித்து கேத்தரின் கூறிய பிறகு, அவளை இன்னும் சிலவருடங்கள் முன்னோக்கி சென்று, பார்ப்பதை கூறுமாறு உத்தரவிட்டேன்.

“மரங்கள் அதிகமாக உள்ளன. சாலை கற்களால் ஆனதாக உள்ளது. அடுப்பு வைத்து சமைத்துக்கொண்டிருக்கிறார்கள். என் முடி மஞ்சள் நிறமாக உள்ளது. நான் பிரௌவுன் நிற உடை அணிந்திருக்கிறேன். கால்களில் செருப்பு அணிந்திருக்கிறேன். எனக்கு வயது இருபந்தைந்து. எனக்கு க்ளெஸ்ட்ரா என்ற பெண் குழந்தை இருக்கிறது. . . . . அவள் ரேச்சல். (ரேச்சல் கேத்தரினின் சகோதரனின் மகள். ரேச்சலும் கேத்தரினும் மிக அன்னியோன்னியமாக பழகுவார்கள்.) வெப்பம் தாங்க முடியவில்லை.”

நான் மிகவும் திடுக்கிட்டேன். என் வயிற்றில் ஏதோ செய்தது. அந்த அறை திடீரென்று குளிர்ந்ததாக மாறியதாக உணர்ந்தேன். கேத்தரின் கண்டதும், கூறியதும் மிகவும் நிச்சயமானதாக இருந்தது. எதுவும் உத்தேசமானதாக இல்லை. அவள் கூறிய காலக்கட்டம், பெயர்கள், அணிந்திருக்கும் உடைகள், மரங்கள் எல்லாம் அவளுக்கு தெளிவாக தெரிந்தன. இங்கு என்னதான் நடக்கிறது? அவள் மகள் இப்போது எப்படி அவள் அண்ணன் மகளாக இருக்க முடியும்? என் குழப்பம் அதிகமாகியது. நான் ஆயிரக்கணக்கான மனநோயாளிகளுக்கு ஹிப்னடைஸ் சிகிச்சை அளித்திருக்கிறேன். ஆனால் கேத்தரின் சொன்னதுபோல் யாரும் கூறியதில்லை.

நான் என் கனவிலும் கூட நினைத்ததில்லை. நான் கேத்தரினை இன்னும் முன்னோக்கி, அவள் இறக்கும் நிலைக்கு வருமாறு கூறினேன். கற்பனைக் கெட்டாத நிலையில் இருப்பவளிடம் எனக்கு என்ன கேட்பதென்று தெரியவில்லை. அவளுடைய பயத்துக்கும், கனவுகளுக்கும் மூலக்காரணமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சியை கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். அவள் இறக்கும் தருவாயில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நம்பினேன். என் நம்பிக்கைக்கு தோதாக அவர்கள் கிராமத்தை வெள்ளமோ, கடல் கொந்தளிப்போ அழித்துள்ளதை கூறினாள்.

“பெரிய அலைகள் மரங்களை சாய்த்துக்கொண்டிருக்கிறது. ஓடுவதற்கு இடமில்லை. அதிகம் குளிருகிறது. தண்ணீரும் ஐஸ் போல் இருக்கிறது. என் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். என்னால் முடியவில்லை. என் பிடியிலிருந்து நழுவவிடாமல் அவளை இறுக பிடித்துக்கொண்டேன். நான் மூழ்குகிறேன். தண்ணீர் குடிக்க ஆரம்பித்துவிட்டேன். மூச்சு விட முடியவில்லை. தண்ணீரை முழுங்கவும் முடியவில்லை. . . . . உப்புத்தண்ணீர். . . . . என் குழந்தை என் பிடியிலிருந்து நழுவிவிட்டது.” கேத்தரின் மூச்சுவிட திணறுவது தெரிந்தது. திடீரென்று அவள் உடல் சாந்தமடைந்தது. அமைதியானாள். இயல்பாக மூச்சு விட ஆரம்பித்தாள்.

“மேகங்கள் தெரிகின்றது. . . . . என் குழந்தை என்னுடன் உள்ளது. எங்கள் கிராமத்து மக்களை காண முடிகிறது. என் சகோதரனை பார்க்கிறேன்.”

கேத்தரின் அமைதியானாள். அந்த பிறவி முடிந்துவிட்டது. அவள் இன்னும் சமாதி நிலையிலிருக்கிறாள். நான் மூச்சடைத்து நின்றேன்.முற்பிறவி? மறுபிறவி? என்னுடைய மருத்துவ அறிவு அவள் கற்பனை கலக்காத உண்மையைக் கூறியதை அறிவுறுத்தியது. சொந்தமாக இட்டுக்கட்டுவதாக தோன்றவில்லை. அவள் நினைவுகள், விளக்கங்கள், சின்ன சின்ன விவரங்கள் அனைத்தும், அவள் விழித்திருக்கும் நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டவைகளாக உள்ளன. கேத்தரினிடமிருந்து பெற்ற தகவலுக்கும், அவளுடைய பொதுவான குணத்துக்கும், அவள் மனநோயின் தன்மைகளுக்கும் உள்ள தொடர்புகளை நினைக்க எனக்கு மலைப்பு ஏற்பட்டது. ஒருவேளை அவளுக்கு எண்ணமும் செயலும் மாறுபடுகிற மனக்கோளாறு இருக்குமா? மனப்பிறழ்வா? (Schizophrenia ) இல்லை.

அவளுக்கு அந்த மாதிரி அறிகுறிகள் எதுவும் இருந்தது கிடையாது. கேதரின் எப்பொழுதும், காதுக்குள் யாரோ பேசுவதுபோல் இருக்கிறது என்றோ, அல்லது என் கண்ணில் கற்பனை காட்சிகள் தெரிகிறது என்றோ கூறியதோ, உளறியதோ கிடையாது. கற்பனை உலகில் அவள் இருந்தது கிடையாது. உண்மையையும் கற்பனையையும் அவள் குழப்பிக் கொண்டது கிடையாது. பலபேராக தன்னை நினைக்கும் நிலையோ, வெவ்வேறு நேரங்களில் மாறுபட்ட மனநிலையோ அவளுக்கு கிடையாது. ஒரே ஒரு கேத்தரின் மட்டும்தான் இருந்திருக்கிறாள். இயல்பான நிலையில் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவளுக்கே தெரியும்.

கேத்தரின் மனத்தளவில் சமுதாயத்துடன் ஒத்துப்போகாதவளாகவோ, சமுதாய விதிகளுக்கு எதிரானவளாகவோ இருந்தது கிடையாது. அவள் நடிக்கக் கூடியவள் அல்ல. அவளுக்கு மனப்பிரம்மை கிடையாது. மாத்திரைகள் உட்கொள்வதும் இல்லை. ஆல்கஹால் குடிப்பதுகூட மிகக்குறைவாக, கட்டுப்பாட்டுக்குள் உள்ள அளவுதான். ஹிப்னடைஸ் செய்தநிலையில் அவளுடைய தெளிந்த அனுபவங்களைக் கொண்டு, அவளுக்கு நரம்புதளர்ச்சியோ, மனோவியாதியோ இருக்கிறதென்று சொல்லும்படியாக இல்லை.

அவள் கூறியவை அனைத்தும் ஆழ்மனதில் உள்ள நினைவுகள். ஆனால் அவை எங்கிருந்து வந்தவை? எனக்கு அதிகம் அறிமுகமில்லாத பிறப்பு, மறு பிறபிறவி நினைவுகளை தொடுவதாக உணர்ந்தேன். இருக்காது? அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட என் அறிவு ஒத்துக்கொள்ள மறுத்தது. நான் மனதுக்குள் கூறிக்கொண்டாலும் கண்ணெதிரே நிகழ்வதற்கு என்னால் விளக்கங்கள் கூற இயலவில்லை. என்னால் உண்மையை மறுக்கவும் இயலவில்லை.

தொடர்ந்து சொல்லுமாறு கேத்தரினை பணித்தேன். நடப்பது எனக்கு வியப்பாக இருந்தது. அவள் மேலும் இரண்டு பிறவிகளின் நிகழ்வுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஞாபகப்படுத்தினாள்.

“என் உடையில் கறுப்பு நிற ஜரிகை உள்ளது. தலையிலும் கறுப்பு நிற ஜரிகை வைத்திருக்கிறேன். எனக்கு கருகருவென்று முடி உள்ளது. வருடம் கி.பி 1756 நான் ஸ்பானிய பெண். என் பெயர் லூசியா. வயது ஐம்பத்தாறு. நடனமாடிக்கொண்டிருக்கிறேன். . . . . . . ” தொடர் மௌனம் ” மிகவும் உடல் நிலை முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். எனக்கு காய்ச்சல். ஜன்னி கொண்டுள்ளதுபோல் இருக்கிறது. . . . . . . . பலருக்கு உடல் நிலை சரியில்லை. மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். . . . . . . . மருத்துவர்களுக்கு அது தண்ணீரில் பரவும் வியாதியென்று தெரியவில்லை.எனக்கு சரியாகிவிட்டது. ஆனால் மிகவும் தலையை வலிக்கிறது. காய்ச்சல் வந்திருந்ததால் என் கண்ணும் தலையும் இன்னும் வலிக்கிறது. . . . . . . அதிகமான மக்கள் இறந்துவிட்டார்கள்.”

மற்றொரு சமயம் கேத்தரின் ஒரு பிறவியில் வேசியாக இருந்திருக்கிறாள். அவள் தர்மசங்கடத்தில் இருந்ததால் அப்பிறவி சம்பந்தமாக அதிக விவரம் தரவில்லை. அதிலிருந்து ஹிப்னடைஸ் ஆகியிருக்கும் நேரத்தில் கேத்தரின் அவளுக்கு விருப்பப்பட்ட விஷயங்களை மட்டும் சொல்லும் அளவுக்கு அவளுக்கு அதிகாரம் இருப்பதை உணரமுடிந்தது.

கேத்தரின் அவளது அண்ணன் மகளை ஒரு பிறவியில் சந்தித்திருந்ததாக கூறி இருந்தாள். நானும் ஆர்வமேலீட்டால், நான் எப்பொழுதாவது அவள் பிறவிகளில் இருக்கிறேனா என்று கேட்டேன்.

“நீங்கள் எனது ஆசிரியர். சிறிய புத்தக ஷெல்ப் மேல் அமர்ந்திருக்கிறீர்கள். புத்தகத்திலிருந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வயதாகி விட்டது. முடி நரைத்துள்ளது. தங்கநிற பார்டர் உள்ள வெண்ணிற ஆடை அணிந்திருக்கிறீர்கள். உங்கள் பெயர் டையக்ணஸ். எங்களுக்கு வடிவங்கள், முக்கோணங்கள் தொடர்பாக பாடம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் ஞானம் உடையவர். வருடம் கி.பி 1568“ (இது கிட்டத்தட்ட கிரேக்க தத்துவ ஞானி டையக்ணஸ்-க்கு 1200 முற்பட்ட காலம். அந்த காலக்கட்டத்தில் டையக்ணஸ் என்பது மிகவும் பழக்கத்திலுள்ள பெயர்.)

முதல் ஹிப்னாடிஸ சிகிச்சை முடிவடைந்தது. ஆனால் இப்பொழுது நடந்ததைவிட இன்னும் ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது.

கேத்தரின் சென்ற பிறகு, அவளிடமிருந்து பெற்ற தகவல்களை ஆராய்ந்து கொண்டிருந்தேன். இது என்னுடைய இயல்பான நடவடிக்கை. சாதாரண ஹிப்னடைஸ் சிகிச்சையை ஆராய்வதற்கே எனக்கு மணிக்கணக்கில் பிடிக்கும். கேத்தரினுடைய சிகிச்சை சாதாரண வகையை சேர்ந்தது இல்லை. பிறவி, மறுபிறவி, இறப்புக்கும்,பிறப்புக்கும் இடையிலுள்ள நிலை, கூடுவிட்டு செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகளை நான் நம்பியது இல்லை. ஆனால் எதற்கும் விளக்கம் தேடும் என்னுடைய அறிவு சிந்திக்க ஆரம்பித்தது. அவள் கூறியது முற்றிலும் கற்பனையாக இருக்கக்கூடும். கேத்தரின் கூறிய எதனையும் என்னால் நிரூபிக்க இயலாது. ஆனால் என் மனதின் ஓரத்தில், திறந்த மனதுடன் இருக்கும்படி ஓர் உணர்வு கூறியது. உண்மையான அறிவியல் கூர்ந்து கவனிப்பதிலிருந்து துவங்குகிறது. திறந்த மனதுடன், இன்னும் அதிக தகவல்களை சேகரிக்க வேண்டும்.

ஒரு கேள்வி, தொடர்ந்து மனதை அரித்துக்கொண்டே இருந்தது. முன்பே பயந்து கொண்டிருந்த கேத்தரின், இந்த ஹிப்னடைஸ் அனுபவத்துக்குப் பிறகு மீண்டும் ஹிப்னடைஸ் சிகிச்சைக்கு வருவாளா? நானாக அவளை அழைக்க வேண்டாமென்று தீர்மானித்தேன். அவளுக்கு நேர்ந்த அனுபவத்தில் இருந்து வெளிவர அவகாசம் எடுத்துக்கொள்ளட்டும். .நானும் ஒரு வாரம் காத்திருந்து பார்க்கிறேன்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top