மனம் உருவான விதத்திற்குக் காரணமாக இரண்டடுக்கு வினைப் பதிவுகள் நம்மிடம் இருக்கின்றன. பிறந்தது முதல் இன்று வரை என்னென்ன செய்தோமோ, அனுபவித்தோமோ, நினைத்தோமோ அவை அனைத்தும் நம்மில் பதிவாகி இருக்கின்றன. இதை மேலடுக்குப் பதிவு என்றும் “பிராரப்த கர்மம்’ என்றும் சொல்லலாம். அதற்கு முன்னதாக இந்த மனதுக்கு இன்னொரு பதிவு இருக்கிறது. அதுதான் கருவமைப்புப் பதிவு. முதன் முதலில் தோன்றிய மனிதன் முதற்கொண்டு நமது பெற்றோர் வரையிலே எங்கேயும் இடைவிடாமல் கருவமைப்பு ஒரு தொடராக வருகிறது.
அத்தனைப் பிறவிகளிலும் எண்ணிய எண்ணங்கள், செய்த செயல்கள், அனைத்தும் பதிவாக இருக்கின்றன. இந்தப் பதிவைத் தான் ‘சஞ்சித கர்மம்’ என்றும் ‘பழவினை’ என்று கூறுகிறார்கள். இப்பதிவுகளை வைத்துக் கொண்டு வாழுகின்ற போது, மனதிற்கு இதே வகையான வினைகளைச் செய்ய தூண்டுதல் வருகிறது. அதனால் மீண்டும் துன்பம் வருகிறது. நோய், மூப்பு, வறுமை, மரணம், என்ற வலைகளில் சிக்கி மனிதன் வாடுகிறான்.
ஆனால் மனிதன் வேண்டுவது நிம்மதி, மன அமைதி. இதற்கு என்ன வேண்டும்? பழைய பதிவுகளினால் ஏற்படுகின்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டு அறிவின் விழிப்பு நிலையோடு செயலாற்ற வேண்டுமெனில் மனதிற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. முறையான அகநோக்குப் பயிற்சி தேவைப்படுகிறது. அதற்கான ஆர்வத்துடன் கூடிய முயற்சிதான், அந்த ஆற்றலை தருகின்ற ஒரு பயிற்சி தான் “தவம்” (Meditation) என்றும், “தியானம்” என்றும் “யோகம்” என்றும் கூறி சித்தர்கள், மகான்கள் நம்மை வழி நடத்தினார்கள். அதைத்தான் “மனவளக்கலை” என்ற பெயரில் இப்போது நாம் பயில்கிறோம்.
தவத்தின் பயன்கள் பத்து:
1) மனித வாழ்வின் பெருநிதியாகிய கருமையத்தை தூய்மையாகவும், வலுவுடையதாகவும், அமைதியும் இன்பமும் பெருக்கும் திறனுடையதாக்கவும் உதவுகிறது.
2) மனிதனின் இறையுணர்வும், உயிர் விளக்கவும், அறநெறி நின்று வாழும் தன்மையும் உண்டாக்கும்.
3) மனத்தின் விரியும் தன்மை பெருகுகிறது.
4) எண்ணம், சொல், செயல்களில் தவறு செய்யா விழிப்பு நிலை மேலோங்குகிறது.
5) அறிவின் திறன்கூடி அதன் கிரகிக்கும் சக்தி கூடுகிறது.
6) ஒத்துப் போதல், சகித்துக் கொள்ளுதல் போன்ற பண்புகள் மலர்கின்றன.
7) அவ்வப்போது செய்துவிடக் கூடிய தவறுகளையும், நம்மிடம் இருக்கக் கூடிய தீய குணங்களையும் களைந்து தூய்மையைப் பெருக்கிக் கொள்ள துணைபுரிகிறது.
8) ஆக்கப் பூர்வமான செயல்களை ஆற்றும் திறன் ஓங்குகிறது.
9) தன் அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதி மூலம் உலக அமைதிக்கு வழி வகுக்கிறது.
10) நடக்கக் கூடியதையே நினைக்கச் செய்து நினைத்ததையே நடக்கச் செய்கிறது.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.