Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பேய்கள் ஓய்வதில்லை – 28

பேய்கள் ஓய்வதில்லை – 28

என்ன இட்லிக்காரம்மா! வாயை திறக்க மாட்டேங்கிற! இப்படியே ஊமையா இருந்தே ஊரை கெடுத்து வைக்கறே! உன் தகுதி என்ன? என் தகுதி என்ன? நான் உன் வீட்டு படியேற வேண்டிய நிலைய வரவைச்சிட்டே இல்லே?

அப்படியெல்லாம் இல்லீங்க ஐயா! ஏதோ சின்ன புள்ள அறியாம தப்பு பண்ணிடுச்சு! நான் கண்டிக்கறேன் ஐயா!

யாரு! உன் பொண்ணு சின்ன புள்ளயா? அதுக்கு விளையாட என் பையன் தான் கிடைச்சானா?

இல்லீங்க ஐயா! நான் கண்டிச்சு வைக்கிறேன்! உங்க பையனை இனி என் பொண்ணு ஏறெடுத்தும் பார்க்க மாட்டா!

அப்போது உள்ளிருந்து வந்தாள் ப்ரவீணா! யாரும்மா இவரு? எதுக்கு வந்து சத்தம் போட்டுகிட்டு இருக்காரு என்றாள்.

அட என்னை தெரியாதா உனக்கு? என் பையனை மட்டும் நல்லாத் தெரியுமா?

யாரு உங்க பையன்?

அட சின்ன பாப்பா! வாயிலே விரலை வச்சா சூப்ப கூட தெரியாது! பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்ப ஒண்ணும் தெரியாத மாதிரி இல்ல முழிக்குது!

ஐயா கொஞ்சம் விளங்கற மாதிரி பேசறீங்களா?

ஏய் கிழவி! என்ன உன் பொண்ணு விளையாடறாளா?

எங்க அம்மாவை ஏன் மிரட்டறீங்க? என்ன விசயம் நேரா என்கிட்ட பேசுங்க!

அட பாப்பாவுக்கு அம்மான்னா உசுறா? அப்ப நல்லதா போச்சு!

ஏய் பொண்ணு! மரியாதையா எங்க பையன் கூட சுத்தறதை நிறுத்திக்கோ! இல்லே நீயும் இருக்க மாட்டே! உங்க அம்மாவும் உசுரோட இருக்க மாட்டாங்க!

யாரு நீங்க எதுக்கு இப்படி மிரட்டுறீங்க?

ப்ரவிணா! நீ உள்ளே போ! ஐயா! நான் எடுத்து சொல்றேன் ஐயா! நீங்க கோபப்படாதீங்க! நான் பார்த்துக்கறேன்!

அந்த பயம் இருக்கட்டும்!

அந்த பண்ணையார் அங்கிருந்து நகர ப்ரவீணாவை அழைத்தாள் அவள் தாய்! ப்ரவீணா! வந்தது யாரு தெரியுமா? பண்ணையார்! அவரோட பையன் தான் மகேஷ்!

ஓ! அதுக்குத்தான் மிரட்டுறாரா!

ஆமாம்! அவர் அந்தஸ்துக்கு நாம தூசி! பேசாம இந்த காதல் கத்திரிக்காய் எல்லாத்தையும் தூக்கி குப்பையிலே வீசு! இது நமக்கு சரிப்பட்டு வராது! நாம அவரோட நிழல்ல வாழறவங்க! அவங்களுக்கே நிழல் தர முடியாது!

என்னம்மா! நீ இதுக்கெல்லாம் பயந்துட முடியுமா? மகேஷ் என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல உறுதியா இருக்கான்! நானும் அவனும் பழகறது சும்மா வேடிக்கைக்காக இல்ல! அவன என்னால மறக்கமுடியாது.

அப்ப நீ என்னை மறந்துட வேண்டியதுதான்!

என்னம்மா சொல்றே?

உனக்கு பண்ணையார் பையன் வேணுமின்னா என்ன மறந்திரு! பண்ணையாரை பகைச்சிகிட்டு இந்த ஊரிலே இருக்க முடியாது.

ப்பூ இவ்வளவுதானா? வேணுமின்னா இந்த ஊரை விட்டு காலி பண்ணிட்டு போயிட்டா போறது!

அது சாத்தியமா? இவ்வளவு நாள் பழகின ஊரை விட்டு எங்கோ போய் எப்படி பிழைப்பை ஓட்டுறது? நான் சொல்றதை கேளு! பண்ணையார் மகன் நமக்கு வேணாம்! நம்ம பொழைப்பை நாம பார்ப்போம்! நீ நல்லா படிக்கணும்! நல்லா வரணும் இந்த காதல் நமக்கு சரிப்பட்டு வராது!

ப்ரவீணா யோசிக்க தொடங்கினாள். மகள் மனது மாறுவாள் என்று அந்த தாய் எதிர்பார்த்தாள் ஆனால் விதி வலியது அன்றோ! மறுநாள் காலை அவள் எழுந்த போது அங்கு பிரவீணாவை காணவில்லை!

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top