Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பேய்கள் ஓய்வதில்லை – 19

பேய்கள் ஓய்வதில்லை – 19

அதிகாலையில் அந்த அதிசயக் காட்சியை பார்த்து பிரமை பிடித்தவன் போல நின்றான் முகேஷ். அவனோடு வந்து பாதி வழியில் காணாமல் போய் அவனுக்கு சவாலும் விட்ட ரவி அங்கே அமைதியாக சாதுவாக கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

சித்தப்பா! இது இது எப்படி? நான் எதுவும் உங்க கிட்ட சொல்லவே இல்லை? ஆனா..

சித்தப்பா என்று அவனால் அழைக்கப்பட்ட சுவாமிஜி முறுவலித்தார்! பக்தனின் குறையை தானே கலைவதுதானே ஒரு இறைவனின் கடமை!

அப்ப நீங்க கடவுளா?

இங்க உள்ளவங்க அப்படித்தான் சொல்றாங்க! ஆனா நான் அதை பெரிசா எடுத்துக்கிறது இல்லை! நீ சொல்லேன் நான் கடவுளா இல்லையா?

சித்தப்பா! நாம அந்த விவாதத்துக்குள்ளே போக வேண்டாமே! அது பெரிய விசயம்! இந்த சின்ன பையன் அதை பத்தி பேசறது அவ்வளவு நல்லா இருக்காது. ஆனா! என்ன பொறுத்தவரைக்கும் இங்க நடக்கிற எல்லாமே மிராக்கிளா இருக்குது!

நான் எந்த தகவலும் சொல்லாத வந்தேன்! ஆனா நீங்க என்னை உங்க ஆளை அனுப்பிச்சி கூட்டி வந்தீங்க! இப்ப என் நண்பனையும் கூட்டி வந்திருக்கீங்கே இதெல்லாம் எனக்கு ஸ்ட்ரேஞ்சா இருக்குது! ரியலி யு ஆர் ஏ கிரேட் மேன்! என்றான் முகேஷ்.

முகேஷ்! இதெல்லாம் முறையான பயிற்சிகளாலே வருவது! ஆனா இந்த பயிற்சிகளை எல்லாராலேயும் செய்து சித்தி அடைய முடியாது. இந்தியாவுல இருக்குற மொத்த பேருமே பணக்காரங்க கிடையாது. ஒரு பத்து பர்செண்ட் பேர் பணக்காரங்களா இருக்காங்கன்னு வை! மிச்சம் 90 சதவீதம் பேர் ஏன் பணக்காரங்களா இல்லை! அது அவங்க குற்றமா? இல்லை! பணக்காரங்கன்னு ஒரு சாதி இல்லே! யாரும் பிறப்பிலேயே பணக்காரனா இருக்க முடியாது. அம்பானியோட பிள்ளை அப்படி ஆகலாம். ஆனா அதை தக்க வைக்க அவன் கடுமையா உழைக்க வேண்டி இருக்கு இல்லையா? அப்ப மத்தவங்களும் உழைச்சு பணக்காரங்களா ஆக வேண்டியது தானே? ஆனா அது நடக்காது இல்லையா? அப்படித்தான் இந்த மாந்தீரிகமும்.

இதை யாரு வேணுமுன்னாலும் படிக்கலாம்! ஆனா எல்லாராலேயும் எல்லாத்தையும் சித்தி அடைய முடியாது. அதுக்கு அவங்களுக்கு ஜாதகரீதியான அம்சங்கள் இருக்கணும். அப்பத்தான் அவங்க அதை முழுசா கற்கமுடியும் பலனை அடைய முடியும். ஏதோ எனக்கு அந்த கொடுப்பினையை ஆண்டவன் கொடுத்து இருக்கான்.

மைகாட்! ரொம்ப அற்புதம்! இவன் என் கூட பஸ்ஸுல வந்து தடாகிட்ட தொலைஞ்சு போயிட்டான்! நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க! மொதல்ல நான் உங்க கிட்ட எந்த விசயமும் சொல்லலை அதை எப்படி தெரிஞ்சிகிட்டீங்க?

இதுதான் மாந்தீரிகம்! நீ சொல்லாமலேயே நான் செஞ்சாத்தான் ஒருபிடிப்பு என்கிட்ட உனக்கு கிடைக்கும். நீ வரும் போதெ கலக்கமா வந்தே! அப்பவே உன் உள்மனசை நான் படிச்சிட்டேன்! இதை ஹிப்னாடிசம்னு சொல்லுவாங்க! ஆழ்மனதுல புதைஞ்சி கிடக்கிறதை கண்டுபிடிக்கிறது இதைபடத்துல எல்லாம் காட்டுவாங்க! இருட்டறையில உக்காரவைச்சி தூங்க வைச்சி படிப்படியா கேள்வி கேட்டு உண்மையை வரவழைப்பாங்க! அது போலத்தான் இதுவும்.

என்னுடைய மந்திர உச்சாடனங்களின் தேவதை உன் மனசில இருக்கறதை என்கிட்ட சொல்லிவிடும். அதுக்கான தீர்வு என்னன்னு இன்னொரு தேவதை சொல்லும். இன்னொரு தேவதை அந்த தீர்வை செய்து முடிக்கும்.

ரொம்ப மிராக்கிளா இருக்கு! ஆனா ரவி இன்னும் என்னை கண்டுகிட்டதாவே தெரியலையே? அவன் முகத்துல ரியாக்சனே இல்லையே? பேந்த பேந்த முழிச்சிகிட்டு நிற்கிறாமாதிரி இல்லே இருக்குது!

அதுதான் சொன்னேனே! இப்ப அவனை ஹிப்னாடிஸ் பண்ணி இருக்கேன்! அவன் சுயநினைவோடு இல்லை! பாதி தூக்கத்துல இருக்கான். அது கலைஞ்சதும் அவன் இங்க நிற்க மாட்டான். அவன் பண்ணின காரியத்தை கேட்டா நீ நடுங்கி போயிடுவே!

என்னது!  அவன் அப்படி என்ன பண்ணியிருக்கான்?

கொலை!

கொலையா?

கொலை இல்ல கொலைகள்!

அதிர்ந்து போய் நின்றான் முகேஷ்!

முஸ்லீம் நகரிலிருந்து சற்று தொலைவில் இருந்த அந்த பஞ்செட்டி பொன்னேரி சாலை அந்த அதிகாலை வேளையில் பரப்பரப்பாக இருந்தது ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக வந்து நொறுங்கி கிடந்த லாரியில் பிணமாக இருந்த உடல்களை அள்ளிச்சென்றது. போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்று அதிலிருந்த இறங்கிய சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு தேங்கி கிடக்கும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சீர் செய்ய ஆரம்பித்தனர்.

லாரி மோதியிருக்கும் வேகத்தில் அந்த லாரியின் முன் பாகம் முழுவதும் சிதைந்து போயிருந்தது.

எப்படிய்யா நடந்துச்சு! எஸ்-ஐ கேட்க அங்கிருந்த ஏட்டு , வேற எப்படி நடந்திருக்கும்! எல்லாம் டிரிங் அண்ட் டிரைவிங் தான்! குடிச்சு புட்டு கண்ணு மண்ணு தெரியாம வந்து மரத்துல மோதி உயிரை விட்டிருக்கான் பாவி! என்றார்.

எஸ்-ஐ உச்சு கொட்டினார்.

வெரி சேட்! சின்ன பையனா இருக்கான்! இவன் குடும்பத்தை நினைச்சாவது குடிக்காம இருந்திருக்கலாம்! இப்படி அநியாயமா உயிரை விட்டிருக்கான்! என்று தொப்பியை கழற்றி வைத்துக் கொண்டார்.

இவை அத்தனையும் ஒரு குரூர சிரிப்பில் பார்த்து கொண்டிருந்தாள் செல்வி! போகட்டும்! என் கணக்கில் ஒன்று குறைந்தது என்று வாய்விட்டு முணுமுணுக்கவும் செய்தாள்!

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top