கொண்டபள்ளி ஒரு டிபிகல் ஆந்திர கிராமம். மலையடிவாரத்தில் பல குடிசைகள் சில கான்க்ரீட் வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக மாடு இருந்தது. ஆனாலும் விவசாயம் படுத்து விட்டதால் இப்போது பலர் பக்கத்து கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். பேய்,பிசாசு, காத்து கருப்பு இவை மீது மிகுந்த நம்பிக்கையும் பயமும் அந்த மக்களுக்கு உண்டு.
பேய் அடித்துவிட்டது! பிசாசு மிரட்டிவிட்டது என்று எப்பொழுதும் சுவாமிஜியிடம் திருநீறு மந்திரித்து தாயத்து கட்டிச் செல்வார்கள். சுவாமிஜியும் நேரம் காலம் பார்ப்பது இல்லை! எப்பொழுது யார் அழைத்தாலும் கிளம்பிச் சென்று விடுவார். அதனால் அந்த பகுதியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. சுவாமிஜி சுவாமிஜி என்று உயிரையே விடுவார்கள். இவரும் அந்த மக்களுக்கு ஒன்றினைந்து இருந்தார்.
சுவாமிஜியின் பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் அவர் சின்ன வயதிலேயே கொண்டபள்ளிக்கு வந்துவிட்டதாக கூறுவார். சிறுவயதில் தந்தையிடம் கோபித்துக் கொண்டு திருப்பதி வந்த அவர் அங்கு சில இடங்களில் வேலை செய்தார். எதுவும் சரிபட்டு வராத நிலையில் ஒரு நாள் இந்த குஹாத்ரி மலைக்கு வந்தவர் இங்கேயே தங்கி தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
இந்த மலையில் ஒரு குகை அங்கே பாறையில் ஒரு எந்திரம் எழுதப்பட்டிருக்கும். அது சக்தி வாய்ந்த சுப்ரமண்யர் எந்திரம். மலைகளில் சுற்றி வந்த சுவாமிஜி தற்செயலாக இதை கண்டுபிடித்தார். அந்த எந்திரம் அவரை வசீகரித்தது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த யாரோ எழுதிய எந்திரம் அது. ஆனால் அது அவரை ஈர்த்தது. என்னை பூஜியேன் என்று அழைப்பது போல அவரது காதில் ஏதோ ஒலித்தது.
அங்கேயே தங்கி சுப்ரமண்யரின் மூல மந்திரத்தை இடைவிடாது ஜபிக்கத்துவங்கினார். இத்தகைய மந்திரங்களை ஜபித்தால் ஒரு கட்டத்தில் அந்த மந்திரத்திற்குரிய தேவதை எதிரில் பிரசன்னமாகும். அப்போது பயங்கர பிரகாசமாக தெரியும் அந்த தேவதையை கண்டு நாம் மிரளக்கூடாது. அப்படி மிரண்டு போனால் நமது புத்தி பேதலித்துவிடும். அதனால்தான் எதையும் குரு உபதேசத்துடன் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.
சுவாமிகள் இவ்வாறு சுப்ரமண்ய மந்திரம் ஜபித்து வர அவருக்கு முருகர் அருள் சித்தியாயிற்று. அதன் பின்னர் அவர் நினைத்த காரியம் கை கூடியது. இதனால் அவர்சொன்ன வாக்கு பலித்தது. தீராத நோய்கள் தீர்ந்தது.இப்படி இங்கு வந்த சுவாமிகள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து இன்னும் பல சித்து வேலைகள் கற்றுக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். இது அவருக்கு பல எதிரிகளையும் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனால் அதற்கெல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
அன்றும் அப்படித்தான்! குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதும் அவர் கிளம்பி போய்விட்டார். முகேஷ் முதலில் தைரியமாக இருந்தாலும் அந்த இடத்தின் அமைதி அவனை என்னவோ செய்தது. இருப்பினும் எப்படியோ மெல்ல உறங்கி விட்டான்.
திடுமென அவனை ஏதோ பிடித்து இழுப்பது போல தோன்ற அவன் காலை உதறினான். ஆனால் காலை அசைக்கவே முடியவில்லை. சித்தப்பா! சித்தப்பா! என்று அவன் கத்த முயன்றான். ஆனாலும் அவனால் வாய்திறக்க முடிந்ததே தவிர சத்தம் வரவில்லை! சில நிமிடங்கள் மரண அவஸ்தையில் இருந்தான் முகேஷ். இது அவனுக்கு புது அனுபவம். இப்படி எதுவும் அவன் வாழ்க்கையில் நடந்ததே இல்லை! எனவே மிகவும் மிரண்டு போய்விட்டான். இனி அவ்வளவுதான் என்று அவன் நினைத்த சமயம். வாசல் கதவு திறந்தது.
உள்ளே சித்தப்பா நுழைந்தார்.முகேஷ் இப்படியும் அப்படியுமாக புரண்டு படுப்பதையும் முனகுவதையும் பார்த்த அவர் நொடியில் தன் மேல் போட்டிருந்த துண்டினை எடுத்து அப்படியே குழந்தைகள் அந்த காலத்தில் சோடா கார்க்கில் நூலினை விட்டு சுழற்றி விளையாடுவார்களே அப்படி அந்த துண்டினை இரு கரங்களில் பிடித்து சுழற்றினார். அந்த சுழற்றல் வேகமாக அந்த துண்டு அப்படியே முறுக்கு போட அதை அப்படியே முடிச்சிட்டார். அவர் முடிச்சிட்ட நொடி முகேஷ் தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல எழுந்து உற்காந்தான்.
மாதறசத்! என்கிட்டேயே விளையாடறியா? என்று அந்த துண்டின் மீது தன் இடுப்பில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு துளி விபூதியை எடுத்து போட்டார் பின்னர் அப்படியே சுருட்டி அதை அங்கிருந்த ஒரு பானையில் போட்டு மூடினார்.
நடப்பது எல்லாவற்றையும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ்.
என்ன முகேஷ்! பயந்துட்டியா!இதெல்லாம் ஜுஜுபி! இதுக்கெல்லாம் பயப்படாதே! எப்படி வேர்த்து வழியுது உன் முகம்! இந்தா துண்டு துடைச்சிக்கோ! என்று ஒரு துண்டினை தந்தார்.
சித்தப்பா! இங்கே என்ன நடந்தது! என்னை எதுவோ இழுத்தது! நான் கத்தினேன்! ஆனா சவுண்டே வரலை! திடீர்னு நீங்க வந்தீங்க! ஒரு துணியால ஏதோ மாஜிக் பண்ணீங்க! எல்லாம் சரியாயிடுத்து!
ஒண்ணுமில்லே முகேஷ்! இது என்னோட கட்டுப்பாட்டில் இருக்கிற ஏரியா! அப்படின்னு சொன்னேனே தவிர என்னை ஏமாத்தி சில துர் ஆவிகள் இங்க உலாத்தி வரும்! அதுங்கள்ள ஒண்ணோட சேஷ்டைதான் இது! நீ சின்னை பையன் அது உன்கிட்ட விளையாடி பார்க்குது!
விளையாடிச்சா? இதுவா விளையாட்டு!
ஆமாம்! ஆவிகளுக்கு நம்மை துன்புறுத்தி இன்புறுதல்தான் விளையாட்டு! நீ படற அவஸ்தை அதுக்கு மகிழ்ச்சி!
அப்பாடா! எப்படியோ நீங்க வந்து என்னை காப்பாத்திட்டீங்க! இல்லேன்னா நான் செத்திருப்பேன்!
அப்படியெல்லாம் நடக்காது! சாதாரணமா ஆவிங்க யாரையும் கொல்லாது!
அப்ப ஆவி அடிச்சிட்டதா சொல்றாங்களே!
அது நம்ம பலகீனம்! அதை பார்த்து பயந்து அந்த அதிர்ச்சியிலே உறைந்து உயிரை விட்டுடறவங்களும் இருக்காங்க!
சித்தப்பா! ஆவிங்கன்னா என்ன? செத்து போனவங்க எல்லாம் ஆவிங்களா உலாத்துவாங்களா?
இந்த அர்த்த ராத்திரியிலே இந்த கேள்வி தேவையா? நீ நிம்மதியா படுத்து தூங்கு! நானும் தூங்கறேன்! நாளைக்கு காலையில இதுக்கு விளக்கம் சொல்றேன்.
அதுவும் சரிதான்! ஆனா எனக்குத்தான் தூக்கம் வருமான்னு தெரியலை!
அப்படியா? நான் உனக்கு தூக்கம் வரவழைக்கிறேன்! எங்கே என் கண்ணையே கொஞ்ச நேரம் பாரு! ஆங்! அப்படியே பாரு அப்படியே பாரு! அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே முகேஷ் கண் சொக்கி அப்படியே படுக்கையில் விழுந்தான். சித்தப்பா சிரித்தபடியே அவனுக்கு போர்த்தி விட்டு பக்கத்தில் படுத்து உறங்கிப் போனார்.
மறுநாள் அதிகாலை அடிவாரத்து கோயிலில் சுப்ரபாதம் ஒலிக்க முகேஷ் கண்விழித்தான். சித்தப்பா எப்போதோ எழுந்து விட்டிருந்தார். முகேஷ் தன் பையில் இருந்த பேஸ்ட் பிரஷ் எடுத்துக் கொண்டு பல் துலக்கி முடித்தான். சித்தப்பா அதற்குள் குளித்து முடித்து அந்த குகையில் இருந்த முருகருக்கும் எந்திரத்திற்கும் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவர் உச்சரிக்கும் மந்திர உச்சாடனம் மிகத்தெளிவாகவும் சத்தமாகவும் வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. முகேஷ் பல்விளக்கியதும் காபி சாப்பிடவேண்டும் போல உணர்ந்தான். ஆனால் இது அவனது வீடு அல்லவே! குஹாத்ரி மலை! காபி பால் என்றால் கீழிருந்துதான் மேலே வரவேண்டும். பொழுது விடிந்து சில மணி நேரங்கள் கழித்துதான் அவை வந்து சேரும். எனவே முகேஷ் அங்கிருந்த தொட்டி தண்ணீரில் குளித்தான். மலைப் பிரதேசமானதால் தண்ணீர் சில்லென்று இருந்தது. குளித்து முடித்ததும் அவனது காபி தாகம் இன்னும் அதிகரித்தது.
பூஜை முடித்துவிட்டு சித்தப்பா உள்ளே வந்தார். என்ன முகேஷ் ஒரு மாதிரி இருக்கே! ஓ! காபி வேணுமா? இன்னும் பத்து நிமிசத்துல பால் வந்திரும்! காபி கலந்திடலாம். அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு அதிசயம் காண்பிக்க போறேன் வா!
என்ன சித்தப்பா! என்ன அதிசயம்?
வா! வந்து பாரு! நீ அசந்து போயிருவே!
அப்படி என்ன அதிசயம்?
நீ வா! என்று அவனை குடிலை விட்டு வெளியே அழைத்து வந்தார் அவனது சித்தப்பாவான சுவாமிஜி!
அங்கே!
ரவி நின்று கொண்டிருந்தான்.
தொடரும்….