Home » சிறுகதைகள் » வியாசருக்கும் ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடல்!!!
வியாசருக்கும் ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடல்!!!

வியாசருக்கும் ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடல்!!!

தருமர் பீஷ்மரிடம் ‘போரில் இறக்க மனமில்லாதவரும், மனம் உள்ளவர்களும் கொல்லப்பட்டனரே! செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் , இன்பமிருந்தாலும், துன்பம் இருந்தாலும், எந்த நிலையிலும் எந்த ஜீவனும் உயிர் விடத் துணியவில்லையே! எல்லாம் ஆசையோடு வாழவே விரும்புகின்றனவே ஏன்? அதன் காரணத்தைக் கூறுவீராக’ என்று கேட்க பீஷ்மர் கூறலானார்.

‘தருமா..நல்ல கேள்வி கேட்டாய்.இது தொடர்பாக வியாசருக்கும்,ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடலை உனக்கு நினைவுப்படுத்துகிறேன்.ஒரு நாள் பாதையில் விரைவாக ஓடும் புழுவைப் பார்த்த வியாசர்..’புழுவே..நீ பயந்தவன் போல இருக்கிறாய்.வேகமாகப் போகிறாய்.உன் இருப்பிடம் எங்கே இருக்கிறது.யாரைக் கண்டு பயப்படுகிறாய்? சொல்’ என்று வினவினார்.அதற்குப் புழு, ‘பாதைகளில் இரைச்சலுடன் செல்லும் வண்டிகளின் சப்தத்தைக் கேட்டு எனக்கு பயம் உண்டாயிற்று.அது என்னைக் கொன்றுவிடும் என பயந்து விலகிச் செல்கிறேன்.அதிகச் சுமையை இழுத்துக் கொண்டு சாட்டையால் அடிபட்டுப் பெருமூச்சு விட்டுத் துன்புறும் எருதுகளின் ஓசையையும் நான் உணர்கிறேன்.வண்டிகளை ஒட்டுவோர் ஒலியும் கேட்க முடிகிறது.என் போன்ற புழுப் பிறப்பினர் அதைத் தாங்க முடியாது.அந்தப் பயத்தால் விலகிப் போகிறேன்.யாருக்குத்தான் உயிரை விட மனம் வரும்’ என பதில் அளித்தது.

அந்தப் புழு அவ்வாறு கூறியதும் வியாசர் அதைப் பார்த்து ‘புழுவே..உனக்கு ஏது இன்பம்?விலங்கு பிறப்பாகிய உனது மரணமே இன்பம் பயக்கும் என நினைக்கிறேன்’ என்றார்.

அது கேட்ட புழு, ‘உயிரானது தான் எடுத்த தேகங்களில் பற்றுடன் இருக்கிறது.இந்தத் தேகத்திலும் எனக்கு இன்பம் இருப்பதை நான் உணர்கிறேன்.ஆகவே..நான் உயிருடன் பிழைத்திருக்கவே விரும்புகிறேன்.எந்தப் பிறவியிலும் உடலுக்கு ஏற்றபடி இன்பத்திற்குரிய பொருள் எல்லாம் உண்டாக்கப்பட்டுள்ளன..நான் மனிதப் பிறவியில் மிகவும் செல்வம் உள்ளவனாகப் பிறந்திருந்தேன்.எனது பேதைமையினால் உயர்ந்தோரைப் பகைத்துக் கொடியவனாக மாறினேன்.விருந்தினருக்கும்,ஏழைகளுக்கும் எதுவும் தராமல் சுவையானவற்றைத் தேர்ந்தெடுத்து நானே எல்லாவற்றையும் சாப்பிட்டேன்.ஏழைகளுக்கு உணவு தரவில்லை.யாராவது கொடுத்தால் அதையும் பறித்துக் கொண்டேன்.பிறருடைய ஆக்கம் கண்டு பொறாமை கொண்டேன்.பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு பொறாமை கொண்டேன்.பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு முகம் சுளித்தேன்.மற்றவர் பெற்ற நன்மை கண்டு வயிறு எரிந்தேன்.இப்படி முன் பிறவியில் தகாதவற்றை செய்தேன்.அவற்ரையெல்லாம் இப்போது நினைத்து மகனை இழந்தவன் போல துன்புறுகிறேன்.நல்வினை எதையும் செய்ததாகத் தெரியவில்லை.எவ்வளவு கெட்ட குணம் என்னிடம் இருந்த போதிலும் என் தாயை நான் என் கண் போல பாதுகாத்தேன்.ஒருமுறை என் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருக்கு உணவு அளித்து உபசரித்தேன்.அந்த ஒரு நற்செய்கையால்தான் நான் இப்பிறவியில் இன்பத்தில் விருப்பம் கொண்டுள்ளேன்.அதனால் முந்தைய பிறவியின் நினைவு என்னை விட்டு அகலாமல் இருக்கிறது.

வியாசரே! அந்த நல்ல செயல்களின் விளைவைப் பற்றி மேலும் விளக்கமாகக் கூறுங்கள்” என்று கேட்டது.

வியாசர்..’புழுவே..நீ முன் பிறவியில் செய்த சில செயல்களால் பண்டைப் பிறவியின் நினைவில் திளைக்கிறாய்.நீ விரும்பினால் மனிதப் பிறவி எடுத்துச் சிறந்த பலன்களை அடையலாம்.ஆயின் பொருளுக்காகவே அலையும் அறிவு கெட்ட மனிதனுக்கு ஒரு நன்மையும் கிடையாது.நீ விரும்பும் குலத்தில் பிறக்கும் பேற்றினைத் தருகிறேன்’ என்றார்.

புழு, தனது அடுத்த ஷத்திரியப் பிறவியில் வியாசரைச் சென்று பார்த்து வணங்கியது.’மாமுனிவரே! உம் போதனையைப் பின்பற்றியதால் நான் க்ஷத்திரியனாக..ராஜபுத்திரன் ஆனேன்.இது நான் விரும்பிய பிறவிதான்.என்னுடைய வைபவத்தை எண்ணி நானே வியப்படைகிறேன்.எத்தனை யானைகள் என்னைத் தாங்கிச் செல்கின்றன.எனது தேரை உயர்ந்த காம்போஜ நாட்டுக் குதிரைகள் இழுத்துச் செல்கின்றன.மிகச் சிறந்த ஒட்டகங்களும், கோவேறு கழுதைகளும் எனக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் முன்னே செல்கின்றன.ஏராளமான பேர் என்னை வந்து துதித்துப் போற்றுகின்றனர்.இன்னும் எனக்குப் புழுப் பிறவியின் நினைவு வருகிறது.உமது தவ மஹிமையால்தான் நான் அரச வாழ்வு பெற்றேன்.இனி நான் என்ன செய்ய வேண்டும்..கட்டளையிடுங்கள்’ என விரும்பி வேண்டியது.

அதற்கு வியாசர்..’நீ புழுவாகப் பிறந்தாலும்..என்னை வணங்கிப் போற்றியதால் அரச வம்சத்தில் பிறந்திருக்கிறாய்.நீ விரும்பினால் அடுத்த பிறவியில் அறவோராகப் பிறக்கலாம்’ என்று ஆசி கூறினார்.

நல்லொழுக்கத்தினால் சிறந்த அறவோனாகப் பிறந்து பின் இறந்து தேவனாகப் பிறந்து தேவ சுகம் அனுபவித்தது புழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top