அக்பரிடம் ஒரு விஷயம் மட்டும் பீர்பாலுக்குப் பிடிக்கவில்லை. அதாவது அக்பரின் ஆராயாமல் கொடுக்கும் வள்ளல்தன்மை. பல முறை பீர்பால் அதை எடுத்துக் கூறியும் அதைப் பொருட்படுத்தாமல் அக்பர் தன விருப்பப் படி வாரி வழங்கிக் கொண்டு இருந்தார். இதானால் அக்பரின் கஜானா காலியாகும் நிலைமை ஏற்பட்டது.
ஒருமுறை அக்பர் மாறு வேடத்தில் இரவு நேரம் தன சேனாதிபதி அஹமத் கானுடன் வந்து கொண்டு இருந்தார்.
நட்ட நடு இரவில் அவர் தெருவோரம் கண்ட ஒரு காட்சி அவரின் குதிரையை நிறுத்தி அவரை கவனிக்க வைத்தது.
ஒரு 80 வயது முதிர்ந்த ஒரு பெரியவர் அந்த இ ரவில் ஒரு செடி நாட்டுக் கொண்டு இருந்தார்.
இதைக் கண்ட அக்பர் ‘அய்யா பெரியவரே! இந்த நடு இரவில் இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன?’ என்றார்.
அதற்கு அந்தப் பெரியவர் ‘அய்யா வழிப் போக்கரே! இந்த செடி எனக்காக இல்லை. நாளைய சமூகத்திற்காக. பகலில் என் குடும்பத்திற்காக உழைக்கிறேன், இரவில் கிடைக்கும் சமயங்களில் இது போல செடி நடுகிறேன்’ என்றார்.
‘பெரியவரே! இந்த செடி வைப்பதால் உங்களுக்கு என்ன இலாபம்? உங்கள் வயதை கவனிக்கும்போது இந்த செடி வளர்ந்து பலன் தரும்போது நீங்கள் அதன் பலனை அடைய மாட்டீர்களே?’
‘அதனால் என்ன, வழிப் போக்கரே? இந்தச் செடியால் எனக்கு நன்மை விளையாவிட்டாலும் என் சந்ததியர் பலன் பெறுவார்களே!’
இதைக் கேட்டு வியந்த மன்னர் ‘ பெரியவரே! நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்! நான்தான் மன்னர் அக்பர்! உங்களின் உயர்ந்த சிந்தனைக்கு இதோ என் பரிசு 1000 பொற்காசுகள்’ என்று கூறி ஒரு பொற்கிழியை அந்தப் பெரியவருக்குக் கொடுத்தார்.
அதை மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட அந்தப் பெரியவர், “மன்னா! நன்றி! பாருங்களேன், இந்த மரம் வைத்தபின் வளர்ந்து, காய்த்து, பழுத்து, பலன் தரும் சமயத்திற்கு முன்னமேயே, என் கையில் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்து விட்டதே! ஆகவே செடி வைத்தால் நல்ல பலன் உடனே கிடைத்து விட்டதே!!” என்றார்.
அது கேட்டு மகிழ்ந்த மன்னர், ‘ஆஹா! இப்படியும் ஒரு சிந்தனையா? இந்தா பிடியுங்கள் இன்னும் ஒரு ஆயிரம் பொற்காசுகள்’ என்று கூறி மீண்டும் ஒரு பொற்கிழியை அந்தப் பெரியவருக்குத் தந்து விட்டு அந்த இடம் நீங்கினார்.
மறுநாள் காலை அரசவைக்கு அந்த முதியவர் இரண்டு பொற்கிழிகளையும் கையில் எடுத்துக் கொண்டு அரசரைக் காண வந்தார்.
அகபர் அவரிடம் ‘என்ன வேண்டும்?’ என்று வினவினார்.
அதற்கு அந்தப் பெரியவர் ‘ மன்னா! இந்தாருங்கள் நீங்கள் கொடுத்த பொற்கிழிகள். இவை எனக்கு வேண்டாம்! காரணம், நீங்கள் இதைக் கொடுத்துச் சென்ற சில நிமிடங்களில் இருந்து என் சிந்தனை எல்லாம், எப்படி இந்த பணத்தை நான் செலவழிக்கப் போகிறேன் என்பது குறித்தே இருந்தது. இதனால் நான் இன்று காலை வேலைக்குப் போகவில்லை. அதனால் என் உடல் களைப்படைந்து விட்டது. வேலை செய்யாததால் எனக்குப் பசிக்கவில்லை. ஆகவே என் உடம்பிற்கு நோய் வந்துவிட்டது போல உணர்கிறேன். மேலும் நான் இன்றைக்கு எங்கே புதிய செடி வைக்கப் போகிறேன் என்று என் திட்டங்களை தீட்டாமலேயே இருந்துவிட்டேன். ஆகவே, என்னை சோம்பேறி ஆக்கிய இந்தப் பணம் வேண்டாம்’ என்று கூறி அக்பரிடம் அந்தப் பணத்தைத் திருப்பித் தந்தார்.
விக்கித்துப் போன அக்பர், என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபோது, தனது வயோதிக வேடத்தைக் களைத்த பீர்பால், தான் யாரென்று அக்பருக்குத் தெரியப் படுத்தினார்.
‘மன்னா, நீங்கள் வாரிக் கொடுக்கும் பணம் மற்றவர்களை சோம்பேறி ஆக்கும் என்று உங்களுக்கு உணர்த்தவே இதை நான் செய்தேன். என்னை மன்னியுங்கள் மன்னா!’ என்றார் பீர்பால்.
அது கேட்ட அக்பர்’ ஹஹஹா! பீர்பால்…. நல்ல பாடம் புகட்டினீர்கள்…. இந்தாருங்கள் ….. அந்த இரண்டு பொற்கிழி களையும் , உங்களின் மதியூகத்திற்காக என் பரிசாக வைத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.
பீர்பாலோ ‘மன்னா! இந்தப் பணம் என்னையும் சோம்பேறி ஆக்கி விடாதா? இது இருக்க வேண்டிய இடம் நமது கஜானா! அது பல நல்ல காரியங்களுக்கு உபயோகப் பட வேண்டும். நீங்கள் எனக்கு இதுவரை செய்து கொடுத்துள்ள வசதிகளே போதும் மன்னா!’ என்று கூறி பொற்கிழிகளை திருப்பித் தந்தார்.