Home » சிறுகதைகள் » உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்!!!
உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்!!!

உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்!!!

ஒருநாள் அக்பர் தனது அவையில் அமர்ந்து இருந்தார். அவையில் இருந்தவர்களைப் பார்த்து, “உலகத்தில் மாபெரும் வீரர்கள் யார்? அவர்களுக்கான இலக்கணம் என்று எதனைக் கருதலாம்?” என்று கேட்டார்.
“மாபெரும் சேனை ஒன்றை ஐந்தாறு வீரர்களை மட்டும் தம்முடன் அழைத்துக் கொண்டு சென்று சமாளித்து வெற்றி பெறும் தளபதியே மாபெரும் வீரர்!” என்றார் ஒருவர்.
“தாம் ஆயுதம் வைத்திருக்காத நிலையிலும் எல்லா ஆயுதங்களும் வைத்திருக்கும் ஒருவனை எதிர்த்துப் போரிட்டு வெள்ளி கொள்பவனே சிறந்த வீரன்!” என்றார் இன்னொருவர்.
“போர் முனையில் போரிட்டு வீர மரணம் அடைந்த அனைவருமே வீரர்கள்தான்!” என்பது இன்னொருத்தரின் பதில்.
இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பதில் அளித்துக் கொண்டிருக்க பீர்பால் மட்டும் அமைதியாக இருந்தார். அது அக்பருக்கு ஆச்சரியத்தினை அளித்தது.
“பீர்பால். என் கேள்விக்கு என்ன பதில்?” என்றார் அக்பர்.
“மன்னர் அவர்களே… என் பதில் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அதனால்தான் சற்று தயக்கத்துடன் இருந்தேன். தாங்களே கேட்ட பிறகு விடையைச் சொல்லாமல் இருப்பது சரியல்ல. வீரம் என்பது வெறும் உடல் பலத்தைக் கொண்டது அல்ல. உள்ளத்தின் உயர் பண்பே வீரம் என்று நான் கருதுகிறேன். தன்னம்பிக்கையுடன் உழைத்துக் கிடைக்கும் வருவாயினை மட்டுமே தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்பவன், சுய முயற்சியுடன் தன் கடமைப் பொறுப்பினை நிறைவேற்றும் விதத்தில் சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படுபவன் ஆகிய இவர்கள்தான் உண்மையான மாபெரும் வீரர்கள் என்று நான் கருதுகிறேன்!” என்றார் பீர்பால்.
“நீர் கூறுவது உயர்ந்த தத்துவம்தான். ஆனால் வாழ்க்கையில் சுயநல நோக்கம் இல்லாமலும் முழுக்க முழுக்க தன் உழைப்பினை மட்டுமே நம்பி வாழக்க்கூடிய ஒருவன் இருக்கக் கூடும் என்று நான் நினைக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் சுயநல மன்னராகத்தான் இருப்பார்கள் என்பது என் எண்ணம். இதை நான் உனக்கு நிரூபித்துக் காட்ட முடியும்!” என்றார் அக்பர்.
மறுநாளே அக்பர் தன் நாட்டு மக்களுக்கு உத்தரவு ஒன்றினை பிறப்பித்தார். பொதுமக்கள் அனைவருக்கும் ஒருவார காலத்திற்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு இலவசமாக அளிக்கப்படும் என்பதுதான் அந்த செய்தி.
விருந்துக்கென விசாலமான பந்தல் அமைக்கப்பட்டு ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்காணவர்கள் அமர்ந்து சாப்பிட வசதிகள் செய்யப்பட்டன. விருந்தளிப்பு நாளும் தொடங்கியது. மக்கள் போட்டி போட்டுக்கொண்டு சாப்பிட வந்தார்கள். யாரும் வேலைக்கு செல்லவில்லை.
விருந்து தொடங்கி மூன்று நான்கு நாட்கள் கழிந்தன. அக்பரும் பீர்பாலும் மாறுவேடம் தரித்து குதிரைமீது நாடு முழுவதையும் சுற்றி வந்தார்கள். வீடுகள் எல்லாம் காலியாக இருந்தன. தெருக்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் மூன்று வேளள உணவைப் புசிக்க விருந்துப் பந்தலில் குழுமிக் கிடந்தனர். ஊரே செயலற்றுக் கிடந்தது.
ஒரு கிராமத்து வயல்பக்கமாக அக்பரும் பீர்பாலும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயலில் வயதான முதியவர் ஒருவர் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது உழுது கொண்டிருந்தார்.
அக்பர் அம்முதியவரை நெருங்கி, “பெரியவரே.. இந்தக் கடும் வெயிலிலும் வேலை செய்துகொண்டு இருக்கிறீரே? மன்னர் அனைவருக்கும் ஒருவாரத்திற்கு மூன்று வேளையும் அறுசுவை விருந்து அளிக்கிறாரே.. அதைப்பற்றி உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார்.
“ஐயா. அந்தச் செய்தி என் காதிலும் வந்து விழுந்தது. ஆனால் என்னைப்போல உழைப்பாளிகளுக்கு அறுசுவை விருந்து சாப்பிட ஏது நேரம்?” என்று சொன்னார் முதியவர்.
“அறுசுவை விருந்து கிடைக்கும்போது உழைப்பை சில நாள்களுக்கு ஒதுக்கி வைக்கக் கூடாதா? இந்த சந்தர்ப்பத்தினை தவற விட்டால் அப்புறம் இவ்வளவு அருமையான விருந்தினை சாப்பிட முடியாதே!” என்று கேட்டார் அக்பர்.
“ஐயா. நான் சாமான்ய உழழப்பாளி. உழைத்துச் சாப்பிட்டு பழகிப் போனவன். உழைக்காமல் கிடைக்கும் உணவு என் குடலில் செரிமானம் ஆகாது. தவிர மன்னர் ஒரு வார காலத்திற்கு மட்டும்தான் உணவு அளிப்பார். அதன்பிறகு நான் உழைத்துத்தானே சாப்பிட்டு ஆகவேண்டும்? என்னைப் பொறுத்த மட்டில் என் உழைப்புதான் எனக்கு எல்லாமே. உழைப்புக்கு மிஞ்சி உயர்ந்ததாக எதுவுமே இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!” என்று கூறினார் முதியவர். பின் ‘ஹேய்’ என்று மாட்டை அதட்டியவாறு தொடர்ந்து ஏர் உழத் தொடங்கினார்.
முதியவரின் சொற்களைக் கேட்டு மன்னர் அக்பர் பிரமித்து நின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top