மூவருக்கு இரு கால்
ஒரு கணவன் எதோ வருத்தத்தில் தன மனைவி மேல் கோபித்துக் கொண்டு அடித்துத் துரத்தி விட்டான்.முன் கோபத்தால் அப்படிச் செய்து விட்டாலும் பிறகு அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டான்.
வழியிலே ஒருவனைக் கண்டு,
”ஆற்றுக்குக்குப் பகையாய் இருக்கும் மரத்தின் கீழே இருந்து
வேலியைப் படல் கட்டுகிறவனே!
மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ?”என்று கேட்டான்.
அதற்கு அவன் விடை சொல்கிறான்,
”அவள் செத்து மூன்று நாள் ஆச்சு;
அவளைக் கொன்றவன் செத்து
ஆறு நாள் ஆச்சு;
அவளைச் சுட்டவன் செத்து
ஆறு மாசம் ஆச்சு” என்று சொன்னான்.
நெசவுகாரன் ஒருவன் தேற்றா மரத்தின் கீழ் பாவு போட்டிருந்தான்.அவனைப் பார்த்து தான் கணவன் கேட்கிறான்.’ஆற்றுக்குப் பகை’ என்றது,கலங்கல் நீரைத் தெளியச் செய்யும் கொட்டையைத் தரும் தேற்றா மரத்தை. மனிதர்,வேலியைப்போலச் சுற்றி உடுக்கும் ஆடையின் பொருட்டுப் பாவு ஓட்டுபவன் என்பதை,’வேலிக்குப் படல் கட்டுகிறவனே’என்று குறிப்பிட்டான்.
தன மனைவி இடுப்பில் ஒரு குழந்தையையும்,வயிற்றில் ஒரு குழந்தையையும் சுமந்து சென்றாள் என்பதை,’மூவர் இரு காலால் நடக்கக் கண்டாயோ’என்று கேட்கிறான்.
அவள் இடையில் ஓரிடத்தில் தண்ணீர் குடித்த போது, அந்தத் தண்ணீரில் ஆறு நாளாகச் செத்துக் கிடந்த சிறு பாம்பின் விஷத்தால் இறந்தாள்.ஊரார்,ஆறு மாதத்துக்கு முன் வெட்டி உலர்த்தின மரத்தின் விறகைக் கொண்டு அவளைத் தர்மத்திற்கு எரித்து விட்டார்கள்.இதையே அந்த நெசவுகாரன்,அவள் செத்து மூன்று நாள் ஆச்சு.அவளைக் கொன்றவன் (பாம்பு )செத்து ஆறு நாள் ஆச்சு.அவளைச் சுட்டவன் (மரம்) செத்துஆறு மாசம் ஆச்சு”என்று குறிப்பிடுகிறான்