பீஷ்மர் இந்திரனுக்கும்,கிளிக்கும் நடந்த உரையாடல் ஒன்றை கதையாக தருமருக்கு உரைத்தார்..
‘தருமா! காசி தேசத்தில் ஒரு வேடன் விஷம் தோய்ந்த அம்பையும்,வில்லையும் எடுத்துக் கொண்டு மான் வேட்டைக்குக் காடு நோக்கிச் சென்றான்.
மான் கூட்டம் நிறைந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்த வேடன் உற்சாகத்துடன் அம்பைச் செலுத்தினான்.அது குறி தவறி ஒரு பெரிய ஆலமரத்தில் சென்று பாய்ந்தது.விஷம் தோய்ந்த அம்பானதால் அந்த மரம் பட்டுப் போனது.
மரம் அப்படியான போதும் அந்த மரத்தின் பொந்துகளில் வசித்து வந்த ஒரு கிளி அந்த இடத்தை விட்டு அகலவில்லை.இரை எடுக்கவில்லை.
வெளியே போகவில்லை.தான் வசித்து வந்த மரத்திற்கு இப்படியானதே ..என வருந்தியது.
கிளியின் அன்பைக் கண்டு இந்திரன் வியப்புற்றான்.
பறவை இனமாய் இருந்தும் மரத்திடம் இப்படி ஒரு அன்பா? என எண்ணி,கிளி இருந்த மரம் நோக்கி வந்தான்..
அவன் கிளியிடம்’இந்த மரத்தைவிட்டு ஏன் அகலாமல் இருக்கிறாய்?’ என்றான்.
இந்திரன் இப்படிக் கேட்டதும் கிளி அவனை வணங்கி..’தேவேந்திரா! உன்னை என் தவத்தால் அறிந்து கொண்டேன்.உன் வரவு நல்வரவாகட்டும்’ என்றது.
தேவேந்திரன் கிளியிடம்,’இலைகளும்,கனிகளும்,கிளைகளும் இன்றி பட்டுப்போன மரத்தில்..நீ மட்டும் இருந்து ஏன் காவல் காக்கிறாய்..இக்காட்டில் உனக்கு வேறு மரமா..இல்லை?’எனக் கேட்டான்.
இந்திரனின் வார்த்தைகளைக் கேட்ட கிளி, மிகுந்த துயரத்துடன்’நற்குணங்களின் இருப்பிடமான இம்மரத்தில் நான் பிறந்தேன்.இளமையில் நன்கு பாதுகாக்கப் பட்டேன்.
பகைவர்களும் என்னை ஒன்றும் செய்யவில்லை.தயை,பக்தி இவற்றால் வேறு இடம் நாடாமல் இருக்கும் எனது பிறவியை ஏன் பயனற்றதாக மாற்ற நினைக்கிறாய்?நமக்கு உதவு செய்தவரிடத்தில் தயையுடன் நடந்து கொள்வதுதானே தருமத்தின் இலக்கணம்.
தயையே எல்லோருக்கும் திருப்தியை அளிப்பது.தேவர்கள் அனைவரும் தருமத்தின் சிறப்பைப்பற்றி உன்னிடம் அல்லவா கேட்க வருகிறார்கள்..அதனால் அன்றோ தேவர்களுக்கு அதிபதியாய் நீ இருக்கிறாய்..தருமம் அறிந்த நீ, நீண்ட நாட்களாக நான் இருந்த மரத்தை விட்டுவிடச் சொல்லலாமா?
ஆதரித்தவர் நல்ல நிலையில் இருந்த போது அடுத்துப் பிழைத்தவன் அவர் கெட்ட நிலைக்கு வந்த போது எப்படி பிரிவது?’ என்று கூறியது.
கிளியின் சொல் கேட்டு, இந்திரன் மகிழ்ந்தான்.ஞானிபோல பேசிய அக்கிளியிடம் மிக்க மரியாதை ஏற்பட்டது.அதனிடம், “நீ வேண்டும் வரம் கேள்..தருகிறேன்’ என்றான்.
உடன் கிளி.’பட்டுப்போன இம்மரம் முன் போல பூத்துக் குலுங்க வேண்டும்..இதுவே நான் வேண்டும் வரம்’என்றது.
உடன் இந்திரனும் அம் மரத்தின் மீது அமிழ்தத்தைப் பொழிந்தான்.முன்னைவிட பன் மடங்கு பொலிவுடனும்,கம்பீரத்துடனும் ஓங்கி வளர்ந்து நின்றது மரம்.
‘தருமரே! கிளியின் பக்தியால் அம்மரம் பழைய நிலையை விட சிறந்து விளங்கியது என்பதுடன் அல்லாது, அக்கிளியும் ஆயுள் முடிவில் இந்திர லோகம் அடைந்தது.பக்தியுள்ளவனைச் சார்ந்தவர் மரம் போல நற்பயனைப் பெறுவர் என உணர்வாயாக’ என்றார் பீஷ்மர்.