Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » இந்தியாவின் தீராத மர்மங்கள் – 3

இந்தியாவின் தீராத மர்மங்கள் – 3

என்னை ஆச்சர்யப்பட வைத்த விஷயங்களில் ஒன்று… இந்தியாவின் தீரா மர்மங்களைப்பற்றி ஆராயும்போது பெரும்பாலும் மரணங்களே அதில் வியாபித்திருப்பதுதான்…

சஞ்சய் காந்தி… இந்திரா காந்தியின் இளைய மகன். அரசியலில் எவ்வித பதவியும் வகிக்காமலேயே அசுர வளர்ச்சியடைந்தவர். இவரது அண்ணன் ராஜீவ் காந்தி எந்தளவுக்கு அமைதியானவரோ அதற்கு நேரெதிர் சஞ்சய் காந்தி! தடாலடிப்பார்ட்டி என்றும் அடாவடிப்பார்ட்டி என்றும் பலவிதமான தகவல்கள் நிலவுகின்றன.

நமது இன்றைய மாருதி-சுசூகி கம்பெனி இவரால்தான் நிறுவப்பட்டது என்பது நம்மில் பலர் அறிந்திருக்காத ஆச்சர்யச்செய்தி!. இந்திராகாந்தி 1975ல் எமெர்ஜென்சி பிரகடனம் செய்தபோது இந்திராகாந்திக்கு முழுக்க முழுக்க ஆலோசகராக செயல்பட்டவர் சஞ்சய் காந்திதான். அப்போது நாடு முழுவதும் இந்தியாவை ஆள்வது பிரதமர் அலுவலகம் அல்ல… பிரதமரின் வீடுதான் என்றுகூட ஒரு விமர்சனம் கிளம்பியிருக்கிறது. சஞ்சய் காந்தியின் மற்றுமொரு சாதனை நாடு முழுவதும் பரப்பப்பட்ட ‘’குடும்பக்கட்டுப்பாடு’’ திட்டம்!

பெரும்பாலான கருத்துக்களும், தகவல்களும் இந்தியாவின் இரும்புப் பெண்மணியாய் அறியப்பட்ட இந்திரா காந்தியையே அவரது மகன் சஞ்சய் காந்தி பிளாக் மெயில் செய்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாக தெரிவிக்கின்றன.

தடாலடிக்கு பேர் போனவராய் விளங்கி இந்திராவின் அரசாங்கத்தையே தனது கைக்குள் வைத்திருந்த சஞ்சய் காந்தி ஜீன்-23,1980ல் டெல்லியில் டெல்லி ஃபிளையிங் கிளப்பைச் சேர்ந்த ஒரு புது ரக விமானத்தை இயக்கிப் பறந்தபோது விபத்துக்குள்ளாகி இறந்திருக்கிறார். அவருடன் இறந்த ஒரே ஆள் அந்த விமானத்தில் இருந்த கேப்டன் சுபாஷ் சக்சேனா.

சஞ்சய் காந்தியின் இந்த திடீர் மரணம் பலவித சந்தேகங்களுடனும், தகவல்களுடனும் வரலாற்றில் தீரா மர்மமாகவே இடம்பிடித்ததற்கு சில காரணங்கள் உண்டு…

1)   சஞ்சய் காந்தியின் இறப்புச்செய்தி கேட்டதும் இந்திராகாந்தி எழுப்பிய முதல் கேள்வி சஞ்சய் காந்தியிடமிருந்த ரிஸ்ட் வாட்ச் மற்றும் சாவிக்கொத்தைப்பற்றியதுதான்!

2)   சஞ்சய் காந்தியின் மரணத்திற்கு பிறகு அதை விசாரிப்பதற்காக இந்திராவால் அமைக்கப்பட்ட நீதிபதி எம்.எல்.ஜெயின் தலைமையிலான விசாரனைக்கமிஷன் வெகு விரைவிலேயே இந்திராவால் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏன் இந்திராகாந்தி அந்த விசாரணைக்கமிஷனை தள்ளுபடி செய்தார் என்பது புரியாது புதிர்தான்.

3)   சஞ்சய் காந்தியின் இறப்பிற்கு பிறகு ராஜீவ் காந்தி உடனடியாக அரசியலில் நுழைந்திருக்கிறார்!!!

இன்னமும் கூட சஞ்சய்காந்தியின் மரணத்திற்கு இந்திராதான் காரணம் எனும் எண்ணம் மக்கள் மனதிலிருந்து அகலாமலிருப்பது அவரது மரணத்தில் நீடித்திருக்கும் தீரா மர்மமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top