Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » இந்தியாவின் தீராத மர்மங்கள் – 2

இந்தியாவின் தீராத மர்மங்கள் – 2

இந்தியாவின் தீராத மர்மங்களில் இரண்டாவது இடத்தை லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்தான் பிடித்திருக்கிறது. லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமர் என்பதைத்தவிர பெரும்பாலான விஷயங்கள் பலருக்குத் தெரியாது.

அக்டோபர்-2, 1904ல் பிறந்த லால் பகதூர் சாஸ்திரி இந்திய சுதந்திரப் போராட்டக் காலங்களில் இண்டியன் நேஷனல் காங்கிரசின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராய்த் திகழ்ந்தவர். சுதந்திர இந்தியாவின் நேருவின் அமைச்சரவையில் தொடர்ந்து பதவி வகித்த போதும், பெரிதாய் பரபரப்பாய் வெளியில் தெரியாத அமைதியான அரசியல்வாதியாகவே இருந்தவர்.

மே-27, 1964ல் நிகழ்ந்த நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்திராகாந்தியை பிரதமராக்குவதற்கு முன்னிலைப்படுத்திய நிகழ்வுகளை இந்திரா மறுத்ததால் லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் இரண்டாவது பிரதமராகப் ஜீன், 1964ல் பொறுப்பேற்றார்.

இவரது நிர்வாகத்திறமைகளில் முக்கியமானது… இவரின் வெண்மைப்புரட்சி… பால் உற்பத்திக்கு முதலிடம் அளித்து இவரால் உருவாக்கப்பட்டதுதான் ‘’நேஷனல் டெய்ரி டெவலெப்மெண்ட் போர்டு’’ என்பது நம்மில் பலர் அறியாத ஆச்சர்யச்செய்தி.

நாடு முழுவதும் உணவுப்பஞ்சம் நிலவியபோது சாஸ்திரி நாட்டு மக்களை தலைக்கு ஒரு உணவை அரசாங்கத்திடம் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு பெறப்படும் உணவை பதப்படுத்தி பஞ்சம் நிலவும் ஏரியாக்களில் விநியோகிக்க திட்டமிட்டார். பசுமைப்புரட்சியை உருவாக்கியதிலும் சாஸ்திரி முதன்மையானவரே. இந்தோ-பாக் 2ம் யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையில் சாஸ்திரியால் முழக்கமிடப்பட்ட கோஷமே ‘’ஜெய் ஜவான், ஜெய் கிசான்’’…

தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும் சாஸ்திரியின் பங்கு மிக முக்கியமானது. இந்தித்திணிப்பை விரும்பாத மாநிலங்களில் ஆங்கிலமே தொடர்ந்து மத்திய அரசு மொழியாக நீடிக்கும் என்று சாஸ்திரி வழங்கிய உத்திரவாதத்திற்குப் பிறகே மொழிப்போர் போராட்டங்கள் அமைதியடைந்திருக்கின்றன.

ஈழத்தமிழர் விவகாரத்திலும் சாஸ்திரியின் பங்களிப்பு இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்?…

1964ல் சாஸ்திரி அப்போதைய சிறிலங்கன் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கேவுடன் ஒரு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளார். சிறிமாவோ-சாஸ்திரி அல்லது பண்டாரநாயக்கே-சாஸ்திரி என்றழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துகளின்படி ஆறு இலட்சம் இந்தியத் தமிழர்கள் இந்தியாவில் மீள் குடியமர்த்தப்படவேண்டும்.

மூன்று இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் தமிழர்களுக்கு சிறிலங்க குடியுரிமை வழங்கப்படவேண்டும். இவையனைத்தும் அக்டோபர்-31,1981க்குள் நிறைவேற்றப்படவேண்டும். சாஸ்திரியின் மறைவுக்குப்பின்னர் 1981 நிலவரப்படி இந்தியா மூன்று இலட்சம் தமிழர்களை இந்தியாவில் மீள்குடியமர்த்தியிருக்கிறது. சிறிலங்கா 1,85,000 தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது. அதன்பிறகு இந்தியாவாலேயே இந்த ஒப்பந்தம் காலாவதியானதாக சொல்லப்பட்டு நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்பது காலத்தின் கொடுமையே.

பாகிஸ்தான் அதிபர் முகம்மது அயூப்கான் இந்தியாவில் வலுவில்லாத தலைமை அமைந்திருப்பதாகக் கருதி இந்தியா மீதான போர் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். செப்டம்பர்,1965ல் இந்தோ-பாக் இரண்டாம் யுத்தம் தொடங்கியது.

இந்திய மக்களிடையே லால் பகதூர் சாஸ்திரி மிகப்பெரிய ஹீரோவாக உருவெடுத்தது இந்தப்போரினால்தான். அதற்கு முந்தையை இந்தோ-சைனா போரில் இந்தியாவின் தோல்விக்கு நேருவின் தவறான முடிவே காரணமென்பதால் சாஸ்திரி பல திறமையான முடிவுகளை எடுத்து இந்தோ-பாக் இரண்டாம் யுத்தத்தில் இந்தியாவின் முன்னிலைக்கு வழிவகுத்தவர்.

இந்தப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரஷ்யா ஏற்படுத்திய சமாதானப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு ஜனவரி-10,1966ல் பிரபலமான தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுடன் கையெழுத்திட்டார் சாஸ்திரி. அதுதான் இந்திய நாட்டிற்காக அவர் போட்ட கடைசி கெயெழுத்து என்பது நமது துரதிர்ஷ்டமே.

ஜனவரி-11, 1966ல் அதாவது தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான மறுநாளே சாஸ்திரி ரஷ்யாவில் தான் தங்கியிருந்த அறையில் அதிகாலை 1.32க்கு மாரடைப்பால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

சாஸ்திரியின் இந்தத் திடீர் மரணமும் நேதாஜியின் மரணத்தைப் போலவே பல மர்மங்களுடன் இந்தியாவின் தீரா மர்மங்களின் வரிசையில் கலந்து போனதற்கான காரணங்கள்…

1)   இறப்பிற்கு பின்னர் சாஸ்திரியின் உடல் நீல நிறமாக மாறியதால் சாஸ்திரியின் குடும்பமும், எதிர்க்கட்சிகளும், பெரும்பாலான நாட்டு மக்களும் சாஸ்திரியின் மரணம் இயற்கையானதல்ல என்று எதிர்ப்பு தெரிவித்தும், கடைசி வரையிலும் அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படவில்லை

2)   கடைசியாக சாஸ்திரிக்கு குடிக்க தண்ணீர் வழங்கிய வேலையாள் ரஷ்ய அரசால் கைது செய்யப்பட்டு பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டிருக்கிறான். சாஸ்திரியின் மரணம் ஹார்ட் அட்டாக்தான் என்றால் எதற்காக அந்த உடனடி கைது நடவடிக்கை நிகழ்ந்திருக்கிறது?…

3)   சாஸ்திரியின் மரணம் பற்றிய விசாரணைக்காக ராஜ் நரைன் என்கொயரி கமிஷன் என்று ஒன்று நிறுவப்பட்டு அதன் முடிவுகள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. (இன்று அந்த என்கொயரி கமிஷனின் ரிப்போர்ட் இந்தியன் பார்லிமெண்ட் லைஃப்ரரியிலும் இல்லாமல் தொலைந்திருக்கிறது).

4)   2009ம் ஆண்டு பத்திரிக்கையாளர் அனுஜ் தர் என்பவரால் தகவலறியும் உரிமைச்சட்டதின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் சாஸ்திரியின் மரணம் பற்றி கேட்கப்பட்ட தகவல்களுக்கு பிரதமர் அலுவலகம் செக்சன் RTI – 8(I) (a)ன் படி நிராகரித்திருக்கிறது. ( இந்த செக்சன் எதற்கு தெரியுமா?… ஒரு விஷயம் அரசாங்கத்தால் வெளியிடப்படும்போது அது குறிப்பிட்ட சில நாடுகளுடனான நல்லுறவில் விரிசல் உண்டாக்குவதாகவோ… இல்லை உள்நாட்டில் மக்கள் கிளர்ச்சிக்கு வித்திடுவதாகவோ இருக்கும் பட்சத்தில் அரசாங்கம் அதை நிராகரிக்க உரிமையுண்டு!!!)

5)   சாஸ்திரியின் மரணத்திற்கு பின்னால் இந்தியாவின் பிரதமரானவர் யார் தெரியுமா?… இந்திரா காந்தி!!! அவரின் ரஷ்ய ஆதரவு அவரது ஆட்சி வரலாற்றில் நாடறிந்த விஷயம்…

இப்படி இந்தியாவின் இரண்டாவது பிரதமரின் வரலாறே தீரா மர்மங்களுடன் தெளிவான விடையின்றிதான் முடிந்து கிடக்கிறது என்பது மர்மத்திலும் சோகமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top