Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பயப்பட்டால் தான் ஆபத்து!!!

பயப்பட்டால் தான் ஆபத்து!!!

‘This World and That’ என்ற புத்தகத்தை எழுதிய Febeebi Payan என்கிற பெண்மணி, ஆவிகள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்தவர். டிஸ்கவரி சேனலில், எங்கோ உள்ள ஓர் உயிரினத்தைப் பார்க்க காடு மலையெல்லாம் தாண்டுகிற ஆராய்ச்சியாளர் மாதிரி இவரும் உலகில் எங்கு ஆவி நடமாட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டாலும், உடனே அங்கே கிளம்பிப் போய்விடுகிற டைப்!

ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு (வீட்டுக்கு) தன் செகரேட்டரியுடன் திரும்பிக் கொண்டிருந்தார் அவர். வழியில் காரில் எதோ சின்னக்கோளாறு. இரவு நேரம். அருகே உள்ள லாட்ஜ் (ஹைவேயில் உள்ள Motel) ஒன்றில் ராத்திரி தங்கிவிட்டுப் போகலாம் என்று முடிவு செய்தார் பாய்ன்.

நடந்ததை அவரே சொல்லட்டும்!

‘லாட்ஜ் உள்ளே நுழைந்து ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போடும்போதே என் உள்ளுணர்வுகள் சிலிர்த்தன! மாடியில் ஓர் அறையில் நானும் இன்னொரு அறையில் உதவியாளரும் தங்கினோம். அதற்குமுன் நான் இரு அறைகளையும் பார்வையிட்டேன். குறிப்பாக நான் தங்கப்போகிற அறைக்குள் நுழைந்தபோது மறுபடியும் என் உள்ளுணர்வு எச்சரித்தது. சாப்பிட்ட பிறகு நேராக அறைக்குள் போய்ப் படுத்த சில நிமிடங்களில்…

ஆழ்ந்து தூங்கிவிட்டேன். ஓரிரு மணிகள் கடந்திருக்கும். லேசாக விழிப்பு வந்தது. அந்த அறை இப்போது சற்றுக் குளிர்ந்ததுபோல் தோன்றியது. ஒரு தர்மசங்கடமான ஜில்லிப்பு!

சற்றுப் பதற்றமானேன். படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளப் பாத்தபோது… அது நிகழ்ந்தது. இரு முரட்டு கரங்கள் என் கழுத்தைப் பற்றின… தொள தொளவென்று பச்சைநிறக் கோட்டு அணிந்து, சற்று முகம் வெளிறிப் போன ஒருவன் – ஓர் உருவம் – கட்டில்மீது அமர்ந்து என் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தான்.

அறையில் ஜில்லிப்பு மேலும் சற்று அதிகரித்தது!

பாய்ன் நிறையவே ஆவிகளைப் பார்த்த அனுபவசாலி. உங்களை மாதிரியோ, என்னை மாதிரியோ மிரண்டு போகிறவர் அல்ல. இருப்பினும், பச்சை நிற கோட்டுடன், வெளிறிய முகத்துடன் தன் கழுத்தை அந்த உருவம் நெரித்த போது, அந்தப் பெண்மணி கொஞ்சம் திணறிப் போனதாகவே குறிப்பிடுகிறார்.

‘என்னால் மூச்சுவிட முடியவில்லை. கூடவே இந்தத் திடீர்த் தாக்குதலில் கோபமும் வந்தது. நான் அதனிடம் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள முடிவு கட்டினேன். ‘போ!’ என்று இருமுறை சிரமப்பட்டுக் கூச்சலிட்டேன். அந்த உருவம் சற்றுப் பின்வாங்கியபோது, எழுந்து உட்கார்ந்தேன்.

வேகமாகக் கதவுப்பக்கம் என் கையை நீட்டி, ‘போ, வெளியே!’ என்று கத்தினேன். அதை நோக்கி முன்னேறுவது போல பயமுறுத்தினேன். அந்த ஆவி சற்றுப் பரிதாபமாக என்னையே பார்த்துக் கொண்டு, பின் நோக்கி நகர்வது போலத் தோன்றியது. பிறகு கதவுக்கு அருகில் சென்று மெல்ல மங்கலாக மாறி, சடக்கென்று மறைந்துவிட்டது.

ஓரிரு நிமிடங்களில், பழைய ‘சீதோஷ்ண நிலை’க்கு அந்த அறை திரும்பியது.
என் கழுத்தில் வலி. கீறல் மாதிரி ஓர் உணர்வு. எழுந்து சென்று கண்ணாடியில் பார்த்தேன். ஆவி என்னை முரட்டுத்தனமாகக் கையாண்டதால் என் கழுத்து முழுவதும் சிவந்துபோய், கீறல் மயமாகத்தானே இருக்க வேண்டும்?! ஆனால், கண்ணாடியில் பார்த்தபோது எந்த கீறலும் தெரியவில்லை. கழுத்துப் பகுதி சாதாரணமாகவே இருந்தது!’ – விவரிக்கிறார் பாய்ன்.

மறுநாள் காலை, சிற்றுண்டியை முடித்த பிறகு, அந்த லாட்ஜ் மேனேஜரைச் சந்தித்தார் பாய்ன். ‘I Dont Like That Ghost!’ என்று பேச்சை ஆரம்பித்தார். மேனேஜர் சற்று திடுக்கிட்டு நிமிர்ந்தபோது, ‘அந்த ஆவியைப் பார்த்துச் சிலர் பயந்து போகலாம். அதனால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம். ஏன் அந்த அறையை இன்னும் வாடகைக்குத் தருகிறீர்கள்?’ என்றார் பாய்ன்.

‘மேடம், அப்படியெல்லாம் எதுவுமில்லை. உங்கள் கற்பனை…’ என்று மேனேஜர் மென்று விழுங்க,

‘Dont be Silly! உங்களுக்கு நன்கு தெரியும். மேலே அந்த அறையில் ஓர் ஆவி நடமாடுகிறது என்று!’ பாய்ன் கடுமையாகச் சொன்ன பிறகே லாட்ஜ் மேனேஜர் தலைகுனிந்தவாறு ஒப்புக்கொண்டார்.

‘ஆவிகளைப் பார்த்துக் கவலைப்படத் தேவையில்லை. பயப்பட்டால்தான் ஆபத்து!’ என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் பாய்ன்.

நடக்கிற காரியமா இது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top