கிருஷ்ணதேவராயருக்கு ஒரு நாள் மிகவும் வருத்தமாக இருந்தது. “நாம் மக்களுக்கு எவ்வளவு செய்தாலும் அவர்களுக்கு அந்த பணம் ஏன் போய்ச் சேருவதில்லை?’ என்பதுதான் அந்த வருத்தம். இதன் காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார் மன்னர். தன்னுடைய சந்தேகத்தை தெனாலிராமனிடம் கேட்டார் மன்னர்.
“”ராமா! இதற்கு என்ன காரணம்? உனக்கு தெரியுமா?”
“”அரசே! இதனை நான் ஒரு நாடகம் போல் விளக்க விரும்புகிறேன். எனக்கு உடனே பனிக்கட்டி ஒன்றை கொண்டு வந்து தரச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை புரியும்,” என்றான்.
பனிக்கட்டியும் வந்தது. அதனை வாங்கின தெனாலிராமன் மன்னரிடம், “”அரசே! நீங்கள் இந்த பனிக்கட்டியை நிதி அமைச்சரிடம் கொடுங்கள். பின் அவர் அவரது உதவியாளரிடம் கொடுக்கட்டும். அதன் பிறகு பனிகட்டி அலுவலர்களிடம் போய்ச் சேரட்டும். அப்பொழுது உங்களுக்கு விஷயம் புரியும்,” என்றான் தெனாலிராமன்.
பனிக்கட்டி கிட்டத்தட்ட 15 அலுவலர்களை தாண்டி கடைசியில் கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று சேர்ந்தது. அப்பொழுது அவர் கையில் பனிக்கட்டி இல்லை. சிறிது நீர் தான் இருந்தது. பனிக்கட்டி உருகி அப்படி ஆகிவிட்டது. இப்பொழுது ராமன் சொன்னான்:
“”இதுதான் ஏழை மக்கள் படும் கஷ்டங்களுக்கு காரணம்,” என்றான்.
மன்னன் புரிந்து கொண்டு நிர்வாகத்தை சீர்படுத்த முனைந்தார்.