Home » விவேகானந்தர் » ராஜ யோகம் பகுதி – 16
ராஜ யோகம் பகுதி – 16

ராஜ யோகம் பகுதி – 16

11. ஹேது பலாச்ரயாலம்பனை; ஸங்க்ருஹீதத்வா தேஷாமபாவே ததபாவ

காரணம், பலன், ஆதாரம், பற்றுகின்ற பொருட்கள் இவை ஒன்று கூடியிருப்பதால் இவையில்லாதபோது அதுவும் இல்லை.

காரண காரியங்களால் ஆசை ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கின்றன. ஓர் ஆசை தோன்றினால் அது விளைவை உண்டுபண்ணாமல் மறையாது. சித்தத்தில் எல்லா பழைய ஆசைகளும் சம்ஸ்காரங்களாகப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அவை செயல்பட்டு ஓயும்வரை அழிவதில்லை. மேலும், புலன்கள் புறப் பொருட்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்வதால், புதிய ஆசைகளும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. ஆகையால், ஆசைக்கான காரணம், பலன், ஆதாரம், பற்றுகின்ற பொருள் இவற்றை ஒழிக்க முடியுமானால் மட்டுமே ஆசை ஒழியும்.

12. அதீதானாகதம் ஸ்வரூபதோஸ்தயத்வ பேதாத் தர்மாணாம்.

கடந்தகாலமும் எதிர்காலமும் தங்கள் சொந்த இயல்பில் நிலைபெற்றுள்ளன. ஏனெனில் குணங்கள் வெவ்வேறு வழிகளை உடையதாயிருக்கின்றன.

அதாவது, இல்லாததிலிருந்து இருப்பது ஒரு போதும் வராது. கடந்தகாலமும் எதிர்காலமும் இப்போது வெளிப்பட்டுத் தோன்றாவிட்டாலும் அவை நுண்ணிய வடிவில் இருக்கவே செய்கின்றன.

13. தே வ்யக்த ஸூக்ஷ்மா குணாத்மான

அவை வெளிப்பட்டோ சூட்சுமமாகவோ உள்ளன; குணங்களின் தன்மையை உடையனவாக இருக்கின்றன.

சத்வம், ரஜஸ், தமஸ் இந்த மூன்று பொருட்களும் மூன்று குணங்கள். இவற்றின் தூல நிலையே நாம் உணர்கின்ற இந்தப் பிரபஞ்சம். இந்தக் குணங்கள் வெளிப்படுவதிலுள்ள வேறுபாட்டால், இறந்தகாலமும் எதிர்காலமும் எழுகிறது.

14. பரிணாமைகத்வாத் வஸ்து தத்வம்

பரிணாமத்திலுள்ள ஒருமையிலிருந்தே பொருட்களின் ஒருமை உண்டாகிறது.

குணங்கள் மூன்றாக இருந்தாலும் அவற்றின் வேறு பாடுகள் ஒருங்கிணைந்திருப்பதால் எல்லா பொருட்களிலும் ஒருமை நிலவுகிறது.

15. வஸ்துஸாம்யே சித்தபேதாத்தயோர்விபக்த பந்தா

ஒரே பொருளாக இருந்தாலும் அனுபவமும் ஆசையும் வேறுபட்டிருப்பதால், மனமும் பொருளும் வெவ்வேறு இயல்புடையனவாக உள்ளன.

நமது மனங்களைச் சாராமலிருக்கின்ற புறவுலகம் ஒன்றுள்ளது. இது பவுத்தர்களின் க்ஷணிக விஞ்ஞான வாதத்தின் எதிர்வாதமாகும். ஒரே பொருளை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறாகப் பார்ப்பதால். அது ஒரு குறிப்பிட்ட ஒரு மனிதனின் வெறும் கற்பனையாக இருக்க முடியாது.

16. ததுபராகாபேக்ஷித்வாச்சித்தஸ்ய வஸ்து ஜ்ஞாதாஜ் ஞாதம்

காணப்படும் பொருள் சித்தத்தில் ஏற்படுத்தும் தன்மையையே சார்ந்து இருப்பதால், அது சித்தத்திற்குத் தெரியப் பட்டோ தெரியாமலோ இருக்கும்.

17. ஸதாஜ்ஞாதாச்சித்த வ்ருத்தயஸ்தத்ப்ரபோ புருஷஸ்யாபரிணாமித்வாத்

சித்தத்திற்குத் தலைவனான புருஷன் மாறுபாடு இல்லாதவனாக இருப்பதால் சித்தத்தின் நிலைகள் எப்போதும் அறியப்படும்.

பிரபஞ்சம் மனோமயமாகவும் ஜடப்பொருளாகவும் உள்ளது என்பதே இந்தக் கொள்கையின் முழு சாரம். இரண்டும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்தப் புத்தகம் என்பது என்ன?. தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் சில மூலக்கூறுகளின் சேர்கையே சில மூலக்கூறுகள் வெளியே செல்கின்றன, சில உள்ளே வருகின்றன. இது ஒரு நீர்ச்சுழிபோல் உள்ளது. அதனை ஒருமைப்படுத்துவது எது? அதனை ஒரு புத்தகமாக்குவது எது? மாற்றங்கள் ஓர் ஒழுங்குமுறையில் நடைபெறுகின்றன. அவை சித்தத்தில் இயைபான, ஒழுங்கான பதிவுகளை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தொகுத்து புத்தகம் என்னும் பொருள் இருப்பதாக மனம் அறிகிறது. இதன் பகுதிகள் மாறினாலும் புத்தகம் என்ற தொகுதி மாறாமல் உள்ளது. மனமும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரே பொருளில் வெவ்வேறு வேகங்களில் இயங்குகின்ற இரண்டு படலங்கள் போன்று மனமும் உடலும் உள்ளன. ஒன்று வேகம் குறைந்தும், மற்றது வேகம் அதிகரித்தும் இருப்பதால் இரண்டு இயக்கங்களின் வேறுபாட்டை நாம் அறிய முடிகிறது. உதாரணமாக ஒரு ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு அருகில் மற்றொரு வண்டி செல்கிறது. இவை இரண்டின் இயக்கத்தையும் ஓர் அளவுக்கு மட்டுமே நாம் காண முடியும். ஆனால் இன்னும் ஏதோ தேவைப்படுகிறது. இயங்கும் ஒரு பொருளை, இயங்காத ஒன்றுடன் ஒப்பிட்டுத்தான் இயக்கத்தைத் தெரிந்து கொள்கிறோம். இரண்டு மூன்று பொருட்கள் இயங்குமானால், அவற்றுள் வேகமாகச் செல்வதை முதலில் காண்கிறோம். குறைந்த வேகத்தில் செல்பவற்றைப் பின்னரே காண்கிறோம். மனம் இயங்குவதைக் காண்பது எப்படி? அதுவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே அதைக் காண்பதற்கு மனத்தைவிட மெதுவாக இயங்கும் மற்றொன்று வேண்டும், அதை அறிய அதைவிட மெதுவான ஒன்று வேண்டும். இவ்வாறு ஒன்றைவிட மெதுவாக இயங்கும் மற்றொன்றைத் தேடிக்கொண்டிருப்பதற்கு ஒரு முடிவு இல்லை. எங்கேயாவது ஓரிடத்தில் நாம் நின்றாக வேண்டும். ஒருபோதும் இயங்காத ஒன்றை அறிந்து, இந்தத் தொடரை முடிக்க வேண்டும். முடியாத சங்கிலித் தொடராகிய இந்த இயக்கத்தின் பின்னால் மாறுதலற்ற, தூய, நிறமற்ற புருஷன் இருக்கிறான். மாய விளக்கிலிருந்து எழும் உருவங்கள் திரையைப் பாதிக்காமல் அதன்மீது தெரிவதுபோல், இந்தத் தோற்றங்களெல்லாம் புருஷனில் பிரதிபலிக்கின்றன.

18. ந தத் ஸ்வாபாஸம த்ரும்ச்யத்வாத்

மனம் ஒரு பொருள் ஆதலால் அது சுயஒளி உடையதல்ல.

இயற்கையில் எங்குமே அற்புதமான சக்திகள் வெளிப்பட்டுத் துலங்குகின்றன. எனினும் அது சுயஒளி பெற்ற தல்ல. இயல்பிலேயே அறிவுடையதும் அல்ல, புருஷன் மட்டுமே சுயஒளி உள்ளவன். அவன் தன் ஒளியை எல்லாவற்றிற்கும் கொடுக்கிறான். புருஷனின் ஆற்றலே ஜடப்பொருள் மற்றும் சக்திகளின் வழியாக ஊடுருவி நிற்கிறது.

19. ஏக ஸமயே சோபயானவதாரணம்

ஒரேவேளையில் இரண்டை அறிந்துகொள்ள முடியாததால்

மனம் சுயஒளி பெற்றிருந்தால் அது ஒரேவேளையில் தன்னையும் புறப் பொருட்களையும் விளக்க முடியும். ஆனால் அந்தச் சக்தி மனத்திற்கு இல்லை. புறப்பொருட்களைக் காணும்போதே தன்னையும் காணும் திறமை அதற்கில்லை. எனவே புருஷனே சுயஒளி உள்ளவன். மனம் அவ்வாறில்லை.

20. சித்தாந்தர த்ருச்யே புத்திபுத்தேரதிப்ரஸங்க ஸ்ம்ருதி ஸங்கரச்ச

ஒரு சித்தத்தை அறிவதற்கு மற்றொரு சித்தம் வேண்டும் என்றால், இரண்டாவதை அறிய மற்றொரு சித்தம் வேண்டும். இவ்வாறு சித்தங்களுக்கு முடிவே இருக்காது. ஞாபகக் குழப்பமே அதன் விளைவாக இருக்கும்.

சாதாரண மனத்தை அறிவதற்கு மற்றொரு மனம் இருப்பதாகக் கொள்வோம். இரண்டாவதை அறிவதற்கு மூன்றாவது மனம் வேண்டும். இந்தத் தொடருக்கு முடிவே இருக்காது. இதனால் நினைவில் குழப்பம் ஏற்படும். ஞாபகம் என்ற களஞ்சியமே இல்லாமல் போய்விடும்.

21. சிதேரப்ரதிஸங்க்ரமாயாஸ்ததாகாராபத்தௌ ஸ்வபுத்தி ஸம்வேதனம்

அறிவின் சாரமாகிய புருஷன் மாறுபாடு இல்லாதவன் சித்தம் புருஷனுடைய வடிவத்தை ஏற்கும்பொழுது, அது அறிவு மயமாக விளங்குகிறது.

அறிவு என்பது புருஷனின் ஒரு குணம் அல்ல என்பதைத் தெளிவாக்குவதற்காகப் பதஞ்ஜலி முனிவர் இதைக் கூறுகிறார். சித்தம் புருஷனின் அருகில் வரும்பொழுது, புருஷன் சித்தத்தில் பிரதிபலிப்பதுபோல் தோன்றுகிறது. அப்போது, அந்தவேளைக்கு அது அறியும் தன்மை பெற்று புருஷன்போல் தோன்றுகிறது.

22. த்ரஷ்டருத்ருச்யோபரக்தம் சித்தம் ஸர்வார்த்தம்

காண்பவனோடும் காணப்படும் பொருட்களோடும் கூடியிருப்பதால் அனைத்தையும் அறியும் தன்மை சித்தத்திற்கு வருகிறது.

சித்தத்தின் ஒருபுறம், காணப்படும் பொருளாகிய புறவுலகம் பிரதிபலிக்கிறது. மறுபுறம், காண்பவனாகிய புருஷன் பிரதிபலிக்கிறான். இவ்வாறுதான் அதற்கு அனைத்தையும் அறியும் ஆற்றல் ஏற்படுகிறது.

23. ததஸங்க்யேயவாஸனாபிஸ்சித்ரமபி பரார்த்தம் ஸம்ஹத்ய காரித்வாத்

சித்தம் எண்ணற்ற ஆசைகளால் பலதரப்பட்டு இருப்பினும், அது வேறொன்றிற்காகவே (புருஷனுக்காகவே) செயல்படுகிறது. ஏனெனில் சேர்ந்து இருக்கும்போதுதான் அது செயல்புரியும்.

சித்தம் பல்வேறு பொருட்களின் சேர்க்கையால் ஆனது. ஆதலால் அது தனக்காகச் செயல்புரிய முடியாது. இந்த உலகத்தில் எவையெல்லாம் சேர்க்கைப் பொருளாக இருக்கிறதோ அதன் சேர்க்கைக்கு வேறு காரணம் இருக்க வேண்டும் அதன் சேர்க்கை மூன்றாவது வேறொரு பொருளுக்காகத்தான் இருக்க வேண்டும், சேர்க்கைப் பொருளான சித்தத்தின் சேர்க்கை புருஷனுக்காக அமைந்துள்ளது.

24. விசேஷ தர்சின ஆத்மபாவ பாவனா நிவ்ருத்தி

விவேகிகள் சித்தத்தை ஆன்மாவாக எண்ணுவதில்லை. புருஷன் என்பது மனம் அல்ல என்பதை யோகி மனத்தின்மூலம் அறிந்து கொள்கிறான்.

25. ததா விவேகனிம்னம் கைவல்ய ப்ராக்பாவம் சித்தம்

அப்பொழுது விவேகத்துடன் கூடிய சித்தம் கைவல்யத்திற்கு (தனி நிலை) முந்திய நிலையை அடைகிறது)

இவ்வாறு யோகப் பயிற்சி நமக்கு விவேகத்தை அளிக்கிறது. அதனால் நமது காட்சி தெளிவாகிறது. கண்ணின் முன் உள்ள திரை நீக்கப்பெற்று, பொருட்களை நாம் உள்ளது உள்ளபடி காண்கிறோம்,. இயற்கை ஒரு சேர்கைப் பொருள். அது சாட்சியான புருஷனுக்காகவே தனது அழகிய காட்சிகளை விரிக்கிறது என்றும், இயற்கை தலைவன் அல்ல, அகத்திலே அரசனாக அமர்ந்துள்ள புருஷனுக்காகவே தனது சேர்க்கைகளையும் அற்புதங்களையும் காட்டுகிறதென்றும் அறிகிறோம். நீண்ட காலப் பயிற்சியால் விவேகம் வரும்போது, அச்சம் அகல்கிறது. சித்தம் கைவல்யம் பெறுகிறது.

26. தச்சித்ரேஷு ப்ரத்யயாந்தராணி ஸம்ஸ்காரேப்ய

அதற்குத் தடையாக எழும் எண்ணங்கள் சம்ஸ்காரங்களிலிருந்து வருபவை.

நாம் இன்புற்று இருக்க ஏதாவது புறப்பொருள் தேவை என்று நம்மை நம்பச் செய்கின்ற எண்ணங்கள் அனைத்துமே நிறைநிலையை அடைவதற்குத் தடையாக உள்ளவை. புருஷன் இயல்பாகவே இன்ப வடிவினன். நன்மை வடிவினன்; பழைய சம்ஸ்காரங்கள் இந்த அறிவை மறைத்துள்ளன. சம்ஸ்காரங்கள் செயல்பட்டு ஓய வேண்டும்.

27. ஹானமேஷாம் க்லேசவதுக்தம்

முன்னர் கூறியதுபோல் (2.10) அறியாமையையும் அகங்காரத்தையும் அழிக்கும் முறையாலேயே இவற்றையும் அழிக்கலாம்.

28. ப்ரஸங்க்யானேப்ய குஸீதஸ்ய ஸர்வதா விவேக க்யாதேர் தர்ம மேக ஸமாதி

தத்துவங்களின் உண்மைவிவேக அறிவுநிலையை அடைந்தபின், அதன் பலன்களைத் தியாகம் செய்பவனுக்குப் பரிபூரண விவேகத்தின் பயனாக தர்மமேகம் என்ற சமாதி உண்டாகிறது.

விவேகத்தின் இந்த நிலையை அடையும்போது முன் அத்தியாயத்தில் கூறப்பட்ட சக்திகள் எல்லாம் யோகியை அடைகின்றன. உண்மையான யோகி அவற்றை ஒதுக்கித் தள்ளுகிறான். அப்போது அவனுக்கு தர்மமேகம் என்ற புதுமையான சிறந்த ஒளி வந்து சேர்கிறது உலக வரலாற்றில் கூறப்பட்ட தீர்க்கதரிசிகள் அனைவரும் இதனை அடைந்தவர்கள். அறிவிற்கு ஆதாரம் அனைத்தையும் அவர்கள் தங்களுக்கு உள்ளேயே கண்டனர். மெய்ப்பொருள் அவர்களுக்கு உண்மையாயிற்று. சித்திகளைப் பற்றிய வீண் பெருமைகளை அவர்கள் விட்டுவிட்டதால் சாந்தியும் அமைதியும் முழுத் தூய்மையும் அவர்களது இயல்பாகியது.

29. தத் க்லேச கர்ம நிவ்ருத்தி

அதிலிருந்து துன்பமும் செயல்களும் நீங்குகின்றன.

அந்த தர்மமேக நிலை வந்துவிட்ட யோகிக்கு வீழ்ச்சி அடைவோம் என்ற அச்சம் வராது. எதுவும் அவனைக் கீழே இழுக்க முடியாது. அவனுக்குத் தீமை வராது. துன்பமும் இல்லை.

30. ததா ஸர்வாவரணமலாபேதஸ்ய ஜ்ஞான ஸ்யானந்த்யாஜ் ஜ்ஞேயமல்பம்

அப்பொழுது மறைப்புகளும் மலினங்களும் நீங்கிவிடுவதால், அறிவு எல்லையற்றதாகி, அறியப்படும் பொருள் சிறியதாகிறது.

திரைகள் நீங்குகின்றன, அறிவு மட்டும் இருக்கிறது. பவுத்த சாஸ்திரங்களுள் ஒன்று, புத்தர் (அது ஒரு நிலையின் பெயர்) என்பதை எல்லையற்ற அறிவு, ஆகாசத்தைப் போல் எல்லையற்றது என்று விளக்குகிறது. ஏசு அந்த நிலையை அடைந்துதான் கிறிஸ்து ஆனார். நீங்கள் அனைவரும் அந்த நிலையை அடைய முடியும். அறிவு எல்லையற்றதாகும்போது அறியப்படும் பொருள் சிறியது ஆகிறது. முழு பிரபஞ்சமும் அதிலுள்ள அறியப்படும் பொருட்களான அனைத்தும் சேர்ந்தாலும் புருஷனின் முன்னிலையில் அவை ஒன்றுமே இல்லை. அறியப்படும் பொருள் எல்லையற்றுத் தோன்றுவதால் சாதாரண மனிதன் தன்னைச் சிறியவனாக எண்ணுகிறான்.

31. தத க்ருதார்த்தானாம் பரிணாமக்ரம ஸமாப்திர் குணானாம்

குணங்கள் குறிக்கோளை அடையும்போது அவற்றின் பரிணாமக் கிரமமும் முற்றுப் பெறுகிறது.

இனம்தோறும் மாறுதலடைகின்ற குண வேறுபாடுகள் அனைத்தும் அப்போது நிரந்தரமாக நீங்கிவிடுகின்றன.

32. க்ஷணப்ரதியோகீ பரிணாமாபராந்த நிர்க்ராஹ்ய க்ரம

கிரமம் ஒவ்வொரு கணநேரங்களுடன் தொடர்புடையதும் ஒரு தொடரின் முடிவில் காணப்படுவதும் ஆகும்.

பதஞ்சலி முனிவர், கிரமம் என்பதை ஒவ்வொரு கணத்திலும் ஏற்படுகின்ற மாறுபாடுகள் என்று குறிப்பிடுகிறார். சிந்திக்கும் போது பல கணங்கள் கழிக்கின்றன. கணந்தோறும் கருத்துக்களும் மாறுகின்றன. ஆனால் சிந்தித்து முடித்தபிறகே இந்த மாற்றங்களை அறிகிறோம். இதுவே கிரமம். எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையை அடைந்த மனத்திற்குக் கிரமம் என்பது இல்லை. அதற்கு எல்லாமே நிகழ்காலம்தான். நிகழ்காலம் மட்டுமே அதற்கு இருக்கிறது, இறந்தகாலமும் எதிர்காலமும் அகல்கின்றன. அவன் முன்னர் காலம் நின்றுவிடுகிறது. அறிவு அனைத்தும் ஒரு கணத்துள் அவனுடையதாகிறது. மின்னல்போல் எல்லா அறிவும் அவனுள் உதிக்கிறது.

33. புருஷார்த்த சூன்யானாம் குணானாம் ப்ரதிப்ரஸவ
கைவல்யம் ஸ்வரூப ப்ரதிஷ்டா வா சிதி சக்தேரிதி

எந்த நோக்கமும் இன்றி, புருஷனுக்காக வேலை செய்ய வேண்டுமென்ற சிந்தனையும் நீங்கப்பெற்று குணங்கள் படிப்படியாக மேலே போய் ஒடுங்கிவிடுவது கைவல்யம்; அல்லது அறிவு வடிவான புருஷன் தன் சொந்த இயல்பில் நிலைபெறுவது கைவல்யம் எனப்படும்.

இயற்கையின் பணி முடிந்துவிட்டது செவிலித்தாய் போன்று சுயநலமற்ற பணியை மேற்கொண்ட இயற்கையின் பணி முடிந்துவிட்டது. அவள் தன் உண்மை இயல்பை மறந்த ஆன்மாவை அழைத்துச் சென்று பல காட்சிகளைக் காட்டி, பல அனுபவங்களைப் பெறச் செய்து, அவனைப் பல்வேறு உடல்கள் வழியாக உயரஉயர இதமாக அழைத்துச் செல்கிறாள். இறுதியாக அவன் இழந்த மகிமையைத் திரும்பப் பெறுகிறான், தனது சொந்த இயல்பை உணர்கிறான். பின்பு, அந்த அன்புத்தாய் தான் வந்த வழியே திரும்பிச் சென்று, வாழ்க்கைப் பாலைவனத்தில் திக்குத் தெரியாமல் அல்லல்படும் மற்ற உயிர்களை முன்னேறச் செய்கிறாள். இவ்வாறு ஆரம்பமும் முடிவும் இன்றி இடைவிடாது உழைக்கிறாள். இன்பம், துன்பம், நன்மை, தீமை இவற்றினூடே எண்ணற்ற உயிர்கள் ஆறு போன்று நிறைநிலை, ஆன்ம அனுபூதி என்ற கடலுள் போய்க் கொண்டிருக்கின்றன.

தங்கள் உண்மை இயல்பை எய்தியவர்கள் அனைவருக்கும் மாட்சிமை உண்டாகுக! அவர்களது அருள் நிறைந்த ஆசிகளை நாம் அனைவரும் பெறுவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top