36. விசோகா வா ஜ்யோதிஷ்மதீ
அல்லது எல்லா துயரங்களுக்கும் அப்பால் உள்ள பேரொளியை (தியானிப்பதாலும்)
இது மற்றொரு வகை சமாதி, இதயத் தாமரையின் இதழ்கள் கீழ்நோக்கி இருப்பது போலவும், அதனூடே சுழுமுனை நாடி செல்வது போலவும் நினையுங்கள். மூச்சை உள்ளே இழுங்கள். அதை வெளிவிடும்போது தாமரையின் இதழ்கள் மேல்நோக்கித் திரும்புவதுபோல் பாவனை செய்யுங்கள். தாமரைக்குள்ளே பேரொளிப் பிழம்பான ஜோதி ஒன்று இருப்பதாக நினையுங்கள். அதைத் தியானியுங்கள்.
37. வீத ராக விஷயம் வா சித்தம்
அல்லது புலனின்பப் பொருட்களின் மீதுள்ள எல்லா பற்றுக்களையும் விட்டுவிட்ட இதயத்தைத்(தியானிப்பதாலும்)
நீங்கள் மதிக்கின்ற, போற்றுகின்ற, முற்றிலும் பற்றற்றவர் என்று நீங்கள் அறிந்த ஒரு மகானின் உள்ளத்தைச் சிந்தியுங்கள். அவரது உள்ளம் பற்றற்றிருக்கின்றது. அதைத் தியானம் செய்யுங்கள். அது உங்கள் மனத்தை அமைதி பெறச் செய்யும் இது முடியாவிட்டால் மற்றொரு வழி இருக்கிறது.
38. ஸ்வப்ன நித்ரா ஜ்ஞானாலம்பனம் வா
அல்லது கனவு மற்றும் தூக்கத்தில் ஏற்படும் அறிவைப்பற்றி தியானிப்பதாலும்.
தேவதைகள் வந்து பேசுவதாகவும், ஆனந்தப் பரவச நிலையில் இருப்பதாகவும், காற்றினிலே தவழ்ந்து வரும் இனிய கீதத்தைக் கேட்பதாகவும் சிலவேளைகளில் கனவு காணலாம். கனவில் அவன் பேரானந்தத்தில் திளைத்திருப்பான். விழித்த பிறகு அந்தக் கனவு அவனது மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கும். அந்தக் கனவை உண்மை என்று நினைத்து, அதைத் தியானம் செய்யுங்கள். அது முடியாவிட்டால் உங்களுக்கு இனிமை தரும் ஏதாவது புனிதமான ஒன்றைத் தியானியுங்கள்.
39. யதாபிமதத்யானாத்வா
அல்லது உங்களுக்கு உகந்ததாக உள்ள ஒன்றைத் தியானிப்பதால்
உகந்தது என்பதற்காக இழிந்ததையும் நாடலாம் என்பது பொருளல்ல. உங்களுக்கு உகந்த ஆனால் நல்ல பொருள், நீங்கள் மிகவும் விரும்புகின்ற இடம், உங்களை மிகவும் கவர்ந்த இயற்கைக் காட்சி, உங்களை மிகவும் பாதித்த கருத்து அல்லது மனம் குவிதற்கான ஏதாவது நல்ல ஒன்றைத் தியானியுங்கள்.
40. பரமாணு பரம மஹத்வாந்தோஸ்ய வசீகார
இப்படித் தியானிக்கும் யோகியின் மனத்திற்கு அணு முதல் அண்டம் வரை அனைத்தின் மீதும் தடையற்ற ஆதிக்கம் ஏற்படுகிறது.
இந்தப் பயிற்சியின் மூலம், மிக நுண்ணிய பொருளையும் பிரம்மாண்டத்தையும் மனத்தால் எளிதாக தியானம் செய்ய முடிகிறது. இவ்வாறு மனத்தின் அலைகள் அமைதியடைகின்றன.
41. க்ஷீண வ்ருத்தேரபிஜாதஸ்யேவ மணேர்க்ரஹீத்ரு
க்ரஹணக்ராஹ்யேஷு தத்ஸ்த்தததஞ்ஜனதா ஸமா பத்தி
இவ்வாறு வலிமை குன்றிய (அடக்கப்பட்ட) விருத்திகளையுடைய யோகி, கொள்பவன், கொள்ளும் கருவி, கொள்ளப்படும் பொருள்(ஆன்மா, மனம், புறப்பொருட்கள்) இவற்றில் ஒருமைப்பாடும் சம பார்வையும் பெறுகிறான். (பல நிறப் பொருட்களின் முன்னே இருக்கும்) பளிங்கைப்போல்.
இடைவிடாத இந்தத் தியானத்தின் பயன் என்ன? முன்பு ஒரு சூத்திரத்தில் பதஞ்சலி முனிவர் பல்வேறு தியானங்களைப்பற்றிக் கூறியிருப்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். முதலில் தூலப் பொருள், பிறகு சூட்சுமப் பொருள், பின்னர் அதைவிட சூட்சுமமான பொருள் இவ்வாறு படிப்படியாக உள்ள தியானங்களை அவர் விவரித்திருந்தார். இப்படிச் செய்வதால் தூலப் பொருளைப் போலவே சூட்சுமப் பொருள் மீதும் எளிதில் தியானிக்க முடியும். கொள்பவன், கொள்ளப்படும் பொருள், கொள்ளும் கருவி, அதாவது, ஆன்மா, புறப்பொருள், மனம் என்ற மூன்றையும் இங்கு யோகி காண்கிறான். தியானத்திற்கு மூன்று பொருட்கள் நமக்குத் தரப்பட்டுள்ளன. முதலில் உடல் மற்றும் ஜடப்பொருள் போன்ற தூலப் பொருள்; இரண்டாவது, சூட்சுமப் பொருளான மனம் அல்லது சித்தம்; மூன்றாவது குணங்களுடன் கூடிய புருஷன் அதாவது உண்மையான புருஷன் அல்ல, நான் உணர்வு. பயிற்சியின் மூலம் யோகி இந்த எல்லா தியானங்களிலும் நிலைபெறுகிறான். தியானிக்கும்போது மற்ற எண்ணங்கள் அனைத்தையும் புறக்கணித்து, தியானிக்கும் பொருளுடன் ஒன்றுபட்டு ஐக்கியமாகிறான். அவன் ஒரு பளிங்கு போல் ஆகிறான். பளிங்கின்ற முன் ஒரு மலரை வைத்தால் பளிங்கு அந்த மலருடன் ஏறக்குறைய ஒன்று பட்டு விடுகிறது. மலர் சிவப்பாக இருந்தால், பளிங்கும் சிவப்பாகத் தோன்றும். மலர் நீலமாக இருந்தால் பளிங்கும் நீலமாகத் தோன்றும்.
42. தத்ர சப்தார்த்த ஜ்ஞான விகல்பை ஸங்கீர்ணா ஸவிதர்க்கா ஸமாபத்தி
சொல், பொருள் அதன் விளைவான அறிவு இந்த மூன்றும் கலந்து நிற்பது வினாவோடு கூடிய சமாதி.
இங்கு சொல் என்பது அதிர்வைக் குறிக்கும். அதாவது அவற்றை உள்ளே எடுத்துச் செல்கின்ற நரம்பு ஓட்டங்கள் அதனால் வரும் எதிர்ச் செயலே அறிவு. இதுவரை கூறப்பட்ட தியானங்கள் எல்லாம் வினாவுடன் கூடியவை (ஸவிதர்க்கம்) என்கிறார் பதஞ்ஜலி முனிவர். உயர்வகைத் தியானங்களைப் பின்பு தருகிறார். வினாவுடன் கூடிய தியானத்தில், சொல், பொருள், அறிவு மூன்றின் சேர்க்கையின் விளைவாக தியானிப்பவன், தியானிக்கப்படும் பொருள் என்ற இருமை இருக்கிறது. முதலில் புற அதிர்வாகிய சொல். இது பொறி வழியாக உள்ளே எடுத்துச் செல்லப்படும் போது தோன்றுவது பொருள். இதன்பிறகு சித்தத்தில் எதிர்ச் செயலாகக் கிளம்பும் அலை அறிவு. நாம் பொதுவாக அறிவு என்று கூறுவது இந்த மூன்றும் கலந்து நிற்பதையே இதுவரை நாம் கண்ட தியானங்களில் எல்லாம் இந்தக் கலவையையே தியானப் பொருளாகக் கொண்டிருக்கிறோம். அடுத்த சமாதி இதைவிட உயர்ந்தது.
43. ஸ்ம்ருதி பரிசுத்தௌ ஸ்வரூபசூன்யேவார்த்த மாத்ர நிர்பாஸா நிர்விதர்க்கா
நினைவு தூய்மை பெறும்போதும் குணங்கள் அற்ற நிலையில் இருக்கும்போதும்,(தியானிக்கப்படும் பொருளின்) கருத்து மட்டும் எஞ்சியிருக்கும்போதும், வினாவற்ற சமாதி உண்டாகிறது.
சொல், பொருள், அறிவு ஆகிய மூன்றையும் கலந்து தியானிக்கும் பயிற்சியால் இந்த மூன்றும் ஒன்றுகூடாத நிலையை நாம் அடைய முடியும். நாம் இவற்றிலிருந்து விடுபட முடியும். முதலில் இந்த மூன்றைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முயல்வோம். முதலில் பழைய உதாரணத்தை நினைவுகூர்வோம். சித்தம் ஒரு குளம், அதிர்வு அல்லது சொல் அல்லது ஒலியே அதில் எழும் அலை. உங்களுள் சித்தம் என்னும் அமைதியான குளம் உள்ளது. நான் பசு என்று சொல்கிறேன். இந்த ஒலி உங்கள் காது வழியாக உள்ளே சென்றதும் உங்கள் சித்தத்தில் ஓர் அலை உண்டாகிறது. அந்த அலை பசு என்ற கருத்தை, அதாவது அந்த உருவத்தின் பொருளை உண்டாக்குகிறது. நீங்கள் அறிகின்ற பசு என்ற தோற்றம் உண்மையில் புற மற்றும் அக ஒலி அதிர்வுகளுக்கு எதிர்ச் செயலாக சித்தத்தில் எழும் அலையே. சொல் அல்லது ஒலி மறைந்தவுடன் எண்ண அலையும் மறைகிறது. சொல்லின்றி உருவம் இருக்க முடியாது.
ஆனால் ஒலி கேட்காமல் பசுவை நினைக்கும்போது எவ்வாறு பசுத் தோற்றம் உண்டாகிறது என்று நீங்கள் கேட்கலாம். இங்கே நீங்கள் உங்களுக்குள்ளேயே ஒலியை எழுப்புகிறீர்கள். உங்கள் மனத்திற்குள்ளேயே மெதுவாக பசு என்கிறீர்கள், உடனே அலை எழுகிறது. இந்த ஒலிக் குறிப்பு இன்றி அலை எழ முடியாது. புறத்திலிருந்து வராவிடில் ஒலி அகத்திலிருந்து வரும், அவ்வளவுதான், ஒலி நீங்கினால் அலையும் நீங்கும். எஞ்சியிருப்பது எது எதிர்ச் செயலின் விளைவு, அதாவது அறிவு, பிரிக்க முடியாதபடி இந்த மூன்றும் நம் மனத்தில் கலந்திருக்கிறது. ஒலி எழுந்ததும் புலன்கள் அதிர்கின்றன. உடனே எதிர்ச் செயலான அலையும் உண்டாகிறது. இவை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து விரைவில் வருவதால் அவற்றைப் பிரித்தறிய முடியவில்லை. நீண்ட காலம் இந்தத் தியானப் பயிற்சி செய்தால், எண்ணப் பதிவுகள் அனைத்திற்கும் கொள்கலமான நினைவு தூய்மை அடைகிறது. அப்போது இவற்றைத் தனித்தனியாகப் பிரித்து, தெளிவாக அறிய முடியும். இது நிர்விதர்க்கம், வினாவற்ற சமாதி எனப்படும்.
44. ஏதயைவ ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்மவிஷயா வ்யாக்யாதா
இன்னும் நுண்மையான பொருட்களைத் தியானப் பொருளாகக் கொண்ட, ஆராய்ச்சியுடன் கூடிய(ஸவிசார) சமாதியும் ஆராய்ச்சி அற்ற(நிர்விசார) சமாதியும் இந்த (சமாதி) முறைகளைக் கொண்டே விளக்கப்படுகின்றன.
முன்பு கூறப்பட்டது போன்றதொரு முறை இங்கும் பயன்படுகிறது. ஆனால் தூலப் பொருட்களுக்குப் பதிலாக சூட்சுமப் பொருள் தியானத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
45. ஸூக்ஷ்ம விஷயத்வஞ்சாலிங்க பர்யவஸானம்
நுண் பொருட்கள் பிரதானத்தை முடிவாக உடையவை. பூதங்களும், அவற்றிலிருந்த உண்டான பொருட்களும் தூலப் பொருட்கள், நுண்பொருட்கள் தன் மாத்திரைகளிலிருந்து அல்லது நுண் மூலக்கூறுகளிலிருந்து ஆரம்பிக்கின்றன. பொறிகள், மனம் (அதாவது பொறிகளின் மொத்தம்) நான் உணர்வு, சித்தம்(எல்லா வெளிப்பாடுகளுக்கும் காரணமானது) என்பவையும் சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் குணங்கள் சமப்பட்டு நிற்கும் நிலையாகிய பிரதானமும் (முக்கியம்), பிரகிருதியும் (இயற்கை), அவ்யக்தமும் (தோன்றா நிலை) ஆகிய எல்லாம் நுண்பொருட்கள் என்னும் பிரிவில் அடங்கும். புருஷன் (ஆன்மா)மட்டுமே இதில் அடங்காதது.
46. தா ஏவ ஸபீஜ: ஸமாதி
இவை யாவும் விதையுடன் கூடிய சமாதிகள். இவை முன் வினைகளின் விதைகளை அழிப்பதில்லை. எனவே இவற்றால் முக்தியைத் தர முடியாது. இவை யோகிக்கு எதைக் கொடுக்கும் என்பது அடுத்த சூத்திரத்தில் கூறப்படும்.
47. நிர்விசார வைசாரத்யேத்யாத்ம ப்ரஸாத
விவேகம் கடந்த சமாதி தூய்மை அடையும்போது சித்தம் நிலை பெறுகிறது.
48. ருதம்பரா தத்ர ப்ரஜ்ஞா
அதில் உள்ள அறிவு உண்மையால் நிறைக்கப்பட்டது எனப்படும்.
அடுத்த சூத்திரம் இதனை விளக்குகிறது.
49. ச்ருதானுமான ப்ரஜ்ஞாப்யாமன்ய விஷயா விசேஷார்த்தத்வாத்
சான்றோர்களிடமிருந்து கேட்பதனாலும், அனுமானத்தினாலும் பெறும் அறிவு சாதாரணப் பொருட்களைப் பற்றியது. இப்போது கூறிய சமாதியிலிருந்து பெறும் அறிவு மிகவும் உயர் வகையானது. அனுமானமும் சான்றோர்களின் வாக்கும் செல்ல முடியாத இடத்திற்கும் ஊடுருவிச் செல்லவல்லது.
இதன் கருத்து என்ன? நேரடி அனுபவம், அனுமானம், தகுதி படைத்தோரின் கூற்று-இவற்றின் மூலமே சாதாரணப் பொருட்களைப்பற்றி நாம் அறிகிறோம். சாஸ்திரங்களாகிய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைக் கண்டறிந்த ரிஷகளையே தகுதியுடையவர்கள் என்று யோகிகள் குறிப்பிடுகிறார்கள். ரிஷிகளின் கூற்று ஆகையால்தான் சாஸ்திரங்களே அத்தாட்சி பெறுகின்றன என்கின்றனர் யோகிகள். ஆனால் சாஸ்திரங்களும் நம்மை அனுபூதி நிலைக்குக் கொண்டு போகாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். எல்லா வேதங்களையும் நாம் படிக்கலாம். ஆனாலும் நமக்கு மெய்யுணர்வு எதுவும் உண்டாகாது. அவர்களின் உபதேசங்களை நாம் பயிற்சி செய்வோமானால் வேதங்கள் கூறுவதை அனுபூதியில் நாம் அடையலாம். ஆராய்ச்சியோ, நேரடி அனுபவமோ, அனுமானமோ, ஆப்த வாக்கியங்களோ செல்ல முடியாத இடங்களுக்கும் அனுபூதி ஊடுருவிச் செல்கிறது. இதுவே இந்தச் சூத்திரத்தின் கருத்து.
சுய அனுபூதியே உண்மையான மதம். மற்றவை யெல்லாம் ஆயத்தம் மட்டுமே சொற்பொழிவுகளைக் கேட்பது, சாஸ்திரங்களைப் படிப்பது, ஆராய்ச்சி செய்வது இவையெல்லாம் நம்மை ஆயத்தப்படுத்துவதற்கு மட்டுமே. இவையெல்லாம் மதம் அல்ல. அறிவு உடன்படுவதோ மறுப்பதோ மதம் ஆகாது. புலன்களால் புறப் பொருளை நேரடியாக அறிவதுபோல் ஆன்மீக விஷயங்களை இன்னும் சிறப்பாக நேரடியாக அறியலாம் என்பது யோகிகளின் அடிப்படைக் கருத்து. மத உண்மைகளான இறைவன் மற்றும் ஆன்மாவைப் புலன்களால் அறிய முடியாது. நான் என் கண்களால் கடவுளைக் காண முடியாது, கைகளால் அவரைத் தொட முடியாது. புலன்களுக்கு அப்பால் உள்ள விஷயங்களை அறிவால் ஆராய்ந்தும் அறிய முடியாது என்பதும் நமக்குத் தெரியும். நிச்சயமற்ற ஓரிடத்தில் தர்க்க அறிவு நம்மை விட்டுவிடுகிறது. நாம் ஆயுட்காலம் முழுவதும் ஆராயலாம். பல்லாயிரம் ஆண்டுகளாக உலகில் இவ்வாறுதான் நடந்தும் வருகிறது. இதனால் எல்லாம் மத உண்மைகளை மெய்ப் பிக்கவோ மறுக்கவோ இயலாது என்பதே அதன் முடிவு. நேரில் அறிவதை ஆதாரமாகக் கொண்டு, அந்த அடிப்படையில் நாம் ஆராய்ச்சி செய்யலாம். எனவே ஆராய்ச்சி என்பது இந்த நேரடி அறிவு என்ற எல்லைக்குள் தான் நிற்க வேண்டும் என்பது தெளிவு. அதைக் கடந்து ஒரு போதும் அதனால் செல்ல முடியாது. புலனறிவைக் கடந்து, அதற்கு அப்பால்தான் அனுபூதியின் முழு சாம்ராஜ்யமும் உள்ளது. நேரடியான புலனறிவிற்கும் தர்க்க அறிவுக்கும் அப்பால் செல்லலாம் என்கிறான் யோகி. தன் புத்தியைக் கடந்து அப்பால் செல்லும் ஆற்றல் மனிதனிடம் உள்ளது. மனிதனிடம் மட்டுமல்ல. இந்த ஆற்றல் ஒவ்வொரு ஜீவனிலும் ஒவ்வொரு பிராணியிலும் உள்ளது. யோகப் பயிற்சியால் இந்த ஆற்றல் விழித்தெழுகிறது. அப்போது மனிதன் அறிவின் எல்லைகளைக் கடக்கிறான்; அறிவனைத்தையும் கடந்தவற்றை நேரில் உணர்கிறான்.
50. தஜ்ஜ ஸம்ஸ்காரோன்ய ஸம்ஸ்கார ப்ரதிபந்தீ
இந்தச் சமாதியால் உண்டாகும் சம்ஸ்காரம் மற்ற எல்லா சம்ஸ்காரங்களையும் தடுக்கிறது.
முந்திய சூத்திரத்தில் உணர்வுகடந்த நிலைக்குச் செல்வதற்கு ஒருமைப்பாடுதான் ஒரேவழி என்று கண்டோம். மனம் ஒருமைப்படத் தடையாயிருப்பவை கடந்தகால சம்ஸ்காரங்கள் என்பதையும் கண்டோம். மனத்தைக் குவிக்க முயற்சிக்கும் போது, எண்ணங்கள் அலைபாய்வதைக் கவனித்திருப்பீர்கள். நீங்கள் கடவுளைச் சிந்திக்க முற்படும் நேரம் பார்த்துதான் இந்தச் சம்ஸ்காரங்களும் வெளிப்படும். மற்ற நேரங்களில் அவை அவ்வளவாக செயல்படுவதில்லை. உங்களுக்கு அவை எப்போது வேண்டாமோ அப்போது நிச்சயமாக அவை அங்கே இருக்கும் முடிந்தவரை உங்கள் மனத்தை இன்னும் அதிகமாக ஆக்கிரமிக்கும். ஏன் அப்படி? தியானிக்கும்போது ஏன் மற்ற நேரங்களைவிடமிகுந்த ஆற்றலுடன் அவை வெளிப்படுகின்றன? ஏனென்றால், நீங்கள் அவற்றை வெளிவராம லிருக்கும்படி அமுக்குகிறீர்கள். எனவே அவை தங்கள் முழு ஆற்றலுடன் எதிர்க்கின்றன. மற்ற வேளைகளில் அவை எதிர்ப்பதில்லை. பாய வருகின்ற புலிபோல் காத்துக்கொண்டு சித்தத்தில் எங்கேயோ இருக்கின்றன. இந்தப் பழைய சம்ஸ்காரங்கள் தாம் எத்தனையெத்தனை? இவற்றையெல்லாம் அடக்க வேண்டும், அடக்கி, நாம் விரும்பும் எண்ணம் மட்டுமே மேலே எழுமாறு செய்ய வேண்டும். ஆனால் அவை எல்லாம் சேர்ந்து ஒரே வேளையில் மேலெழும்பப் போராடுகின்றன. இவை தாம் மனத்தை ஒருமுகப்படுத்த முடியாமல் தடுக்கும் சம்ஸ்காரங்களின் பல்வேறு ஆற்றல்களாகும். எனவே இப்போது கூறிய சமாதியைப் பயிற்சி செய்ய வேண்டும். அது சம்ஸ்காரங்களை அமுக்கிவிடும் ஆற்றல் பெற்றது. இத்தகைய ஒருமைப்பாட்டினால் எழுகின்ற சம்ஸ்காரம், பிற சம்ஸ்காரங்களைத் தடுத்து அவற்றை அடக்கி வைக்கின்ற ஆற்றல் பெற்றதாக இருக்கும்.
51. தஸ்யாபி நிரோதே ஸர்வநிரோதாந்நிர்பீஜ ஸமாதி
(மற்ற சம்ஸ்காரங்களைத் தடுக்கின்ற) இந்த சம்ஸ்காரத்தையும் தடுப்பதால், அனைத்தும் தடுக்கப்பட்டு விதையிலா சமாதி உண்டாகிறது.
ஆன்மாவை உணர்வதே நமது குறிக்கோள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். ஆன்மாவை நாம் உணர முடியவில்லை. ஏனெனில் அது இயற்கையுடனும் மனத்துடனும் உடம்புடனும் கலந்திருக்கிறது. மூடன் தனது உடம்பே ஆன்மா என்று நினைக்கிறான். படித்தவனோ மனம்தான் ஆன்மா என்று நினைக்கிறான். இவர்கள் இருவரின் எண்ணமும் தவறே. ஆன்மாவை இவற்றுடன் எல்லாம் கலந்திருக்கச் செய்வது எது? சித்தத்தில் பல்வேறு அலைகள் எழுந்து ஆன்மாவை மூடிக் கொண்டிருக்கின்றன. இந்த அலைகளின் ஊடே ஆன்மாவின் பிரதிபிம்பத்தில் சிறிதை நாம் காண்கிறோம். சித்தத்தில் கோப அலைகள் எழுந்தால் ஆன்மாவைக் கோபமுள்ள தாக நாம் காண்கிறோம்; நான் கோபமாக இருக்கிறேன். என்கிறோம். அன்பின் அலையாக இருந்தால் அதை அலையில் நாம் பிரதிபலிப்பதைப் பார்த்துவிட்டு நாம் அன்பாக இருப்பதாகச் சொல்கிறோம். பலவீன அலை எழுமானால் ஆன்மா அதில் பிரதிபலிப்பதைப் பார்த்துவிட்டு நாம் தளர்வுற்றிருப்பதாக எண்ணுகிறோம். ஆன்மாவை மூடிக் கொண்டிருக்கும் சம்ஸ்காரங்களிலிருந்தே இந்தப் பல்வேறு எண்ணங்களும் வருகின்றன.
சித்தமாகிய குளத்தில் ஓர் அலையேனும் இருக்கும் வரை ஆன்மாவின் உண்மை இயல்பை உணர முடியாது. அனைத்து அலைகளும் அடங்காமல் ஆன்மாவின் உண்மை இயல்பை அறிய முடியாது. ஆதலால் பதஞ்சலி முனிவர் முதலில் இந்த அலைகளைப்பற்றி விளக்கிக் கூறுகிறார். இரண்டாவதாக, அவற்றை அடக்குவதற்குரிய மிகச் சிறந்த வழியைக் காட்டுகிறார். மூன்றாவதாக நெருப்பு நெருப்பை விழுங்குவதுபோல், மற்ற எல்லா அலைகளையும் அடக்கும் மிக வலிமையான ஓர் அலை மட்டும் எஞ்சி நிற்கும்போது அதையும் அடக்குவது எளிது. இந்த ஓர் அலையும் அடக்கப்படும்போது எய்துவது விதையிலா சமாதி, அது எந்தப் பதிவையும் விடுவதில்லை. அங்கே ஆன்மா தன் மகிமையில் மிளிர்கிறது. ஆன்மா என்பது ஒரு கலவை அல்ல, பிரபஞ்சத்தில் உள்ள நித்தியமான தனிப் பொருள் அதுவே என்று அப்போதுதான் அறிகிறோம். ஆன்மா பிறப்பதில்லை. இறப்பதில்லை, என்றும் உள்ளது. அழிக்க முடியாதது, அதுவே என்றென்றும் உள்ளதான அறிவின் சாரம் என்பதை உணர்கிறோம்.