அக்பர் சபையில் அனைவரும் கூடியிருந்தனர்.
தினமும் பீர்பால் எதையாவது சொல்லுகிறார்; அதை அரசரும் உடனே ஆமோதித்துப் பாராட்டுகிறாரே எனப் பொறாமைக்காரர் ஒருவர், ‘இன்று, எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்டிப் பாராட்டுப் பெற வேண்டும்’ எனத் தீர்மானித்தவராகக் காணப்பட்டார்.
சபையில் பீர்பாலைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார் பொறாமைக்காரர். அதைக் கவனித்த அக்பர், அவரைப் பார்தது, சிரிப்பின் காரணம் என்னவெனக் கேட்டார்.
”அரசர் மிகுந்த சிவப்புநிறம்; மற்ற அமைச்சர் பிரதானிகள் அனைவரும் சிவப்பு நிறமாகவே இருந்தனர். பொறாமைக்காரரும் சிவப்பு நிறத்தவரே, ஆனால், பீர்பால் மட்டும் கருப்பு நிறமாகக் காணப்பட்டார்.
அரசர் பெருமான், மிகுந்த சிவப்பு நிறமாக மின்னும் பொழுது, பீர்பால் எல்லோரிலும் கருநிறமாகக் காட்சி அளிக்கிறாரே அதன் காரணம் என்னவென்று தெரியாமல் சிரித்தேன்” எனக் கூறினார்.
உடனே எழுந்த பீர்பால், ”இறைவன் தம்முடைய அடியார்களுக்குத் தம்முடைய பாக்கியங்களை வழங்கும் போது, நீங்கள் எல்லாரும் நிறத்தைக் கேட்டுப் பெற்றுக் கொண்டீர்கள்; நான் மட்டும் அறிவைக் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். யார் எதைக் கேட்டார்களோ, அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டதே காரணம்!” எனக் கூறினார்.
அக்பருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
பொறாமைக்காரர் வெட்கித் தலை குனிந்ததோடு, பீர்பாலிடம் மன்னிப்புக் கோரினார்.