* நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம்.
* நாம் இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதை நம்மாலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்.
* புது மலர்களே இறைவனின் பாதங்களில் இடுவதற்கு தகுதி பெற்றவை. அதுபோல வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள்.
* ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு வழங்குவதாக கல்வி அமைய வேண்டும்.
* மேலை நாட்டு அறிவியல் நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுமை பெற முடியும்.
* லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழ்வு நடத்துங்கள்.
* ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி.
* உலகிற்கு நன்மை செய்தால், நமக்கு நாமே தான் நன்மை செய்து கொள்கிறோம்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடி கொண்டிருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.
* “நான் அல்ல.. நீயே’ என்ற மனப்பான்மையே, எல்லா நன்மைக்கும் அடிப்படை. சுயநலத்தை உதறி விட்டு பொதுநலனுக்காக வாழ்வை அர்ப்பணியுங்கள்.
* தேவையற்ற விஷயங்களிலும், வீண்வதந்திகளிலும் மனதை அலட்டிக் கொள்வதால் நம் ஆற்றல் சிதறி வீணாகிறது. எப்போதும் ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள்.
* ஏழைகளிடம், சிவனைக் காண்பவனே உண்மையில் சிவனை வழிபடுகிறான். மற்றவர்கள் வழிபாட்டின் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள்.
விவேகானந்தர்.