“மீனவர் ரத்தத்திலிருந்து பெண்ணெடுத்தீர்கள், ஹஸ்தினாபுர ராணி ஆக்கினீர்கள், ஆனால் பெண்ணிலிருந்து மீனவ ரத்தத்தை எடுக்க முடியவில்லையே!”
மகாராஜா சந்தனு அடிபட்ட கண்களோடு தேவவிரதனை – இல்லை இல்லை பீஷ்மரை – நிமிர்ந்து நோக்கினார்.
“சந்தனு மகாராஜாவின் பத்தினி ஒரு க்ஷத்ரிய குலப் பெண்ணாக நடந்து கொள்ள வேண்டும். எப்போது பார்த்தாலும் மீன் மீன்! காசியில் என்ன மீன் கிடைக்கும், கங்கையில் என்ன வகை மீன் கிடைக்கும், வங்கத்து மீன் என்ன ருசி என்று பேசுவது உங்களுக்கும் சரி, நான் காக்க பிரதிக்ஞை எடுத்திருக்கும் இந்த அரியணைக்கும் சரி, புரூரவஸ் நஹுஷன் யயாதி துஷ்யந்தன் பரதன் குரு ஹஸ்தி போன்ற மாபெரும் மன்னர்கள் வழிவந்த இந்தப் பரம்பரைக்கும் சரி, பெருமை தராது!”
“உஷ்! பக்கத்து அறையில்தான் உன் சிற்றன்னை இருக்கிறாள், அவள் காதில் விழுந்துவிடப் போகிறது, தேவவிரதா!”
“ஹஸ்தினாபுரத்து மக்கள் ஏளனச் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அரசே!” என்று குரலைக் கொஞ்சமும் தாழ்த்தாமல் சொல்லியபடியே தன் நீண்ட கைகளை வீசிக் கொண்டு பீஷ்மர் அறையை விட்டு வெளியேறினார். சந்தனு விட்டத்தை வெறித்தார்.
எத்தனை நேரம் போனதோ தெரியவில்லை. கதவு தட்டப்பட்டது. சந்தனு கெட்ட கனவு கண்டு விழிப்பவர் போல திடுக்கிட்டு அறை வாயிலைப் பார்த்தார். “அமைச்சர் சதானிகர் காத்திருக்கிறார் அரசே” என்றான் பணியாள். அதற்குள் சதானிகரே எட்டிப் பார்த்தார். சந்தனு உற்சாகம் இல்லாமல் கையைத் தூக்கி உள்ளே வரச் சொல்லி சைகை காட்டினார். சதானிகரும் பின்னாலேயே ஒற்றர் படை துணைத்தலைவன் நாகதத்தனும் நுழைந்தனர்.
சந்தனு புருவங்களை உயர்த்தினார். சதானிகர் நாகதத்தனுக்கு சைகை காட்டினார். “நான் காம்பில்ய நகரத்திலிருந்து வருகிறேன் பிரபு!” என்றான் அவன்.
சந்தனு ஒன்றும் சொல்லாமல் காத்திருந்தார். நாகதத்தனுக்கு கொஞ்சம் பதட்டம் அதிகரித்தது. “பாஞ்சாலத்தில் நம் மீது அதிருப்தி நிலவுகிறது. அங்கே பெரிய அளவில் ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டையும் சேர்த்துப் பார்த்தால்…” என்று இழுத்தான்.
சதானிகர் “இளவரசரின் பீஷ்ம விரதம் நாம் பேசிய திருமணத்தை குலைத்ததிலிருந்து நம் இரு தேசங்களின் உறவில் சிக்கல் ஆரம்பித்துவிட்டது. போர் வருகிறதோ இல்லையோ நாமும் போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்” என்றார்.
சந்தனு நாகதத்தனைப் பார்த்தார். அமைச்சர் அவனை அறையிலிருந்து வெளியேறுமாறு கண்ணசைத்தார்.
“இந்த ஒற்றன் நம்பிக்கைக்குரியவன்தானா?”
“பூரணமாக நம்பலாம். ஒற்றர் படையில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே துணைத்தலைவனாகிவிட்டான்.”
“தேவவிரதனிடம் இவனை அழைத்துச் செல்லுங்கள். பொறுப்பை அவனே எடுத்துச் செய்யட்டும்.” என்று சோர்வாகச் சொன்னார் சந்தனு.
“இளவரசர் மாவீரர்தான். ஆனால் போர் என்றால் படை, ரதங்கள், குதிரைகள், ஆயுதங்கள் எல்லாம் வேண்டும் மன்னவா!”
“அதை அவனிடம் எடுத்துச் சொல்லுங்கள். படகுகளும் பரதவர் துணையும் கூட வேண்டியிருக்கும் என்றும் சொல்லுங்கள். வேறு ஏதாவது?”
சதானிகர் அஷுமதி ஆற்றில் வெள்ளம், வெள்ளப் பகுதிகளின் விவசாயிகளுக்கு வரிவிலக்கு தருவதின் அவசியம், நிஷாதர்கள் தொந்தரவு, ஹஸ்தினாபுரத்திலேயே இரண்டு முறை புலி தென்பட்டது, அடுத்த வாரம் வருகை தரும் காசி அரச குடும்பத்தை வரவேற்க வேண்டிய முறைகள் என்று ஏதேதோ பேசினார். சந்தனுவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. சதானிகர் அமைதியானார். சந்தனு மீண்டும் அவர் கண்களைச் சந்தித்தபோது “நான் நாளை உங்களை சந்திக்க முடியுமா?” என்று கேட்டார். அதற்கும் மன்னர் பதில் சொல்லவில்லை. இரண்டு நிமிஷம் கழித்து “நான் விடை பெற்றுக் கொள்கிறேன் அரசே!” என்றார்.
சந்தனு பெருமூச்செறிந்தார். அவரை இருக்கச் சொன்னார். இன்னும் இரண்டு நிமிஷ மௌனத்துக்குப் பின் மிகுந்த தயக்கத்துடன் “ஹஸ்தினாபுர மக்கள் சத்யவதியை ஏளனமாகப் பேசுகிறார்கள் என்பது உண்மையா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டார்.
சதானிகர் பதில் சொல்லாமல் தலையைக் குனிந்துகொண்டார்.
“உங்கள் மௌனம் பல விஷயங்களைச் சொல்லுகிறது அமைச்சரே!”
“சிக்கல் சிறியதுதான் அரசே! ராணியார் தான் பிறந்த மீனவர் குலத்தோடு இன்னும் நட்பாக இருப்பதை பிராமணர்கள் சாஸ்திர விரோதம் என்று வம்பு பேசுகிறார்கள். அரசியார் ஒரு ஹோமம் வளர்த்து கூடக் கொஞ்சம் தட்சிணை கொடுத்தால் ராணியைப் போல உண்டா என்று ஆரம்பித்துவிடுவார்கள். புரோகிதர்களின் தராசில் பணமே சாஸ்திரத்தை விட கனமானது என்பதை இளவரசர் இன்னும் உணரவில்லை. என்னதான் மேதையாக இருந்தாலும் அவருக்கு அனுபவம் போதாது. மகாராணியாரும் தானே படகேறி வலை வீசுவதையும், கையில் மீன்களைத் தூக்கிக்கொண்டு ராஜ வீதிகளில் நடந்து வருவதையும் நிறுத்தினால் நல்லது. நாளை காசி ராஜ குடும்பத்தினர் அப்படி அவர் வருவதைப் பார்த்தால் சங்கடம். எல்லாவற்றுக்கும் மேலாக மகாராணியாரின் தந்தை தசராஜன். அவருக்கு அரண்மனை நாகரீகம் புரியவில்லை, க்ஷத்ரியர்களின் பழக்கவழக்கங்கள் தெரியவில்லை. இங்கே வரும்போதும் வீச்சமடிக்கும் உடைகளோடும் மீன் கூடைகளோடும் வந்துவிடுகிறார், அவரிடம் நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால்…”
“எந்த ராணியை என்னால் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது? தேவவிரதனின் தாயை என்னால் என்ன சொல்ல முடிந்தது? என் விதி!”
“இளவரசரின் மேல் நீங்கள் வருத்தப்படக் கூடாது. அவரது தியாகம் மகத்தானது. இப்போதும் அவர் நம் அரசுக்கு ஒரு களங்கம் வரக்கூடாது என்றுதான் இதையெல்லாம் சொல்கிறார்.”
சந்தனுவின் முகத்தில் ஒரு சின்னப் புன்னகை மலர்ந்தது. மகனைப் பற்றி, தன் மீது மகனுக்குள்ள பாசத்தைப் பற்றி, பீஷ்ம பிரதிக்ஞையைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அப்படித்தான் அவர் முகம் மலரும்.
“நீங்கள் அனுமதித்தால் நான் மகாராணியாரின் தந்தை இங்கே வருவதை தடை செய்துவிடுகிறேன். ஹோமத்துக்கும் ஏற்பாடு செய்துவிடுகிறேன். பிறகு பார்த்துக் கொள்ளலாம் அரசே!”
புன்னகை மறைந்தது. “என்னவோ செய்யுங்கள்” என்று சோர்வோடு சொல்லிவிட்டு வெளியே நடந்தார் சந்தனு.
சத்யவதியின் மாளிகைக்குச் செல்லும்போது நன்றாக இருட்டிவிட்டது. சந்தனுவைப் பார்த்ததும் சத்யவதி “ஏன் இத்தனை நேரம், நான் பசியோடு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டுக் கொண்டே சொன்னாள். “எனக்குப் பசியில்லை” என்று படுக்கையில் சாயப் போனார் சந்தனு. பிறகு திடீரென்று நினைத்துக் கொண்டவராக “தேவவிரதன் நமக்காக காத்திருப்பான், வா போகலாம்” என்று போஜன அறைக்கு நடந்தார். சத்யவதியின் முகம் கறுத்ததை அவர் கவனிக்கவில்லை.
சந்தனுவையும் ராணியையும் கண்டதும் போஜன அறை பரபரப்பானது. பீஷ்மர் கண்ணசைத்தார். மூன்று பெரிய வாழை இலைகளில் அன்னமும் வறுத்த மான் கறியும் கிழங்கும் ஆல இலைத் தொன்னைகளில் நெய்யும் தேனும் தயிரும் பெரிய கிண்ணங்களில் குளிர்ந்த நீரும் கிடுகிடுவென்று வைக்கப்பட்டன. பரிசாரகர்கள் கொஞ்சம் தள்ளி நின்றார்கள். மூவரும் உட்கார்ந்தார்கள். பீஷ்மர் “தந்தையே நீங்கள் இவ்வளவு நேரம் பசியாக இருக்கக் கூடாது, வைத்தியர் சொன்னதை மறந்துவிட்டீர்களா?” என்றார். அது அவருக்குப் பசி அதிகமாக இருந்ததால்தான் என்று தந்தை சிற்றன்னை இருவருக்கும் புரிந்துதான் இருந்தது.
“எனக்காக நீ ஏனப்பா காத்திருக்கிறாய், நீ சாப்பிட வேண்டியதுதானே!”
“அது எப்படி இளவரசர் சாப்பிடுவார்? தந்தைக்காக தன்னை வருத்திக் கொள்ளாவிட்டால் அவருக்கு அன்றைக்கு தூக்கம் வராதே! பீஷ்மர் அல்லவா?” என்று குத்தலாகச் சொன்னாள் சத்யவதி. பீஷ்மர் கோபத்தை அடக்கிக் கொள்வது வெளிப்படையாகத் தெரிந்தது.
“அடே!” என்று திடீரென்று பீஷ்மர் கத்தினார். தலைமைப் பரிசாரகன் ஓடிவந்தான். “மீன் எங்கே? மீன் இல்லாமல் அரசியாருக்கு உணவு செல்லாது என்று உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்?” என்று கோபப்படுவது போல கேட்டார். சத்தியவதி தலையைக் குனிந்து கொண்டாள். அழுகையை சிரமப்பட்டு அடக்கிக் கொள்வது தெரிந்தது. பீஷ்மர் “சரி சரி, நாளையிலிருந்து மறக்காதே!” என்று சொல்லிவிட்டு புன்னகையோடு சாப்பிடத் தொடங்கினார்.
சத்தியவதி பேருக்கு எதையோ கொறித்தாள். எப்போது கணவர் எழுந்திருப்பார் என்று காத்துக்கொண்டிருந்தது சந்தனுவுக்கும் புரிந்தது. சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணிவிட்டு அவரும் எழுந்தார். சத்தியவதியும் உடன் எழுந்தாள். பீஷ்மர் சத்யவதியைப் பார்த்து “அடடா, இன்று நீங்கள் சரியாக சாப்பிடவே இல்லையே? இந்தப் பரிசாரகனைத் தொலைத்துவிடுகிறேன்!” என்றார். சத்யவதி விருட்டென்று போஜன அறையை விட்டு வெளியேறினாள்.
சந்தனு தன் மகனைப் பார்த்தார். ஏதோ சொல்ல வாயெடுத்தார். ஆனால் ஒன்றும் சொல்லாமலே வெளியேறினார்.
சயன அறையில் குப்புறப் படுத்துக் கொண்டிருந்த சத்யவதியின் அருகே போனவர் அவளைத் தொந்தரவு செய்யாமல் கொஞ்சம் தள்ளிப் படுத்தார். கொஞ்ச நேரத்தில் வழவழவென்று தெரிந்த இடுப்பு அவர் கவலைகளத் தாற்காலிக மறக்கடித்தது. அவரது கை தானாக சத்யவதியின் இடுப்புப் பக்கம் நீண்டது. சத்யவதி ஆங்காரத்துடன் அவர் பக்கம் திரும்பினாள். “ஆமாம் நான் மீன்காரிதான், தெரிந்துதானே வந்து பெண் கேட்டீர்கள்? நானா என்னை மணந்து கொள்ளுங்கள் என்று உங்களிடம் வந்து கெஞ்சினேன்? சிற்றன்னை என்ற மரியாதை கூட இல்லை, பீஷ்மனாம் பீஷ்மன்!”
“இல்லை சத்யா, அரண்மனை பழக்கவழக்கம், நாகரீகம் வேறு, அதைத்தான் தேவா சொல்லுகிறான்”
“மரியாதையா? அவனுக்கு மரியாதை தெரிகிறதா என்ன? சரி என்னவோ அரண்மனை, நாகரீகம், பாரம்பரியம் என்கிறீர்களே, அவன் அம்மா ஏழு பிள்ளைகளைக் கொன்றது நாகரீகமா? எங்கள் குலத்தில் இப்படி ஒரு பெண் நடந்துகொண்டிருந்தால் அவளை எப்போதோ துரத்திவிட்டிருப்போம். கொலைகாரியின் பிள்ளை நாகரீகம், மரியாதை என்கிறான், போய் அவன் அன்னைக்கு கற்றுக் கொடுக்கச் சொல்லுங்கள் இந்த மரியாதையை எல்லாம்!”
“அது நான் கங்காவுக்கு கொடுத்த வாக்கு, சத்யா!”
“அப்படி என்றால் என்னை அவமரியாதையாக நடத்தலாம் என்று இவனுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறீர்களா?”
“சத்யா, நாளை உன் மகன்களுக்கு அவன்தான் காவல். உன் மீது மரியாதை இல்லாதவனா அப்படி ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்வான்?”
“சித்ரனையும் விசித்ரனையும் என் கண்ணிலேயே காட்டுவதில்லை. அவன் மாளிகையில் தாதிகளிடம் வளர்கிறார்கள். ஊரெல்லாம் என்னை பரிமளகந்தி என்கிறார்கள், இவனுக்கு மட்டும் நான் இன்னும் மச்சகந்திதான். என் பிள்ளைகள் மேல் மீன் வாசனை படாமல் பார்த்துக் கொள்கிறான்!”
“அவர்களை வீரர்களாக வளர்க்கிறான், கடுமையான பயிற்சி, க்ஷத்ரியர்களுக்கு அதுவே தர்மம்!”
“ஆமாம், மகனைத் தாயிடமிருந்து பிரிப்பதுதான் க்ஷத்ரிய தர்மம்! ஏன் நீங்கள் சிறுவனாக இருந்தபோது அந்தப்புரம் பக்கமே போகமாட்டீர்களா?”
சந்தனு எழுந்து வெளியே நடந்தார். கோபம் வந்துவிட்டால் தன்னை விட வயதில் பெரிய தேவவிரதனை என்னதான் சிற்றன்னை என்றாலும் சத்யவதி அவன் இவன் என்று அழைப்பது அவருக்குப் பிடிக்காது. ஆனால் அதைப் பற்றி பேசும் நேரம் இதுவல்ல என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். நிதம் நிதம் நடக்கும் போர்தான், ஆனால் இன்று மிகவும் களைப்படைந்துவிட்டார். கொஞ்ச நாளாகவே அவருக்கு சோர்வு அதிகமாக இருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் தன் முடிவு நெருங்கிவிடும் என்று அவருக்கு தோன்றிக் கொண்டிருந்தது. சிற்றன்னையின் மீது உள்ள எரிச்சல் பெரிதாக வளர்ந்து தேவவிரதன் ஹஸ்தினாபுரியிலிருந்து விலகிச் சென்றுவிட்டால் சித்ராங்கதன் விசித்ரவீர்யன் கதி என்னாகும் என்ற கவலை தன் மகன் தேவவிரதன் மட்டுமல்ல பீஷ்மனும் கூட என்ற பெருமிதத்தையும் அவ்வப்போது துளைத்து அவரை சலனப்படுத்திக் கொண்டிருந்தது. கண்ணில் பட்ட சேவகனிடம் ஒரு குதிரையையும் இரு காவலர்களையும் தயாராக வைக்கச் சொன்னார்.
சந்தனுவின் இரவுப் பயணம் அடுத்த நாளே தசராஜனை அரண்மனைக்கு வரவழைத்தது. சித்ராங்கதனும் அவன் சந்ததியினரும் அரியணையில் அமர பீஷ்மரின் ஒத்துழைப்பு வேண்டும், அதற்காக மீனை மறந்துதான் ஆக வேண்டும் என்று தசராஜன் சத்யவதியிடம் அழுத்திச் சொன்னார். சத்யவதி படகோட்டுவதையும் மீன் பிடிப்பதையும் விட்டுவிடுகிறேன் என்று ஆணையிடும் வரை தசராஜன் விடவே இல்லை. ஆனால் அந்தத் தருணத்துக்குப் பின் தசராஜன் மீண்டும் அரண்மனையில் கால் வைக்கவே இல்லை. சந்தனு இறந்தபோது கூட அவர் வருவது தடுக்கப்பட்டது என்று அந்தப்புர சேடிகள் தங்களுக்குள் குசுகுசுத்துக் கொண்டனர். பீஷ்மர் தசராஜனையும் சத்யவதியையும் பிரித்து வைக்க புரூரவசையும் யயாதியையும் பரதனையும் ஹஸ்தியையும் பயன்படுத்தினார் என்று அரசு நிர்வாகிகள் கொஞ்சம் சத்தமாகவே பேசிக் கொண்டார்கள்.
ஆனால் சந்தனுவின் மரணத்துக்குப் பிறகு சத்யவதி பீஷ்மரின் உறவே மாறித்தான் போனது. சத்யவதியின் எந்த வேண்டுகோளையையும் பீஷ்மர் தன் தந்தையின் ஆணையாகவே கருதி செயல்படுத்தினார். பீஷ்மருக்கு தயக்கம் தரக் கூடிய எந்த வேண்டுகோளையும் சத்யவதி முன் வைக்கவும் இல்லை. சித்ராங்கதன் மரணம், விசித்ரவீர்யன் முடி சூடியது, காசி ராஜகுமாரிகளைக் கவர்ந்து வந்தது, அம்பாவின் எதிர்ப்பு, விசித்ரவீர்யன் இறப்பு என்று எந்த சுக துக்கத்திலும் அவர்கள் இருவரும் இணைந்தே செயல்பட்டனர். ஒருவர் மனதை, எண்ணங்களை வாய்விட்டுச் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை. அவர்கள் இருவரும் கொஞ்சம் வாதிட்டுக் கொண்டது அம்பிகா அம்பாலிகா இருவருக்கும் நியோகம் ஏற்பாடு செய்தபோதுதான். பீஷ்மர் பாலிகா நாட்டிலிருந்து தன் பெரிய தந்தையின் மகனான பூரிஸ்ரவஸ் மூலமாக நியோகத்தை நடத்தலாம் என்று எண்ணினார். சத்யவதியோ பாலிக நாட்டிலிருந்து பூரிஸ்ரவஸ் வரும் வரை ராணியர் இருவரும் உயிர் தரிக்க மாட்டார்கள், பீஷ்மரே நியோகத்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினாள். வியாசர் என்ற புள்ளியில் இருவரும் சமரசம் செய்து கொண்டனர்.
பாண்டுவும் திருதராஷ்டிரனும் பெரியவர்களான பின் சத்யவதியும் அம்பிகாவும் அம்பாலிகாவும் வனம் செல்ல முடிவெடுத்தபோது கண் கலங்கியது பீஷ்மர்தான். சத்யவதியின் கையைப் பிடித்துக் கொண்டு அவர் மன்றாடினார். இது வரையில் உடலால் சுக வாழ்க்கை வாழ்ந்த ராஜமாதாக்கள் இருவரும் வனத்தில் சேடிகள் உதவி இல்லாமல் மிகவும் அவஸ்தைப்படுவார்கள் என்று பீஷ்மர் சுட்டிக் காட்டினார். வழக்கம் போல புரூரவஸ், துஷ்யந்தன் வம்ச ராணிகள் என்று அவர் ஆரம்பித்தபோது சத்யவதியின் குரல் மிகவும் தாழ்ந்து ஒலித்தது. தானே அவர்களுக்கு சேடியாக பணி புரியப்போகிறேன் என்று அவள் சொன்னபோது பீஷ்மரின் புருவம் உயர்ந்தது. குரு வம்ச ராணி, தன் தந்தையின் மனைவி, சேடியாகப் பணி புரிவது என்ற எண்ணமே அவருக்கு அசௌகரியமாக இருந்தது.
“தேவவிரதா, இதுவே நான் செய்யக் கூடிய பிராயச்சித்தம்” என்று சத்யவதி சொன்னாள்.
பல ஆண்டுகளுக்குப் பின் பீஷ்மர் தன் சிற்றன்னையின் மீது எரிச்சல் அடைந்தார். “தாங்கள் ஆணையிட்டீர்கள் என்பது உண்மைதான், ஆனால் நானும் மனப்பூர்வமாகவே குலம் பெருக அவர்களைக் கவர்ந்து வந்தேன். குலம் பெருகவே நியோகமும் செய்து வைத்தோம். தங்கள் கடமையை மறந்து கண்ணை மூடிக் கொண்டவளும் உடல் விதிர்த்தவளும்தான் பிராயச்ச்சித்தம் செய்ய வேண்டும், நீங்களும் நானும் அல்ல” என்றார்.
“தேவவிரதா, அழகிய இளைஞன் பூரிஸ்ரவசை அழைக்காமல் ஏன் சடை படிந்த முடியும் துர்நாற்றமும் கொண்ட வியாசனை அழைத்தோம் என்று நினைவிருக்கிறதா?”
“பூரிஸ்ரவஸ் வரும் வரை இவர்கள் உயிர் தரிக்க மாட்டா…” பீஷ்மரின் குரல் அடங்கிப் போனது.
“திருதராஷ்டிரனும் பாண்டுவும் பிறந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இவர்கள் ஒன்றும் இறந்துவிடவில்லையே?”
பீஷ்மரின் மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடின. அவர் மௌனமாகிவிட்டார்.
“நான் மீன்காரி என்பது நினைவிருக்கிறதா தேவவிரதா?”
பீஷ்மரின் உடல் நடுங்கியது. பக்கத்தில் இருந்த தூணைப் பிடித்துக் கொண்டு ஆசனத்தில் பொத்தென்று அமர்ந்தார்.
“புரூரவசும் யயாதியும் குருவும் அமர்ந்த அரியணையில் மீனின் வாசம் எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன் தேவவிரதா! நான் பட்ட அவமானங்களுக்கு, என் தந்தை பட்ட அவமானங்களுக்கு அதுவே சரியான பதிலாக இருக்கும் என்று நினைத்தேன். நீ அரணாக இல்லாவிட்டால் அரியணை என் மகன்களிடமிருந்து கவரப்படலாம் என்றுதான் பொறுமையாக இருந்தேன். ஆனால் சித்ரனும் விசித்ரனும் சந்ததி இல்லாமல் இறந்து போனார்கள். நியோகத்தை பூரிஸ்ரவஸ் நடத்தினால் இந்த அரியணையில் மீண்டும் சுத்த க்ஷத்ரிய ரத்தம் அமர்ந்துவிடும், மீன் வாசம் கரைந்தே போகும். அதனால்தான் நியோகத்தை என் மகன் வியாசன் மூலம் நடத்தினேன். கௌரவம், அந்தஸ்து, பரம்பரை என்று வார்த்தைக்கு வார்த்தை புலம்பும் நீ காலாகாலத்துக்கும் மீனவ ரத்தத்தைக் காவல் காத்துக் கொண்டு கிடக்க வேண்டியதுதான் தேவவிரதா!”
பீஷ்மரால் எதுவும் பேச முடியவில்லை. சத்யவதியையே வெறித்துப் பார்த்தார்.
“உன்னைப் பழி வாங்கும் முயற்சியில் பாவம் இந்த இரண்டு பெண்களின் வாழ்வும் நாசமாகிவிட்டது. அதனால்தான் அவர்களுக்கு சேவகம் செய்து கொஞ்சமாவது என் குற்ற உணர்ச்சியைக் குறைத்துக் கொள்கிறேன். எங்களைத் தடுக்காதே” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
பீஷ்மர் சத்யவதியைப் பார்த்தது அதுவே கடைசி முறை. அவரால் அதற்குப் பிறகு மீன் வாசனையைப் பொறுத்துக் கொள்ளவே முடியாமல் போனது என்று அவரது அரண்மனை சமையல்காரர்கள் சொல்வது உண்டு. திருதராஷ்டிரனின் ரத்தமான கௌரவர்களை விட பாண்டுவோடு ரத்த உறவு இல்லாத பாண்டவர்களே அவருக்குப் பிடித்தமானவர்கள் என்று பிற்காலத்தில் பாடிய சூதன் அரிமாரகன் கொல்லப்பட்டான் என்று ஹஸ்தினாபுரத்து சூதர்கள் பேசிக் கொள்வார்கள். அரிமாரகன் கொல்லப்பட்டது ஏன் என்று மகா அறிவாளியான விதுரனால் கூடப் புரிந்து கொள்ளமுடியவில்லை.