Home » சிறுகதைகள் » நளதமயந்தி பகுதி-18

நளதமயந்தி பகுதி-18

பின்பு தன் கணவனிடம், மகாராஜா! நமக்கு துன்பம் வந்தால் தெய்வத்திடம் முறையிடலாம். ஆனால், தெய்வமே நமக்கு துன்பம் தர முன்வந்துள்ள போது, அதை யாரிடத்தில் முறையிட முடியும்! ஆம்..இது நம் விதிப்பலன். நடப்பது நடக்கட்டும். வாருங்கள். இந்த இடத்தை விட்டு கிளம்புவோம், என்றாள். நளனும் கிளம்பினான்.

காட்டுப்பாதையில் அவர்கள் நீண்டதூரம் சென்றனர். மாலை நேரமானது. சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது. அந்தக் கரிய இருளில் தன்  மனைவியுடன் நடந்தான் நிடதநாட்டு மன்னன். தமயந்தியோ தடுமாறினாள். பேய்களுக்கு கூட கண் தெரியாத அளவுக்கு இருட்டு..எங்கே தங்குவது? நடுக்காட்டில் அங்குமிங்குமாய் முட்செடிகள் வேறு. பாதுகாப்பாக இருக்க இடமே கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஏதோ நல்வினையின் பலன் குறுக்கிட்டது போலும்! பாழடைந்து போன மண்டபம் ஒன்று நளனின் கண்களில் பட்டது.

தமயந்தி! வா! இந்த மண்டபத்தில் இன்றைய இரவுப்பொழுதைக் கழிப்போம், என்றாள்.தூண்களெல்லாம் இடிந்து எந்த நேரம் எது தலையில் விழுமோ என்றளவுக்கு இருந்த அந்த மண்டபத்தில் அவர்கள் தங்கினார்கள். நளன் சற்றே பழைய நினைவுகளை அசைபோட்டான். பளிங்கு மாமண்டபத்தில், பால் போல் ஒளி வீசும் வெண்கொற்றக்குடையின் கீழ் தமயந்தியுடன் கொலு வீற்றிருந்த கோலமென்ன! கொடிய சூதாட்டத்தால், இந்த இடிந்த மண்டபத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை வந்ததென்ன! அந்த மண்டபத்தின் தரைக்கற்கள் பெயர்ந்து மண்ணாகக் கிடந்தது. சற்று சாய்ந்தால் கற்கள் உடலில் குத்தியது. காட்டுக்கொசுக்கள் ஙொய் என்று இரைந்தபடியே அவர்களின் உடலில் கழித்தன.

தமயந்தி கலங்கிய கண்களுடன்,  நிடதநாட்டு சோலைகளில் வண்டுகளின் ரீங்காரம் செய்ய, அதைத் தாலாட்டாகக் கருதி உறங்கினீர்களே! அப்படிப்பட்ட புண்ணியம் செய்த உங்கள் காதுகள், இங்கே இந்த கொடிய கொசுக்களின் இரைச்சலில் உறங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதே! என்று கணவனிடம் சொன்னாள்.

நளன் அவளிடம்,கண்மணியே! கெண்டை மீன் போன்ற உன் கண்களில் இருந்து கண்ணீர் வழியலாமா? மனதைத் தேற்றிக்கொள்!  முன்வினைப் பயனை எல்லாருமே அனுபவித்தாக வேண்டும்! இப்பிறவியில் நாம் யாருக்கும் கேடு செய்யவில்லை. முற்பிறவிகளில் என்னென்ன பாவங்கள் செய்தோமோ! ஆனால், அதை உன்னையும் சேர்ந்து அனுபவிக்க வைத்துவிட்டேனே என்பது தான் கொடுமையிலும் கொடுமை, என்று வருத்தப்பட்டான் நளன்.

ஆண்கள் என்ன தான் தேறுதல் சொன்னாலும், பெண்கள் ஒன்றை இழந்துவிட்டால், அவர்களின் மனதை ஆற்றுவது என்பது உலகில் முடியாத காரியம். தமயந்தியின் நிலையும் அப்படித்தான்.

அன்பரே! வாசனை மலர்களால் ஆன படுக்கையில், காவலர்கள் வாயிலில் காத்து நிற்க படுத்திருப்பீர்களே! இங்கே, யார் நமக்கு காவல்! என்று புலம்பினாள். உடனே நளன், தமயந்தி! இழந்ததை எண்ணி வருந்துவது உடலுக்கும் மனதுக்கும் துன்பத்தையே தரும். இதோ பார்! இந்தக் காட்டிலுள்ள பூக்களும், செடிகளும், மரங்களும் தனித்து தூங்கவில்லையா? திசைகள் இருளில் மூழ்கி உறங்கவில்லையா? பேய்கள் கூட தூங்கிவிட்டன என்று தான் நினைக்கிறேன். எங்கும் நிசப்தமாயிருக்கிறது. இப்படி இரவும் பகலும் விழித்தால் உன் உடல்நிலை மோசமாகி விடும். உறங்கு கண்ணே! என் கைகளை மடக்கி வைக்கிறேன். அதைத் தலையணையாக்கிக் கொண்டு தூங்கு, என்றான். அவளும் கண்களில் வழிந்த நீர் அப்படியே காய்ந்து போக, தலைசாய்த்தாள்.  இருவருக்கும் தூக்கம் வரவில்லை. தன் அன்பு மனைவியின் அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

பாவம் செய்தவள் நீ! இல்லாவிட்டால் எனக்கு வாழ்க்கைப்பட்டிருப்பாயா! வீமராஜனின் மகளாகப் பிறந்து, நட்ட நடுகாட்டில், மண் தரையில் உறங்குகிறாய். உன்நிலை கண்டு என் உயிரும் உடலும் துடிக்கிறது. இந்தக் காட்சியைக் காணவா நான் உன்னைக் காதலித்தேன்! இப்படியொரு கொடிய வாழ்வைத் தரவா உன் கழுத்தில் தாலிக் கொடியைக் கட்டினேன்! என் இதயம் இப்படியே வெடித்து விட்டால் என்னைப் போல் மகிழ்பவர்கள் உலகில் இருக்க முடியாது! நான் இப்படியே மரணமடைந்து விடமாட்டேனா! என்று அழுதான்.

பெண்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  அழுவார்கள். ஆனால், கணவன் அழுதால் அவர்களால் தாங்க முடியாது.அன்பரே! தாங்கள் கண்ணீர் வடிக்குமளவு நான் தான் உங்களுக்கு கொடுமை செய்தேன்! அற்ப பறவை மீது கொண்ட ஆசையால், உங்கள் ஆடையை இழக்கச் செய்தேன்! என் முந்தானை உங்கள் ஆடையானதால், அதை விரித்து உங்களைப் படுக்க வைக்க இயலாமல் போனேன். இப்படி ஒரு கொடுமை இந்த உலகில் எந்த ஒரு பெண்ணுக்கும் வரக்கூடாது, என்று புலம்பித் தீர்த்தாள்.

இப்படி புலம்பியபடியே அவள் தன் கைகளை அவனுக்கு தலையணையாகக் கொடுத்து, கால்களை குறுக்கே நீட்டி, அதன் மேல் அவனது உடலைச் சாய்க்கச் சொல்லி, மண்டபத்து மணலும், கல்லும் அவன் முதுகில் குத்தாமல் இருக்க உதவினாள். ஒருவழியாக அவள் உறங்கத் தொடங்கினாள். இப்படி இவள் படும் பாட்டைக் கண்கொண்டு பார்க்க நளனால் முடியவில்லை. இவளை இங்கேயே விட்டுச்சென்று விட்டால் என்ன! இவள் காட்டில் படாதபாடு படுவாள் என்பது நிஜம்! ஆனாலும், அது நம் கண்களுக்குத் தெரியாதே! என்ன நடக்க வேண்டுமென அவளுக்கு விதி இருக்கிறதோ, அது நடக்கட்டும்! இவளை இப்படியே விட்டுவிட்டு கிளம்பி விடலாமா! நளனின் மனதில் சனீஸ்வரர் விஷ விதைகளை ஊன்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top