தமயந்தி நளனிடம், தாங்கள் செங்கோல் ஏந்தி முறை தவறாத ஆட்சி நடத்தினீர்கள். அப்படிப்பட்ட தர்மவானான உங்களிடம் ஒரு யோசனை சொல்கிறேன். இதையாவது, தயவு செய்து கேளுங்கள். நாம் காட்டு வழியில் வரும் போது, நம்முடன் ஒரு பிராமணர் சேர்ந்து கொண்டார் அல்லவா! அவருடன் நம் குழந்தைகளை அனுப்பி குண்டினபுரத்திலுள்ள எங்கள் தந்தை வீட்டில் சேர்க்கச் சொல்லிவிடுவோம். பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது என்பது தானே உங்கள் நோக்கம்! அது நிறைவேறி விடும்.
நான் உங்களைப் பின்தொடர்கிறேன். உங்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது, வாழவும் முடியாது. இந்த யோசனையை ஏற்பீர்களா? என்னைக் கைவிட்டு சென்று விடாதீர்கள், என தமயந்தி, கல்லும் கரையும் வண்ணம் அழுதாள். செல்லப்பெண்ணாய் இருந்து, காதலியாகி, மனைவியாகி மக்களையும் பெற்றுத்தந்த அந்த அபலையின் கதறல் நளனின் நெஞ்சை உருக்கியது.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<அதேநேரம், பிள்ளைகளைப் பிரிய வேண்டுமே என்ற எண்ணம் இதயத்தை மேலும் பிசைந்தது. தேவை தானா! இவ்வளவு கஷ்டங்களும். கெட்ட வழியில் செல்லும் ஒவ்வொரு ஆணும் நளனின் இந்த நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். சம்பாதிப்பதை விட, அதை நல்ல வழியில் கட்டிக் காக்கலாம். கெட்ட வழிகளில் செலவழித்து தானும் அழிந்து, குடும்பத்தையும் அழிப்பதை விட, இருப்பதில் பாதியை தர்மம் செய்திருந்தால் கூட புண்ணியம் கிடைத்திருக்கும். எதையுமே செய்யாமல், புட்கரன் உசுப்பிவிட்டான் என்பதற்காக அறிவிழந்த நளன் போல, எந்த ஆண்மகனும் நடந்து கொள்ளக்கூடாது. கெட்ட வழிகளில் ஈடுபடும்படி நம்மை வலியுறுத்தும் உறவுகள் மற்றும் நட்பிடமிருந்து விலகி நிற்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துச் சொல்கிறது. அதேநேரம், பெற்ற பிள்ளைகளைக் கூட ஒரு பெண் ஒதுக்கி வைக்கலாம். ஆனால், கட்டிய கணவனை எக்காரணம் கொண்டும், அவனது துன்பகாலத்தில் கைவிடவும் கூடாது. அவன் மனம் திருந்திய பிறகும், என்றோ செய்த தவறுகளை சுட்டிக்காட்டி அவனை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கவும் கூடாது.>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தமயந்தி தன் கணவனிடம்,ஏன் இப்படி செய்தீர்கள்? பகடைக்காயை தொடும்போது என் நினைவும், உங்கள் பிள்ளைகளின் நினைவும் இருந்ததா? என்று ஒருமுறை கூட கேட்டதில்லை. நல்லவனான அவனை விதி என்னும் கொடிய நோய் தாக்கியதாக நினைத்து, அவனது கஷ்டத்தில் பங்கேற்றாள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>இன்றைய தம்பதிகள், நளதமயந்தி போல் சிரமமான நேரங்களில் ஒருவருக்கொருவர் குத்திக்காட்டி சண்டை போடாமல், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க வேண்டும். இனியும் பழைய தவறைச் செய்யக்கூடாது என்று உறுதியெடுத்துக் கொள்ள வேண்டும்.<<<<<<<<<<<<<<<<<<<
நளனுக்கு இந்த யோசனை நல்லதாகப்பட்டது. ஒருவழியாய், பிள்ளைகளை தாத்தா வீட்டுக்கு அனுப்புவதென முடிவாயிற்று. ஆனால், புதுபூதம் ஒன்று கிளம்பியது.
தங்களை பெற்றோர் பிரிந்து செல்லப் போகிறார்கள் என்பதை அறிந்த பிள்ளைகள் அழ ஆரம்பித்து விட்டார்கள். அப்பா! எங்களைப் பிரியப் போகிறீர்களா! எங்களை தாத்தா வீட்டுக்கு அனுப்பி விடாதீர்கள். இனிமேல், நான் நடந்தே வருவேன். என் கால்களை முட்கள் குத்தி கிழித்தாலும் சரி. என்னைத் தூக்கச் சொல்லி உங்களிடம் நான் இனி சொல்லவே மாட்டேன். அமைதியாக உங்களைப் பின் தொடர்ந்து வருவேன், என்று கல்லும் கரைய அழுதாள் மகள்.
மகனோ அம்மாவைக் கட்டியணைத்துக் கொண்டு,அம்மா! உன்னிடம் நான் இனி உணவு கூட கேட்கமாட்டேன், பசித்தாலும் பொறுத்துக்கொள்வேன். நீ என்னைப் பிரிந்து விடாதே. என்னை உன்னோடு அழைத்துச்செல், எனக் கதறினான். அப்போது, அந்த காட்டில் இருந்த பூக்களில் இருந்து சிந்திய தேன், இவர்களது துயரம் கண்டு கண்ணீர் வடித்தது போல் இருந்ததாம்.
பிள்ளைகள் தங்கள் மீது கொண்டுள்ள பாசம் கண்டு கலங்கிய தமயந்தி வடித்த கண்ணீர், அவளது உடலில் அபிஷேக தீர்த்தம் போல் ஓடியது. பிள்ளைகளை மார்போடு அணைத்துக்கொண்டாள். என் அன்புச் செல்வங்களே! நீங்கள் இனியும் எங்களுடன் கஷ்டப்பட வேண்டாம். தாத்தா உங்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்வார். நாங்கள் விரைவில் அங்கு வந்துவிடுவோம். மீண்டும் வாழ்வோம் ஓர் குடும்பமாய், என்று ஆறுதல் மொழி சொல்லித் தேற்றினாள்.
அந்தணரை அழைத்த நளன், சுவாமி! தாங்கள் இவர்களை குண்டினபுரம் அரண்மனையில் சேர்த்து விடுங்கள். நாங்கள் மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம், என்றான். அவர்களது துயரநிலை கண்ட அந்தணரும், அதற்கு சம்மதித்தார். பிள்ளைகளுடன் குண்டினபுரம் கிளம்பிவிட்டார். நளனும், தமயந்தியும் கண்ணில் நீர் மறைக்க, தங்கள் குழந்தைகள் தங்கள் கண்ணில் இருந்து மறையும் தூரம் வரை அவர்களைப் பார்த்துக்கொண்டே நின்றனர்.
பின்னர், பிரிவு என்னும் பெரும் பாரம் நெஞ்சை அழுத்த, அதைச் சுமக்க முடியாமல் தள்ளாடியபடியே சென்றனர். அந்தக் கொடிய காட்டில் கள்ளிச்செடிகள் வளர்ந்து கிடந்த ஒரு பகுதி வந்தது. அந்த இடத்தைக் கடந்தாக வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது.
இந்த கொடிய காட்டை எப்படிக் கடப்பது என நளன் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், சனீஸ்வரர் இவர்களைப் பார்த்தார். ஆஹா! வசமாகச் சிக்கிக் கொண்டாயடா! வாழ்வில் ஒருமுறை தப்பு செய்தவனை நான் அவ்வளவு லேசில் விடமாட்டேன். தப்பு செய்தவர்கள் மீது எனக்கு இரக்கமே ஏற்படாது.. புரிகிறதா! பிள்ளைகளைப் பிரிந்தாய். உன் மனைவி என்னவோ புத்திசாலித்தனமாக உன்னைப் பின் தொடர்வதாக நினைக்கிறாள்! உன்னை மனைவியோடு வாழ விடுவேனா! இதோ வருகிறேன், என்றவர், தங்கநிறம் கொண்ட ஒரு பறவையாக மாறினார். வேகமாகப் பறந்து வந்து கள்ளிச்செடி ஒன்றின் மீது அமர்ந்தது அந்தப்பறவை.