ராகம்-நாட்டைக்குறிஞ்சி) தாளம்-ஆதி
பல்லவி
முருகா!-முருகா!-முருகா!
சரணங்கள்
1. வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
2. அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே!அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
3. சுருதிப் பொருளே,வருக!
துணிவே,கனலே,வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)
4. அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்!சரணம்,சரணம்
குமரா,பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே,சரணம்! (முருகா)
5. அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்!அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
6. குருவே!பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்!சரணம்! (முருகா)
3. வேலன் பாட்டு
ராகம்-புன்னாகவராளி தாளம்-திஸ்ர ஏகம்
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக்-கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன்-சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா! 1
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை-உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்
செல்வத்தை-என்றும்
கேடற்ற வாழ்வினை-இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன்-பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
மானைப்போல்-தினைத்
தோட்டத்திலேயொரு பெண்ணை
மணங்கொண்ட வேலவா! 2
ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப
மாகுதே;-கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக்-கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள்
வைரனிவ பெற்ற பெருங்கன
லே.வடி வேலவா! 3
4. கிளி விடு தூது
பல்லவி
சொல்ல வல்லாயோ?-கிளியே!
சொல்லநீ வல்லாயோ?-
அனுபல்லவி
வல்ல வேல்முரு கன்தனை-இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)
சரணங்கள்
1. தில்லை யம்பலத்தே-நடனம்
செய்யும் அமரர்பிரான்-அவன்
செல்வத் திருமகனை இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
2. அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே-அங்கோர்
முல்லைச் செடியதன்ப்ற்-செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)
3. பாலை வனத்திடைடே-தனைக் கைப்
பற்றி நடக்கையிலே-தன் கை
வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று (சொல்ல)
5. முருகன் பாட்டு
வீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றி
வேலும் மயிலும்என் முன்னின்றே-
எந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னை
நீலி பராசக்தி தண்ணருட்-கரை
ஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே;-மலை
வாரத் திலேவிளை யாடுவான்-என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான். 1
வேடர் கனியை விரும்பியே-தவ
வேடம் புனைந்து திரிகுவான்;-தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்;-சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட-இருட்
பார மலைகளைச் சீறுவான்;-மறை
யேடு தரித்த முதல்வனும்-குரு
என்றிட மெய்ப்புகழ் ஏறுவான். 2
தேவர் மகளை மணந்திடத்-தெற்குத்
தீவி லசுரனை மாய்த்திட்டான்;மக்கள்
யாவருக் குந்தலை யாயினான்;மறை
அர்த்த முணர்த்துநல் வாயினான்;தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான்;-இந்தப்
பாரிவ்ல அறமழை பெய்குவான்;-நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான். 3
தீவளர்த் தேபழ வேதியர்-நின்தன்
சேவகத் தின்புகழ் காட்டினார்;-ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையி னாலறம் நாட்டினார்!;-ஐய!
நீவள ருங்குரு வெற்பிலே-வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம்-வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான்-உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம்-நின்றன் 4
6. எமக்கு வேலை
தோகைமேல் உலவுங் கந்தன்
சுடர்க்கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவது எமக்கு வேலை.