Home » பாரதியார் » பாரத தேசம்!!!
பாரத தேசம்!!!

பாரத தேசம்!!!

ராகம்–புன்னாகவராளி

பல்லவி
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்

சரணங்கள்
1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)

2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்;
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத)

3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். (பாரத)

4. முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே,
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே (பாரத)

5. சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் (பாரத)

6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம் (பாரத)

7. காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர்தமக் கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் (பாரத)

8. பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும்
பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார்
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம். (பாரத)

9. ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

10. குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம்,
கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம். (பாரத)

11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்;
வானையளப் போம் கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம். (பாரத)

12. காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்;
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். (பாரத)

13. சாதி இரண்டொழிய வேறில்லையென் றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்;
நீதிநெறி யினின்று பிறர்க்குத வும்
நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர். (பாரத)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top