தந்தையின் மரணத்திற்குப் பின்னர் சுபாஷ் மீண்டும் வியன்னா பயணமானார். வியன்னாவில் நடைபெற்ற இந்திய மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு சுபாஷ் சிறப்புரை ஆற்றினார். பின்னர் ரோம் நகரில் நடைபெற்ற ஆசிய மாணவர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் சுபாஷ். அப்போது அந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய முசோலினியை சந்தித்துப் பேசினார். இந்திய சுதந்திரப் போரைப்பற்றி இருவரும் கலந்தாலோசித்தார்கள். ரோம் நகரிலிருந்து யூகோஸ்லாவியா நாட்டிற்குச் சென்று அங்கு சிலகாலம் தங்கினார்.
1935 ல் சுபாஷ் ஜெர்மனி நாட்டிற்குச் சென்றார். ஹிட்லரின் ஆட்சியில் தொழில்வளம் பெருகி இருந்ததைக் கண்டு சுபாஷ் பிரமித்தார்.
1926ல் சுபாஷ் வியன்னா நகரில் நுரையீரல் அறுவைசிகிச்சை செய்து கொண்டார். இந்த ஆண்டில் ஜவஹர்லால் நேரு அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஏப்ரல் மாதத்தில் லக்னோ நகரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நேருவின் தலைமையில் நடைபெற இருந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பிய சுபாஷ் வியன்னாவிலிருந்து இந்தியா திரும்ப விரும்பினார். ஆனால் இதற்கு பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட கூட்டு அறிக்கையை இராஜ தூரோகம் என்று பிரிட்டிஷ் அரசு குற்றம் சுமத்தியது. சுபாஷ் இந்தியாவிற்குள் காலடி வைத்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று அரசு அறிவித்தது. ஆயினும் எதற்கும் அஞ்சாத வங்கத்துச் சிங்கமான சுபாஷ் இந்தத் தடையை மீறி இந்தியாவிற்குள் காலடி எடுத்து வைக்க ஆயத்தமானார்.
மார்ச் 1936ல் சுபாஷ் இந்தியாவிற்கு புறப்பட்டார். ஏப்ரல் எட்டாம் தேதி பம்பாய் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த சுபாஷை போலீசார் கைது செய்தனர். அவரை பூனாவிற்கு அருகில் இருந்த எரவாடா என்ற இடத்தில் சிறை வைத்தனர். எரவாடா சிறையிலிருந்து சுபாஷ் லக்னோ நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாழ்த்துத் தந்தி அனுப்பிவைத்தார். அந்தத் தந்தியில் நமது கொடியை வானுயரப் பறக்கவிடுங்கள் என்ற வாசகத்தை முக்கியமாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த வாசகம் விழாவிற்கு வந்திருந்தோருக்கு படித்துக் காட்டப்பட்டது.
லக்னோ நகரில் அகில இந்திய காஸ்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நேரு, நேதாஜியை அகில இந்திய காங்கிரஸ் காரியக்கமிட்டியில் உறுப்பினராக நியமனம் செய்தார்.
10.05.1936 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் ஒன்று நடைபெற்றது. சுபாஷை விடுதலை செய்யும்படி பிரிட்டிஷ் அரசுக்கு வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடத்தப்பெற்றது. இந்த வேலை நிறுத்தம் மக்களின் அமோக ஆதரவினால் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. ஆனால் சுபாஷை அசாமில் உள்ள குர்சிபாங் என்ற இடத்திற்கு சிறைமாற்றம் செய்தார்கள். பின்னர் 17.12.1936ல் அங்கிருந்து கல்கத்தா சிறைக்கு மாற்றப்பட்டார். 345 நாட்கள் சிறை தண்டனைக்குப் பின்னர் 17.03.1937 அன்று சுபாஷ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்த காரணத்தினால் சுபாஷின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. சுபாஷிற்கு கட்டாய ஓய்வு தேவைப்பட்டது. எனவே சுபாஷ் இமயமலைப்பகுதியில் இருந்த தனது நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி சுமார் ஐந்து மாத காலம் ஓய்வெடுத்தார்.
1937 ல் இந்தியாவில் முதன் முதலாக சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு பெரிய வெற்றியினைப் பெற்றது. மாநில அளவில் சுயாட்சியை வழங்கினால் மட்டுமே மந்திரிசபை அமைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறிவிட்டனர். கடைசியில் பிரிட்டிஷ் அரசு இதற்கு ஒப்புக் கொண்டது.
18.11.1938 ல் சிகிச்சைக்காக ஆஸ்திரியா நாட்டிற்குச் சென்றார் சுபாஷ் பின்னர் அங்கிருந்து இலண்டன் நகருக்குச் சென்றார். இலண்டன் நகரில் பிரிட்டிஷ் எம்.பி க்களையும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்துப் பேசிய சுபாஷ் இந்திய விடுதலைப்போராட்டத்தில் அவர்களின் ஆதரவைக் கோரினார். இலண்டனுக்கு வருகை தந்திருந்த அயர்லாந்து ஜனாதிபதி ஏமன் டிவேலராவை சந்தித்து இந்திய விடுதலைப் போராட்டம் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினார்.