சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அய்யனார். முப்பது வயதான இவர் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
பொதுத்துறையைச் சேர்ந்த பொதுக் காப்பீடு நிறுவனம் ஒன்றில் அவர் விபத்து காப்பீடு் பாலிசி எடுத்திருந்தார். எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் ரூ.1.50 லட்சம் செலவு செய்தார் அய்யனார். பாலிசி எடுக்கும்போது இறப்பு அல்லது மருத்துவச் செலவுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என ஏஜென்ட் சொல்லி இருந்ததையடுத்து, இந்த மருத்துவச் செலவுத் தொகையைக் கேட்டு காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்தார்.
ஆனால் காப்பீட்டு நிறுவனம் க்ளெய்ம் தரவில்லை. அய்யனார் எடுத்திருப்பது விபத்து காப்பீடுதான். இதில் உயிரிழப்பு ஏற்பட்டால்தான் க்ளெய்ம் கிடைக்கும் என்று இன்ஷூரன்ஸ் நிறுவனம் தரப்பில் பதில் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அய்யனார் வழக்குத் தாக்கல் செய்தார்.
மருத்துவச் செலவுத் தொகையைத் தர வேண்டும். பாலிசி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு புரியாமல் இருந்ததால், தனக்கு கவரேஜ் பற்றித் தெரியவில்லை என்றும், அவற்றை வட்டார மொழியில் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அய்யனார் கோரினார்.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் முதன்மை அமர்வு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர்.
‘மனுதாரர் எந்த மொழி (ஆங்கிலம்) புரியவில்லை என்று கூறியிருந்தாரோ, அதே மொழியில்தான் கையெழுத்திட் டுள்ளார். மனுதாரர் செய்துள்ளது வாகனக் காப்பீடுதானே தவிர, மருத்துவக் காப்பீடு இல்லை. காப்பீடு நிபந்தனைகளை நீதிமன்றம் மாற்றாது. மொழி மாற்றம் கேட்டு காப்பீட்டு நிறுவனத்தை மனுதாரர் அணுக வில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினார்கள்.
இந்த வழக்கில் அய்யனாருக்காக வாதாடிய வக்கீல் வி.எஸ்.சுரேஷைச் சந்தித்தோம். ”ஒருவர் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறார் என்பதால், அவருக்கு ஆங்கிலத்தை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்ளும் திறமை இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. மேலும், காப்பீடு நிறுவனங்களின் நிபந்தனைகள் மிகச் சிறிய எழுத்தில் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இது கண்ணுக்குத் தெரிவதே பெரிய விஷயம். இந்த நிலையில், பாலிசியில் ஆங்கிலத்தில் இருக்கும் டெக்னிக்கல் விஷயங்களைச் சாதாரணமானவர் களால் எப்படி புரிந்துகொள்ள முடியும்?
பாலிசி விவரம் மாநில மொழியில் இல்லாததால், பாலிசியின் தன்மைகள் புரியாமல் எடுத்து ஏமாந்து போகிறவர் கள் அதிகம். இன்னும் அதிகமானவர் கள் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க மக்கள் நலன் கருதி, பாலிசி விவரங்கள் மற்றும் நிபந்தனைகளை மாநில மொழியில் இருப்பது அவசியம் என்பதால் மத்திய, மாநில அரசுகள், இன்ஷூரன்ஸ் மேம்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏ அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
நியாயமான கோரிக்கைதானே?