ஒரு வாரம் தொடர் தும்மல். பல வைத்தியங்கள் செய்து பார்த்தும் தும்மல் நிற்கவில்லை. டாக்டரிடம் போனால், பரிசோதித்துவிட்டு, ஏ.சி அலர்ஜினு ஒரு வாரம் நைட்டுக்கு மட்டும் போடுற மாத்திரை எழுதிக்கொடுத்தார். மாத்திரை போட்டு 10 நிமிசத்தில் தும்மல் நின்னுடுச்சு. ரெண்டு நாள் சாப்பிட்டும் தும்மல் வரலை. ஆனா வேற ஒண்ணு வந்துச்சு. அதாங்க கனவுல பேய், பிசாசு எல்லாம்.
தொடர்ந்து நான்காவது நாளும் இதே மாதிரி யாரோ என்னைக் கொலை செய்ய துரத்துற மாதிரி… இல்லைனா, நான் யாரையோ கொன்னுட்டு ஓடுற மாதிரி எல்லாமே டெரர் கனவுகளா இருக்கவும் மறுபடி டாக்டரிடம். “கனவுதானே அது ரொம்ப ரேர் சைடு எஃபெக்ட். எல்லோருக்கும் வராது. இனிமே பாஸிட்டிவ்வா நினைச்சுகிட்டு படுங்க’’ என்றார். “பாஸிட்டிவா நினைச்சுகிட்டு படுத்தா, கனவு வராதா டாக்டர்” என்றேன். “வரும், ஆனா உங்களை யாரும் துரத்த மாட்டாங்க. நீங்க யாரையாவது துரத்துவீங்க” என்றார்.
சில மருந்துகளின் விநோதமான பக்கவிளைவுகளைப் பார்ப்போம்.
மிராபெக்ஸ் (Mirapex) : வயதானவர்களுக்கு வரும் பார்க்கின்சன் பக்கவாத நோய்க்கான தடுப்பு மாத்திரை. இதைச் சாப்பிடும் சிலருக்கு சுவர்களில் பாம்புகள் ஏறுவது போலவும் பீரோவுக்குள் யாரோ ஒரு மனிதன் இருப்பது போலவும் தோன்றுமாம்.
ஸோல்பிடெம் (zolpidem) : இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை வியாதிக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரை இது. ரெகுலராக சாப்பிடும் சிலர் இரவில் எழுந்து நேராக கிச்சனுக்குப் போய் மிச்சம் மீதி இருக்கும் உணவுகளை ஃபுல் கட்டு கட்டிவிட்டு வந்து படுத்துவிடுவார்களாம். இன்னும் சிலரோ, பெட்ரூமில் நடந்ததையே மறந்துவிடுவார்களாம். ‘சேச்சே அது நானில்லை’ என்று சொல்லி மனைவியிடம் பூரிக்கட்டையால் அடிவாங்குவார்கள்.
லிபிடோர் (Lipitor): இந்த மாத்திரை ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ஸ்ட்ரோக் மற்றும் மாரடைப்பிலிருந்து பாதுகாக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இதைச் சாப்பிடும் சிலருக்கு இலவச இணைப்பாக ஷார்ட்டைம் அம்னீசியா ஏற்பட்டு மனைவியைப் பார்த்து ‘வாங்க வாங்க, எங்கே உங்க வீட்டுக்காரர் வரலையா?’ என்று கேட்டு திகிலைக் கிளப்புவார்களாம்.
ஆல்லி (Alli) : அமெரிக்காவின் மிகப்பெரிய பிரச்னையான உடல் பருமனுக்காக அந்த நாட்டு சுகாதாரத் துறையே பரிந்துரைக்கும் இந்த மாத்திரை 10-ல் 7 பேருக்கு ஒழுங்காகவும் 3 பேருக்கு ஓவராகவும் வேலை செய்துவிடுகிறதாம். வேறென்ன… அரை மணி நேரத்துக்கு ஒரு முறை டாய்லெட்டை நோக்கிப் பாய வேண்டுமாம்.
வயாகரா (viagra) : ஊரறிந்த கில்மா மாத்திரையாக அறியப்படும் வயாகரா உயிர்காக்கும் மருந்தும்கூட. இதயத்துடிப்பு குறைவானர்களுக்கு இந்த மாத்திரை நல்ல பலன் தருகிறதாம். இதை உட்கொள்ளும் சிலருக்குப் பக்கவிளைவாக நான்கைந்து மணி நேரம் எல்லாமே நீலமாகத் தெரியுமாம். வயாக்ராவைக் கண்டுபிடிச்சவங்க இந்த உலகத்துக்கு என்னவோ சொல்ல வர்றாங்க.
ஆனால் ஒன்று, இந்த மாத்திரைகளைச் சாப்பிடும் அனைவருக்குமே இந்தப் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே!