வாஷிங்டன்,
பாகிஸ்தான் நாட்டின் ராணுவ உதவிக்காக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா 100 கோடி அமெரிக்க டாலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிதியானது தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்காக பாகிஸ்தானின் மக்கள் மற்றும் ராணுவ நிதி உதவியாகவும், பொருளாதார மேம்பாடு, அணு நிலைப்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் உள்ளிட்ட பிற விசயங்களுக்கு பயன்படும். அமெரிக்க காங்கிரசுக்கு பட்ஜெட் ஒப்புதலுக்கான விவரங்களை ஒபாமா அனுப்பியதை அடுத்து மாநில துறை இதனை வெளியிட்டு உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் வெளிநாட்டு நிதியானது 42.2 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், 2016ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு 6 மடங்கு அதிகரித்து 265 மில்லியன் அமெரிக்க டாலராக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்பில், தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் ராணுவத்தை பலப்படுத்துவது, அணு நிலைகள் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தானில் நிலை தன்மை, பொருளாதார முன்னேற்றம் மற்றும் இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம் ஆகிய முக்கிய விசயங்கள் இடம் பெற்றுள்ளன.
ஒபாமா நிர்வாகமானது, பொருளாதார ஆதரவு நிதிக்காக 334.9 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் குறிப்பாக தீவிரவாத எதிர்ப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடுப்பு முயற்சிகளுக்காக 143.1 மில்லியன் அமெரிக்க டாலர் கூடுதாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட் பாகிஸ்தானில் கூட்டு திட்டங்கள் மற்றும் பொது விவகாரங்கள் ஆகியவற்றுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் சிக்கலான அமெரிக்க முக்கியத்துவம் பெற்ற விசயங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அதற்கான ஊழியர்களை பணியமர்த்துதல் ஆகியவற்றை குறித்ததாக இருக்கும் என மாநில துறை கூறியுள்ளது.
இந்நிதி பாகிஸ்தானின் மேற்கு எல்லை பகுதியில் நிலை தன்மையை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு அவசியமானது மற்றும் அதன் எல்லைகள் முழுவதும் நிலை தன்மையை உறுதி செய்வதற்கும் தேவையானது என அத்துறை விளக்கமளித்துள்ளது. வெளிநாட்டு ராணுவ நிதியானது அடையாளம் காணப்பட்ட 7 முக்கிய விசயங்களில் கவனம் செலுத்துவதுடன் அதற்கான பாகிஸ்தான் ஒப்புதலையும் பெற்றுள்ளது. இவ்விசயங்கள், குறிப்பிட்ட இடத்தை தாக்குதல், வான்வழி இயக்கம் மற்றும் தேடுதல் வேட்டை மற்றும் மீட்பு, சக்தி வாய்ந்த வெடிகுண்டை கட்டுப்படுத்துதல் மற்றும் போர் களத்தில் தப்பி செல்லுதல், போர்களத்தில் தொலைதொடர்புகள், இரவு வேட்டைகள், எல்லை பாதுகாப்பு மற்றும் கடற்பகுதி பாதுகாப்பு/போதை பொருட்களை கட்டுப்படுத்துதல் போன்ற தீவிரவாத எதிர்ப்பு நோக்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இருக்கும்.